Friday, December 1, 2017

குவளைக்குள் நான்!

வியந்து தவிக்கிறேன்
சுருங்கிப்போன
என் உலகத்தை கண்டு!
என் கைப்பேசியின்
உருவமில்லா பொத்தானை
அழுத்தி அழுத்தி
தேய்ந்து போவது
என் விரல் நுனியோடு
என் மனதும்!

என் பள்ளிப்பருவத்து தோழியோடு
கடிதத்தில் நீடித்த நட்பு
காணாமல் போனது
கைபேசி வந்தவுடன்..
அவளுக்கும் எனக்கும்
நேரமில்லை
கடிதம் எழுதவும் படிக்கவும்..
பின்னொருமுறை அவளிடம்
பேசியதான ஞாபகத்தோடு
தொலைந்துபோனது நட்பும்!

தொலைவிலிருந்து வரும்
பிறந்தநாள் வாழ்த்தட்டையை
எதிர்பார்த்து
தபால்காரருக்கு காத்திருந்த
நாட்களில் கற்றுக்கொண்ட
பொறுமையை இழக்கிறேன்..
இன்று ஒருமுறை அழைப்பை
ஏற்காவிடில் "தாங்கள் அழைத்த எண் தற்போது அணைத்து
வைக்கப்பட்டுள்ளது." என்று
கேட்கையில்...சேகரித்து வைத்த
கடிதங்களும்
பகிர்ந்து கொண்ட
பரிசுகளும்
வாதாடி மீட்குமே
கோபத்திலும் வெறுப்பிலும்
தொலைத்த உறவை..
இன்று அந்த மீட்பையும்
உருவமில்லா உணர்வில்லா
மேகத்தில் சேகரித்து
மறந்தும்போகிறோம் காணாது
இதற்கும் தேடுகிறேன்
நினைவூட்டல் அமைப்பை!என் இளம்பிராயத்து
நினைவுகளை என்
மனதில் பதிந்திருக்கிறேன்..
என் நண்பர்களோடு பேசி விளையாடிய
நாட்களை இன்று நினைவூட்டிக்கொள்ள!
தருணங்களை பதிவு செய்ய
அன்று என்னிடம் எந்த 
கேமராக்களும் இல்லை..
சேகரித்து வைக்க எந்த
மேகமும் இல்லை..
அதனாலே இன்றும்
நட்பும் அன்பும் என் மனதோடு!

அன்று பல கை மாறி 
மூட்டைக்குள் சிக்கி தவித்து 
கசங்கி கை சேரும்
அந்த வெற்று காகிதத்தில்
வெட்ட வெளிச்சமாய்
காட்டப்பட்ட உணர்வுகள்
இன்று குறுஞ்செய்தியில்
வெட்டப்பட்டு ஒட்டப்பட்டு
எத்தனை ஸ்மைலீக்கள் போட்டாலும் அவை
என் மனதை எட்டாது போகிற
ரகசியம் அறியேன் நான்!


முகமும் அறியாத
முகவரியும் அறியாத
முகபுத்தக நண்பர்களிடம்
முகமூடி அணிந்து..
என்னில் இல்லாத 
என்னை காண்பித்து..
அவர்கள் மனதில்
என் உருவம் பதிக்க பாடுபட்டு..
என்றோ ஒருநாள்
என் முகம் வெளிப்பட
மாயமாய் போன நட்பில்
வீணாய் போகுதே காலம்!

உறவுகளிடம் கொடுக்க மறந்த
என் விடுமுறை நாட்களை
இரவறியாது பகலறியாது
திருடிப்போகிறது
கைப்பேசி விளையாட்டுக்கள்!


நானும் குவளைக்குள் தான்
இருக்கிறேன்!
எல்லோரும் இருக்கும்
அதே இடத்தில்!
மாயைக்குள் தத்தளித்து
நிஜஉலகம் கண்டு ரசித்து
நெருங்கும்போதே
தினரிப்போகிறேன்
குவளைக்குள் இருப்பதை அறிந்து!

மாயமான கண்ணாடி சுவற்றை
உடைக்கையில் சிதறிய
உணர்வுகளை களைந்தெரிந்து
வேர்கொள்கிறேன் நிஜத்தில்!

Wednesday, November 22, 2017

களவு!


உயிர்தெழு என்று
என்னை விதையிட்ட
உன்னைக்காண
வேரூன்றி துளிர்க்கையில்
தாங்கிப்பிடித்தாள் அன்னை
கனவோடு களவுபோனது
ஈரமும்!

Sunday, November 19, 2017

முழுமையடையாய்!


அவளின்றி நீ முழுமையுமல்ல..
உன்னை விடுத்து  எதையும் செய்ய
அவளுக்கு விருப்பமுமில்லை..
உன் முழுமையில் பிரித்தெடுத்து
விதைக்கப்பட்டவளானதால்!

