Wednesday, December 28, 2011

அவளும் நானும்!


   ரசித்து நேசிப்பதற்கு இங்கு எத்தனையோ! வருடங்களாய் கற்றுக்கொண்டதை விட விநாடிகளில் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் அர்த்தங்கள் இங்கு எத்தனை?. என்னைப்பற்றிய பல விளக்கங்கள் அறிந்தேன் நானும் அவளிடம். கண்ணீரை கரைத்து மறைத்திடும் மழைச்சாரலுக்கு உரிமை கொண்டாடி கரைசலாய் கரைந்து போன கடந்த காலங்கள். ரத்தமும் சதையுமாய் என்றும் ஒட்டிக்கொண்டு என்னோடு மல்லுக்கட்டும் அவளது நினைவுகள் என் தனிமையில். அவள் அருகாமையிலோ வேண்டுமென்றே வேண்டாததை செய்து அவளிடம் திட்டுவாங்கவே காத்திருப்பேன்.

      
           நான் ரசித்ததை சொல்லித் தீர்த்துவிட என்னிடம் வார்த்தைகள் பற்றாக்குறை ஆகிறது. இங்கு போட்டிகளும் உண்டு பொறாமைகளும் உண்டு, நான் வேலை செய்யாதவரை அவள் போட்டி போடாதவள், நான் என் உரிமையை யாரிடமும் கொடுக்காதவரை அவள் பொறாமை இல்லாதவள்.என்னோடு ஆலோசனை செய்கிறாள் சிறு துரும்பை அசைப்பதற்க்கு கூட, நான் வேண்டாம் என்பதை வேண்டும் என்கிறாள்(எனது உணவுகளில்), நான் வேண்டும் என்பதை வேண்டாம் என்கிறாள்(செல்ல திட்டல்கள்). 
           தினமும் பரிமாறிக்கொள்ள நான் வார்த்தைகள் தேடியதில்லை, ஒவ்வொரு அசைவிலும் ஆசையாய் ஆயிரம் மொழிகள் எனக்காக மட்டும் சமர்ப்பிக்கிறாள்!அவள் ஆசுவாசப்படுத்திக்கொள்ள என் புன்னகையை காரணமாக்குகிறாள். அவள் நேசத்திற்கு என் முத்தங்களை சாட்ச்சியாக்குகிறாள். சளைக்காமல் தோழ்கள் உயர்த்துகிறாள் நான் தலை சாய்த்துட.

       
          சித்திரச் சிதறல்களாய் அவள் கைரேகைக்குள் கிறுக்கல்களாய் தொலைந்து போக ஆசை. அவள் கைபிடித்து நடைபழகிய காலம் இன்னும் கடந்து போகவில்லை என்பதை ஞ்யாபகபடுத்துகிறேன் இன்றும் அவள் கைபிடித்து கல்லூரி வாசலை கடக்கையில். 
                     இப்படி சிந்தாமல் சிதறாமல் சேகரித்த நினைவுகளை சித்திரத் தேரில் பூட்டி உலா வர ஆசை தான்! இதற்கு மேல் விவரிக்க வார்த்தைகளின்றி அனைத்து அர்த்தங்களையும் மூன்றே எழுத்துக்களில் அடைத்து முடித்துக்கொள்கிறேன். அவள் "அம்மா!".


Saturday, December 17, 2011

இன்னும் இருக்கிறார்கள்!

      இன்னும் இருக்கிறார்கள்! கலங்கும் விழிகளின் கண்ணீர் துடைத்திடும்  கரங்கள் கொண்டவர்கள், எதைஎதையோ தேடி தொலைந்து போகும் மனித உயிர்களின் மத்தியில் இதயத்தின் உணர்வுகளை கொஞ்சம் நேசிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். "தனக்கான வாழ்க்கை, தன் குடும்பம், தன் குழந்தைகள் என்று சுயநலமாய் வாழாமல் இந்த நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்று நம் தலைவர்கள் எப்படி போராடினார்கள்" என்று நாமே நினைக்கும் அளவுக்கு சுயநலமாய் போகிறது நம்மை சுற்றி இருக்கும் உலகம். 
   

  பல இடங்களில் பல நேரங்களில் மனித உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை இருப்பினும் அதை எதிர்த்து நேசிப்பவர்களும் இருக்கிறார்கள். முதியோர்களுக்கு, பெண்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கு என தனித் தனி இருக்கைகள் பேருதுகளில் அறிமுகப்படுத்திய காலத்திலாவது அவை அரங்கேறியதா என்று எனக்குத் தெரியாது! ஆனால் இன்று எத்தகைய நீண்ட பயணமானாலும் முதியவர்களோ, இயலாதவர்களோ, கர்பினிப்பெண்களோ பேருந்தில் இடம் இல்லாமல் நின்றிருந்தால் இரக்கமே இன்றி பார்த்தும் பார்க்காமல் பார்வையை ஒதுக்கும் சுயநலமானவர்களுக்கு மத்தியில் தன் இருக்கையில் அமரச்சொல்லும் என் மனித இனத்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
      குழந்தைகளை ஆதரவற்றவர்களாய் விட்டுச் செல்லும் பெற்றோர்களும், பெற்றோர்களை பார்த்துக்கொள்ள மனமின்றி முதியோர் இல்லத்தில் விட்டுச் செல்லும் உணர்வுகள் இருகிப்போன இல்லாதவர்களும் வாழும் சுயநல உள்ளங்களுக்கு மத்தியில் எங்கு சென்றாலும், எப்படி இருந்தாலும் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட காத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.
   "எங்கேயோ ஒரு பேருந்து விபத்துக்கு உள்ளாகிவிட்டதாம்" என நாம் கேட்டறிந்த ஒரு செய்தி நடந்தேறிய பொழுது சிக்கிக் கொண்ட உயிர்களை மீட்க அங்கு என்னவர்கள் சிலர் இருந்திருப்பார்கள். சம்பந்தமே இல்லாத போதும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க இன்னும் சிலர் இருக்கிறார்கள்.ஒருமுறை விபத்துக்குள்ளாகிய பள்ளிப்பேருந்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகளை காப்பாற்றப் போராடி தன்னுயிர் நீத்த ஆசிரியரும் இருந்திருக்கிறார் இங்கு நம்மோடு.
        அப்படி நடக்கும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை முதலுதவி கொடுத்து காப்பாற்ற நினைக்கும் மருத்துவர்களும் விபத்துக்கான காரணம் என்ன என்று அலசி அதை தடுத்து நிறுத்தப் போராடும் என் சில வழக்கறிஞர்களும் இன்னும் இங்கு இருக்கிறார்கள். நம் பகுதியில் நாம் காணும் சில ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்களை கண்டும் காணாமல் போகும் நல்லவர்கள் மத்தியில் அவர்களின் வாழ்க்கைக்கு வழி காட்ட சில தன்னார்வ நிறுவனங்களும் உதவிக்கரங்கள் நீட்டுகிறார்கள்.

   
         உருவமற்று கிடக்கும் உணர்வுகளுக்கு உயிர்கொடுத்து நேசிக்க சிலர் இன்னும் இந்த பூமியில் இருக்கிறார்கள். தொட்டு வந்த கருவறைக்கும் தேடிப்போகும் கல்லரைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட இந்த ஒற்றை வாழ்க்கையில் 'நான் நான்" என்று சுயநலத்தை கட்டிக்கொண்டு இனவேற்றுமை, மொழிவேற்றுமையை கடந்து நிற வேற்றுமையை சிதறிவிட்டு மனிதக்குருதியில் ருசிகண்டு இன்று எதைத் தேடி நாம் இங்கு நம்மவர்களை நேசிக்க மறந்து போகிறோம்.
      பத்துயிர் எடுக்க ஒருவன் துனிந்திருந்தால் அதில் ஒற்றை உயிரையாவது காப்பாற்ற என்னவர்களில் ஒருவராவது உதவிக்கரம் நீட்டும் வரை உயிர்வாழும் இந்த பூமியில் ஒரு சிரு இறகாய் நான்!

Saturday, December 10, 2011

மழை நேரம்!Rainy Season Scraps, glitter, and pictures
GoodLightscraps.com


துவங்கிவிட்ட மாலை நேரத்து சோர்வு
களைந்தெறிய சிறு குதூகளம் ஏங்கி தவித்திருக்க
கார்மேகம் நெருங்கி நெருங்கி
கண்ணீர் தளும்பத் தளும்பத் தடுமாறும்
வான்மேக வண்ணம் கலைத்திட
மண்ணிங்கு ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் 
மழைச்சாரலோடு!


விடுப்பு எடுத்துக்கொண்டு
எங்கேயோ பார்வைக்கு எட்டாமல்
மறைந்து போன வெந்நிலவும்
விண்மீன் கூட்டமும் மட்டுமே
இன்றைய இழப்புகளாய்!


மண்வாசனையை தத்தெடுத்து
மழைத்துளி முத்தங்களோடு
காதோரம் கிசுகிசுக்கும் தென்றல்
சில்லென்று சிலிர்த்துவிட்டு போவதும்!