Friday, November 17, 2017

என் முதல் கவிதை!


தொலைந்து போன
என் கனவுகளை
தேடிப்பிடித்து சேகரித்து
சித்திர தேரில் பூட்டி
என் எண்ணங்களுக்குள்
வீதி உலா செல்கிறது
என் முதல் கவிதை!

Sunday, November 12, 2017

மாற்றத்திற்காக!

உறவுக்கும் உணர்வுக்குமான
யுத்தம் நீள்கிறது வாதங்களின்றி,
சிலநேரம் வாதிட
வார்தைகளின்றிபோகிறது
என்ன செய்வது?எண்ணங்களை வெளிப்படுத்த
கிடைக்காத சரியான வார்த்தை
காரணமாகிபோகிறது
பல நேரம் வாதத்திற்கும்
சில நேரம் பிரிவிற்கும்!

என் எண்ணங்களை சித்தரித்து,
என் உணர்வுகளுக்கு
உருவம் கொடுத்து,
என் கனவுகளையும்
அவர்களே செத்துக்குகிறார்கள்!

பாதையில் முட்களிட்டு
நான் தவறும்படி பதிவிருந்து
நான் விழுகையில் மகிழ்ந்து
மீள்கையில் மீண்டும் விழும்படி
என் பாதையை வகுக்கிறார்கள்
உனக்கு துணை நிற்கிறேன்
என்று சொல்லி!

நான் விழுகையிலும்
சந்தோஷித்தே மீள்கிறேன்
என்றாலும் பரிதாப அம்பெய்து
அதிலும் பெருமை கொள்கிறார்கள்!

நான் துணிகையில்
துணை நில்லாது,
நான் துவலுகையில்
துணிச்சலில்லை
என்று புறம் பேசியும்
திருப்தியடையார்கள்!என் முகவாடலுக்கு
கதை வசனம் எழுதி
அவர்களுடைய
அறியாமைக்கு தீனிபோட்டு
கவனிக்காதே போகிறார்கள்
என் நேர்மறையான எண்ணங்களை!

"உன் வாழ்க்கை புத்தகத்தில்
நீ தொலைத்த
பக்கங்களின் கூச்சல்
உன் வார்த்தைகளில்
தொனிக்கிறது" என்று சொல்லி
அலசுகிறார்கள்
திறக்கப்படாத என்
வாழ்க்கை புத்தகத்தின்
முத்திரை போடப்பட்ட பக்கங்களை!

என் வார்த்தைகளின் தொனி
என் இளைப்பாறல் அல்ல
மனிதமன மாற்றத்திற்காக!

Sunday, November 5, 2017

முகமூடியை கழட்டேனடா(டி)!

அணிகிறேன் முகமூடியை
உன் மனம் விழிக்காதிருக்கையில்
உன் உணர்வுகளுக்குள்
என் உணர்வு எட்டாதிருக்கையில்
நீ விழித்துணரும் வரை
கழட்டேனடா(டி) முகமூடியை!


முன்னொன்றும் பின்னொன்றும்
முகம் காட்டும் உன் முன்
இருந்துவிட்டு போகிறேன்
கோவக்காரியாய்!

உன்னை நீயே பலவீனமாய்
காண்கையில் ஏற்க இயலா
உன் இயலாமை முன்
இருந்துவிட்டு போகிறேன்
தகுதியற்றவளாய்
என் முகம் காட்டேன் நான்!


பலமானவள் என்றெண்ணி
தோழமையாய்
தலை சாய்க்கையில்
உனக்கு ஆறுதலுண்டென்றால்
என் முகம் காட்டேன் நான்!

தேடும்போது கரம் நீட்டாது
வீரம்காட்டும்
உன் ஆணவத்தின் முன்
என் உணர்வுகளுக்குள்
வேட்கை துளிர் எத்தனித்ததை
காட்ட என் முகமூடி கழட்டேனடா(டி)!

உன் விலா என் வித்தென்பதால்
உன் விரல் நீட்டலுக்கு
காரணமில்லாதிருந்தும்
விடை கேட்கும் உன் முன் 
என் நிஜமுகம் காட்டேன் நான்!

என் முகம் காண
நீ விரும்பாதிருக்கையில்
நானும் கழட்டேனடா(டி)
என் முகமூடியை
இருந்துவிட்டு போகிறேன்
வீம்புக்காரியாய்!


கொடுக்கப்பட்டதென்று 
என்னை கண்டதால்
எடுத்துக்கொள்ள
அதிகாரம் கொடேன் நான்,
தேடிக்கொள்ளப்பட்டதென்று
உணரும் வரை
கழட்டேனடா(டி) முகமூடியை!