வெளியில் பார்த்து ரசித்த
மழையை சேகரித்து வீட்டுக்குள்
சிதறிவிட்டு போகும் 
விட்டத்து துளைகள்!


"நான் இங்கு நீ எங்கு" என்று
சொல்லாமல் சொல்லி
கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும்
தவளையின் சத்தமும்!


சிலாகித்து ஆட 
ஆசையை தூண்டும் 
மயிலின் ஆட்டமும்!


வெளுத்துக்கிடக்கும் விண்ணுக்கு
மழை தத்துக்கொடுத்துவிட்டுப்போகும்
வானவில்!


குதூகளம் ஒட்டிக்கொள்ள
இவற்றை ரசித்திடாமல் எப்படி
விலகி நிற்பது!

Monday, November 28, 2011

தெரிந்ததும் தெரியாததும்!

               நம் கடந்த காலங்களை மீட்க ஒரு ரீவைண்ட் பட்டனும், வேண்டாத நினைவுகளை அழிக்க டெலீட் பட்டனும், வேண்டிய ஒன்றை ஒரு சொடக்கில் கையருகே கொண்டு வர கூகுலும் நம் எதார்த்த வாழ்வில் இருந்தால் எப்படி இருக்கும் என நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும் நினைக்க வைக்கும் அளவுக்கு இயந்திர உலகத்தில் நாம் இருக்கிறோம்.


               முன்பெல்லாம் எப்பவும் புத்தகத்தில் மூழ்கி படிக்கும் குழந்தைகள் கொஞ்சம் பக்கத்து வீட்டில் இருக்கும் மத்த பசங்களோடு கிரிகெட் விழையாடுவது, நன்பர்கள் வீட்டிற்கு செல்வது, அரட்டை அடிப்பது என்பதெல்லாம் தான் அவர்களது பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இன்றோ பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரிந்து கொள்ள விரும்புவதில்லை பல அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருக்கும் இல்லத்தரசிகள். இல்லத்தரசிகள் என்ற வார்த்தை கூட மறைந்து கொண்டே போகிறது. குழந்தைகளோ படிப்பதே கணினி முன் தான் (இன்டர்நெட்) இதில் பொழுது போக்கோ அதே கிரிகெட் தான் ஆனால் நன்பர்களோடு அல்ல கணினியோடு, நன்பர்கள் வீட்டிற்கும் செல்கிறார்கள் வீடியோ சாட்டில், அரட்டையும் அடிக்கிறார்கள் பேஸ் புக் மூலம் இப்படி எந்நேரமும் கணினியோடு முட்டி மோதும் குழந்தைகளுக்கு மற்றவர்களோடு பேசி பழகும் வாய்ப்புகள் மிகக்குறைவு. இதிலும் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகிறவர்களாக இருந்து விட்டால் அவ்வளவு தான் அந்த குழந்தைகளின் உள் உணர்வுகளுக்கு எத்தகைய மதிப்பு கொடுக்கப்படும்.பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தையாக இருந்தால் முழுநேரமும் ஆயாவிடம். அம்மா இருக்கும் நேரம் அப்பா இருப்பதில்லை. அப்பா இருக்கும் நேரம் அம்மா இருப்பதில்லை. 
           
 முன்பெல்லாம் குழந்தைகளுக்கு நல்லது கெட்டது சொல்லி கொடுக்க வீட்டில் பெரியவர்களும் இருந்தார்கள் பெற்றோர்களுக்கும் குழந்தைகளோடு செலவழிக்க கொஞ்சம் நேரமும் இருந்தது. இன்றோ வீட்டில் பெரியவர்களும் இல்லை பெற்றோர்களுக்கு நேரமும் இல்லை. பல குழந்தைகள் தங்கள் பாட்டி தாத்தாவிடம் வீடியோ சாட் மூலமாக பேசுவதும் கூட வழக்கமாகி விட்டது. 
              பக்கத்து வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் நமது வீட்டிலிருந்து நடக்கும் நல விசாரிப்புகளும் உபசரிப்புகளும் கூட முற்றிலும் குறைந்து இன்று நம் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளவே சில நாட்கள் தேவைப்படுகிறது. 
             "என் பையன் வெளி நாட்ல இருக்கான் கை நிறைய சம்பாரிக்கிறான் வாரா வாரம் எங்க கூட கம்பியூட்டர் ல பேசுவான்" என்று சொல்கிற பெற்றோர்களுக்குள்ளும் தன் மகனை பிரிந்திருக்கும் வேதனையும் ஏக்கமும் இருக்கும்.அப்படி வேலை செய்து அங்கேயே குடும்பதோடு வாழும் பலருக்கு தன் பெற்றோர்களோடு செலவழிக்க சில விநாடிகள் இல்லை. என் மகளுக்கு (அல்லது மகனுக்கு) குழந்தை பிறந்திருக்குன்னு அந்நியமா யாரோ ஒருதரா போனில் கேட்டுத் தெரிந்து கொள்வது சாதாரனமாகிவிட்டது. குழந்தையை கவனித்துக்கொள்வது எப்படி என்று அம்மாவிடம் கேட்டுத் தெரிந்த காலம் போய் இன்டர் நெட்டில் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். 


            எந்திரனின் சிட்டிக்கு என்னதான் மனித உணர்வுகள் ஊட்டப்பட்டாலும் அத்தகைய ரோபோக்கள் வெரும் இயந்திரமே அவற்றிர்க்கு அன்பின் அர்த்தம் தேவையில்லை ஆனால் அன்பு, அக்கரை, அரவணைப்பின் அருகாமை இன்றி நாம் வாழும் வாழ்க்கை மட்டுமல்ல நாமும் வெரும் பணம் சம்பாதிக்கும் ரோபோக்கள் தான்.

Monday, October 3, 2011

இல்லை!


         மிகவும் பழக்கப்பட்ட வார்த்தையே! தினம் எத்தனை முறை நாம் இதை உபயோகிக்கிறோம்! எத்தனை இடங்களில்! முதல்ல வீட்டுல காலேஜுக்கு கிளம்பையில அம்மா சொல்லுவாங்க சாப்பிட்டு போன்னு அங்க ஆரம்பிக்கிறது "இல்லை" ங்கிற வார்த்தை.அப்பா கேட்பாரு "பரிட்ச்சைக்கு படிச்சியா? " ன்னு.அதுக்கும் ஒரு "இல்லை"ய போட்டுட்டு. காலேஜுக்கு வந்தா அங்கயும் வரும் " டே மச்சான்! படுச்சிடயா டா? " மனசாட்ச்சியே இல்லாம இந்த கேள்வி அந்த பரிட்ச்ச முடியற வரைக்கும் வருங்க. முடிஞ்சதுக்கு அப்புறமும் "நல்லா பண்ணுனியா?" ," பாஸ் பன்னிருவியா? " எல்லாத்துக்கும் ஒரு "இல்லை".
              ஆனால் நான் இந்த "இல்லை" ய பத்தி பேச வரல! பல இடங்கள்ள "இல்லை" ங்கிற வார்த்தையோட வலிமை மாறிப்போகுது! நாம சொல்லற "இல்லை" ய விட கேட்கிற "இல்லை" க்கு வலி அதிகம். மத்தவங்க நம்ம கிட்ட ஏதாவது உதவி கேட்கும் போது நாம "இல்லை" சொல்லும் போது இருக்கற வலிய("இல்லை" சொல்றதுக்கு எதுக்கு வலிக்குது!) விட நாம ஒருத்தர் கிட்ட உதவி கேட்கும் போது அவங்க சொல்ற "இல்லை" ய கேட்கிற வலி அதிகம்! அது அவங்கவங்க இருக்கிற சூழ்நிலயப் பொருத்தது!  அதுக்காக பரிட்ச்சையில  நண்பன் பிட்டு பேப்பர் காட்டலேன்னு "இல்லை" ன்னு  சொல்லிட்டான்னு வருத்தப்படறது ரொம்ப அதிகங்க! 
               நான் சொல்ற "இல்லை" பிஞ்சு குழந்தைகள் பசியில் பேருந்து நிலையங்களிலும், பொது இடங்களிலும் கை ஏந்தும் போதும் நான் சொல்லும் "இல்லை".தவறான வழியில் உடல் ஊனம், வேறு மாநிலம்,குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள், சுனாமியில் குடும்பத்தை இழந்தவர்கள் என எத்தனை பொய்க்காரணங்கள் (உண்மையாகவும் இருக்கலாம்) சொன்னாலும். மூன்று வேலை சாப்பாட்டிற்காக தான் அவர்கள் பொய் சொல்ல நேருகிறது என்பதை நம் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது! அவர்கள் பொய் சொல்கிறார்கள் "இப்படி தான் எப்பப்பாரு வேற வேலையே இல்லை" ன்னு குறை கூறுகிறது நம் இதழ்கள்! பிஞ்சு விரல்களை பொய் சொல்லி பிச்சை கேட்கும் படி தூண்டிடும் அவர்களது உறவுகள்(உறவுகளா என்பதே சில நேரம் சந்தேகம்). 

        
     இந்த மாதிரி குழந்தைகளை காணும் பலருக்கு அவர்களை இந்த சூழ்நிலையில் இருந்து மீட்க்கதோனும். சிலருக்கு அருவருப்பான விஷயம், சிலருக்கு தேவையில்லாத வேலை,அவர்கள் யாசகர்கலாய் வளர்க்கப்படுகிரார்களே தவிர பிறக்கப்படுவதில்லை. பாதுகாப்பில்லாத பெண் குழந்தைகள்! இப்பொழுது ஆண் குழந்தைகளும் மிக அதிக அளவில்!             
       இந்தியாவில் மட்டும் பாதுகாபில்லாத குழந்தைகள் 11 மில்லியன். நம்ம டெல்லி ல மட்டும் 1,00 ,௦௦௦ பேரு. இதுல 54 சதவிகிதம் ஆண் குழந்தைகள், 45 சதவிகிதம் பெண் குழந்தைகள். பெண் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை பல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.ஆண்களுக்கும் தான் ஆண் குழந்தைகளில் எழில் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது!


          அவர்களுக்கு எங்கும் பாதுகாப்பு  "இல்லை". நடப்பவை என்ன என்று அறியும் வயது அடையும் முன்னே வாழ்க்கையை இழந்து தவிக்கும் பல குழந்தைகள்! உறவினர்களாலே தவறான வழிகளுக்கு திருப்பப்படும் குழந்தைகளுக்கு வாழும் வாழ்க்கை "இல்லை". நாம் ஏலனப்பார்வையை வீசும் அந்த குழந்தைகளின் வாழ்க்கையில் எத்தனை சலனங்களோ!அங்கு "இல்லை " என்ற வார்த்தை உருவம் கொண்டு உயிராய்!

    
    வல்லரசை நோக்கி பயணிக்கும் நம் நாட்டின் பலர் அறியாத மறு பக்கம் அதில் சிக்கித் தவிக்கும் பிஞ்சு இதயங்கள்! துளிர்விட்டு வளரும் முன்னே கசக்கி எறியப்படுவது இங்கு பலர் அறியாத உண்மை! எப்படி செல்கிறது நம் நாடு வல்லரசை நோக்கி!

Saturday, September 17, 2011

இழப்புகள்!

           இழப்புகள் என்ற வார்த்தையே ஒரு நிமிஷம் நாம இழந்தத ஏக்கங்களா கருவிழியில  கொண்டு வந்து நிறுத்தும்.  பலருக்கும் அப்படித்தான்! எனக்கும்!
           காசு பணம் நிரஞ்ச வீடு, கை நிறைய சம்பாரிக்கிற அப்பா, அன்பான அம்மா, ஆசைப்படற எல்லாமே நினைச்சவுடனே கிடைக்கிற சராசரி வாழ்க்கை வாழறவங்களுக்கு மத்தியில அம்மா அப்பாங்கிற வார்த்தைகளோட அர்த்தம் தெரியாம வாழற குழந்தைகளோட இழப்புகள் ரொம்ப வலியது. ஆண்குழந்தையோ இல்ல பெண்குழந்தையோ வாழ ஆசைப்படற வாழ்க்கை எல்லா மனசுக்கும் ஒன்னு தான.

Add caption
            இந்த மாதிரி சூழ்நிலையில வளர்ற குழந்தைங்களோட இழப்புகள் எத்தனை எத்தனை? முழுமையான பாதுகாப்பு, அன்பு, அக்கறை ன்னு எல்லாமே அவங்க வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாம போகும்போது அவங்க மனநிலை எப்படி இருக்கும்.
            ஆதரவற்றவர்கள் இல்லத்துல விடப்படற குழந்தைகளுக்கு பலரோட உதவில அவங்களோட தினசரி தேவைகள் பூர்த்தி ஆனாலும் அவங்க மத்த சராசரி குழந்தைகளோட( ஸ்கூல வெளியில ன்னு )  பழக நேரிடும் போது அவங்க அனுபவிக்கிற வலி. "ஏன் எனக்கு மட்டும் அப்பா இல்ல அம்மா இல்ல?" ங்கிற அவங்களோட கேள்வி இந்த ஆயுசுக்கும் அவங்க மனச உறுத்திக்கிட்டே தான இருக்கும்.
            அவங்களுக்கு தேவையானது எல்லாமே இருந்தாலும் அவங்க மனசு அதுல என்னைக்குமே நிறைவடையாது. நமக்கு தெரிஞ்சு நாம வாழற இந்த ஒரு வாழ்க்கையில அன்புங்கிற வார்த்தையோட அர்த்தம் முழுசா தொலைஞ்சு போகும் போது அதோட வலியும் ரொம்ப அதிகம் வலிமையையும் ரொம்ப அதிகம்.
                நான் பார்த்த ஆதரவற்றவர்கள் இல்லத்துல 175 பேரு இருந்தாங்க. அங்க அஞ்சு வருஷ குழந்தையில இருந்து மரணத்த நோக்கி பயணிக்கிற வயசானவங்க வரைக்கும் இருக்காங்க. அவங்கள கவனிக்கிறதுக்கு தனி ஆள் எல்லாம் கிடையாது. அங்க இருக்கறவங்களே தான் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருக்கறாங்க. குழந்தைகள பார்த்துக்கிற பெரியவங்க, உடம்பு  முடியாத வயசானவங்கள பார்த்துக்கிற இளசுங்க ன்னு எல்லாத்தையும் அவங்களே பார்த்துக்கறாங்க.


              அங்க இருக்கிற குழந்தைங்க பக்கத்துல இருக்கிற சில ஸ்கூல்லயே அந்த அந்த நிறுவனத்தோட பொறுப்புள படிக்கிறாங்க. என்னதான் அங்க எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா துணையா இருந்தாலும் வெளி உலகத்துல மத்த சராசரி குழந்தைகள பார்த்து வளருகிற அந்த குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கும் அவங்களுக்குள்ள எத்தனை ஏக்கங்கள் இருக்கும். 
              அங்க ரொம்ப நேரம் இருக்கறதுக்கோ அவங்களோட பேசறதுக்கோ எனக்கு வாய்ப்பு கிடைக்கல, ஆனால் அங்க இருந்த பத்து நிமிஷத்துல நான் பார்த்த ரெண்டு குழந்தைங்க கிட்ட நான் கேட்ட கேள்வி " ஏன் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலயா?" அதுக்கு அவங்க சொன்ன பதில் "இன்னைக்கு ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங் அதனால எங்க மிஸ் எங்களுக்கு லீவ் விட்டுட்டாங்க". அந்த பதிலில் தான் எத்தனை ஏக்கங்கள் இருந்திருக்குமோ?
              வளர வளர அவங்க இந்த இழப்பை ஏத்துக்கிட்டாலும் அவங்க மனசுல ஏதாவது ஒரு ஓரத்துல அந்த வலி இருந்துகிட்டே தான் இருக்கும்.

           
         

Thursday, September 8, 2011

இளம் தொழில் அதிபர்கள்!

இந்த தலைப்பை பார்த்ததும் ஏதோ பெரிய பெரிய சாதனைகளை படைத்த தொழில் புலிகளை பத்தி எழுதப்போறேன்னு நினைக்காதீங்க. இங்க நான் சொல்ல வர்றது என்னன்னா நான் பார்த்த வளரும் இளம் தொழில் அதிபர்களை பத்தி! அப்படி ஒன்னும் ரொம்ப இளமை இல்லேங்க வெறும் 13 வயசு தான் இருக்கும். எப்படி பேசி கஸ்டமர்ஸ் அ புடிக்கராங்கறீங்க.

நான் தினமும் கடந்து போகிற சாலை பக்கத்தில் ஸ்கூல், பஸ் ஸ்டாப் இருப்பதால் எப்போதும் நிறைந்தே காணப்படும்! இன்று எப்போதும் போல பஸுக்காக காத்திருந்த போது நான் பார்த்த அந்த நாலு பேரு. அதாங்க அந்த வளரும் இளம் தொழில் அதிபர்கள் சராசரியா என் கணக்குப்படி அவங்க இப்போ எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு தான் படிக்கணும். அனால் அவங்க பேச்சு "டேய் மச்சான் இதுல எந்த பிரச்சனையும் இல்லடா மாசத்துல நாளே பத்து பத்து ரூப கட்டுனா போதும் தீபாவளி அப்ப நான் உனக்கு நூறு ரூபா தரேன்".


டீலிங்  நல்லா இருக்கில்ல எப்படீன்னு பார்க்கறீங்களா. என்ன கேட்காதீங்க அவன் சொன்னத கேளுங்க விளக்கமா சொல்றான்."இதுல என்னடா இருக்கு நீ எதுக்கு பயப்படற! உங்க அம்மா தினம் 2 ரூபா தராங்கள்ள நீ சைக்கிள்ல தான வர்ற அதனால அந்த காச அப்படியே சேர்த்து வச்சு வாரம் பத்து ரூபா எனக்கு கொடு. மாசத்துக்கு நாலு தடவ. 40 ரூபா ரெண்டு மாசம் இப்படி கொடுத்தா எவ்வளவு ஆச்சு 80 ரூபா. தீபாவளி வரும் போது நான் உனக்கு 100 ரூபா தருவேன்.தீபாவளிக்கு காசு சேத்தி நம்ம இஷ்டப்பட்டதை வாங்கிக்கலாம்."

அவன் கூறியதற்கு ஒரு நல்லவன் கேட்கிறான் "ஏன்டா எங்க கிட்ட 80 ரூபா வாங்கிட்டு 100 ரூபா தரேன்கறியே இதுல உனக்கு 20 ரூபா போகுதே டா." அதுக்கும் இங்கே பதில் உண்டு "அப்படி இல்லடா இதுல எனக்கும் லாபம் உண்டு" என அவன் ஒரு புது கணக்கு சொல்ல இதை நேராய் கேட்ட மற்றவனுக்கும் விளங்கவில்லை ஒட்டு கேட்ட எனக்கும் விளங்கவில்லை.பிறகு வார கூட்டமைப்பு இடம் முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது.

இதை பார்த்தும் கேட்டும் விட்ட என் இதயத்தில் ஒரு சிறு கேள்வி எழுந்தது " இளைஞர்களின் துணை தேடி வல்லரசை நோக்கி பயணிக்கும் நம் நாட்டை பற்றி!"


Wednesday, September 7, 2011

சித்திரச் சிதறல்கள்!


இரவுகள் நீண்டுபோகக்கூடாதா
என சலுப்போடு விடியலில் 
விழிக்கும் விழிகள்!

விழித்துவிட்டதாலோ என்னவோ 
விரைவாக விரையமாகிக்கொண்டிருக்கும் 
காலத்தோடு சிறு ஓட்டம் 
சலசலப்பும் வேலையுமாய் 
முடித்துவிட்டு திரும்பினால்
நேரத்தை காட்டி விரட்டும் 
கடிகாரம்!

நொடிகள் கொஞ்சம் நீளக்கூடாதா 
என தவித்தே ஓடும் பாதங்கள்
பள்ளிக்கு, மணி ஓசையை நோக்கி!படபடக்கும் இதயத்துடிப்பும் 
சலனமின்றி மௌனித்துப்போகும்,
வண்ணத்துபூச்சிகளாய், 
சிறகுகள் முளைத்தது போல்
துள்ளி ஓடும் பாதங்களை
காணும் போது!

இருக்கங்கள் கூட
இலகிப்போகும் அவர்களின் 
மழலை மொழியில்!

அங்கு எனது வேலையோ 
பிஞ்சு விரல்கள் சிதறும் 
சித்திரங்களை சீர்திரித்தும் வேலை!

சிறகுகளை சிலிர்த்துக்கொண்டு 
சில்வண்டுகள் சுற்றுவதாய்
எந்நேரமும் துருதுருவென 
சுற்றும் பாதங்கள்
நம்மையும் சிறகுகள் கொண்டு 
பறக்க தூண்டுமே!செல்ல சண்டைகளும் 
அனாவசிய புகார்களும் 
கோபப்படுத்தாமல் மாறாய் புன்னகையை
தத்துக்கொடுத்துவிட்டு போகும்
ஆச்சரியமும் நடக்கும் இங்கே!

வெறுமையும் வெறுப்பும் 
மண்டியிட்டு மரணித்துப்போகும்,
படபடக்கும் இமைகள் பேசும் மொழியிலும்,
கள்ளமில்லா இதயத்தின் 
இதழோரப் புன்னகையிலும்!

பிரம்புகளும் கண்ணீர் வடிக்கும் 
பிஞ்சு கரங்களை காயப்படுத்தியதற்கு!
தனிமையில் தவித்து 
நித்தமும் சாகும், 
மரபெஞ்சுகளும், 
ஊமையான பள்ளிக்கூடத்து மரங்களும்,
விடுமுறை தினங்களில்!அவர்களின் அனாவசிய கேள்விகளும்
அதிசயமாய் தோன்றும் பல சமயம்!
சில சமயம் நமக்கே 
பாடங்களும் நடத்தப்படும்!

இன்று வெறும் கிறுக்கல்களாய்
தொலையும் அவர்களது காலங்கள்  
நாளை அழகிய ஓவியங்களாய் உயிர்பெறட்டும்!


         குறிப்பு : என் கிறுக்கல்களை சீர்திருத்திய என் ஆசிரியர்களுக்காக என் வரிகள்!

Tuesday, August 23, 2011

என் கிராமத்து சிட்டுக்கள்!

              "அக்கா நேத்து எங்க மாமா வீட்டுக்கு வந்திருந்தாரு! அதான் இப்போ ஏதோ பெரிய பெரிய துணி கடைக்கெல்லாம் ஆளு எடுக்கராங்கலாமா! அங்க துணி பீஸ் கட் பண்றது மடிச்சு வைக்கறது இது தான் வேலையாம்! தினம் 100 ரூபா தர்றாங்கலாமா. அவங்களே வேன்ல வந்து கூட்டிட்டு போறாங்களாமா! அதுதான் எங்க மாமா வர்றியான்னு கேட்டார் இங்க எத்தன துணி தெச்சாலும் ஒரே சம்பளம் தான அங்க நம்ம வேலை செய்யறதுக்கு தகுந்த மாதிரி சம்பளம் ஓவர் டைம் னு நம்ம இஷ்டப்படி வேலை செய்யலாம்ல ன்னு சொல்றாரு ," இது எங்க ஊர் துணி தெக்கற கடைல நான் கேட்ட பேச்சு! 
                      எங்க ஊர் ஒன்னும் ரொம்ப பெரிய பெரிய ஊர் ஒன்னும் இல்லைங்க!   சின்ன ஊருன்னாலும் பக்கத்துல ரெண்டு கிலோமீட்டர் கிழக்கு பக்கம் பெரிய பெரிய காலேஜும் ஸ்கூலும் ரெண்டு கிலோமீட்டர் மேற்கு பக்கம் பெரிய டவுனும் இருக்கு! ஆனால் அடிக்கடி பஸ் தான் இல்லை! எங்கயாவது வெளிய போகணும்னா கூட சில மணி நேரம் பஸ் க்கு காத்திருக்கணும்!
          இங்கயும் பெரிய பெரிய வேலைக்கு போறவங்களும் இருக்காங்க! பக்கத்து காலேஜுக்கும் ஸ்கூலுக்கும்  வேலைக்கு நிறைய பேர் இங்க இருந்து போறாங்க!
                  காலைல காலேஜு நேரத்துக்கு ரெண்டே பஸு அதுலயும் படிக்கட்டுல தான் இடம் இருக்கும். அதுவும் பஸ் பாசு, மதியம் ஒரு வேலை சத்துனவுன்னு ரொம்ப ஏழைக்குடும்பத்துல இருந்து ஸ்கூலுக்கு போற குழந்தைகளும் உண்டு அவங்களுக்கு அந்த நேரத்துக்கு ஒரே ஒரு கவர்மென்ட் பஸ் தான்!
              சாயந்திரம் அதே மாதிரி தான் ஒரே பஸ் ல அத்தனை  குழந்தைகளும் படிக்கட்டுல தொங்கிட்டு வர்ரத பார்த்தா அப்பப்பா! இத பார்க்கிற பல நல்ல மனசுக்காரங்க சொல்றது என்னன்னா " வேற பஸ் ஆ இல்ல எல்லாம் இதுலே தொங்கிட்டு வருதுங்க பாரு". சில நாள் பஸ்ல ஏற முடியாம வேற பஸ் இல்லாம நடந்து வர்ற குழந்தைகளும் உண்டு.
         இதெல்லாம் ஒரு பக்கம் நாளும் இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டு வேலைக்கு போறவங்க இருக்காங்களே அவங்க பொளப்பு பாவங்க. அதுவும் குழந்தை இருந்துட்டா அவ்ளோ தான்! காலைல குழந்தைக்கு எல்லாம் செஞ்சு வச்சிட்டு சமையலும் செஞ்சுட்டு அஞ்சு மாசம் ஆறு மாசம் கை குழந்தைய வீட்டுல யார்கிட்டயாவது விட்டுட்டு போவாங்க பாருங்க. 
              இதுல இன்னொன்னு என்னன்னா குழந்தை அம்மா வீட்டுல கொஞ்சம் நாள் மாமியார்கிட்ட கொஞ்ச நாளும் விட்டுட்டும் வேலைக்கு போவாங்க. இதுக்கும் அந்த அதுதான் எங்க ஊர் நல்லவங்க சொல்லுவாங்க பாருங்க "அப்படி என்ன பச்சை குழந்தைய விட்டுட்டு வேலைக்கு போகோணுமா! அதுதான் புருஷன் வெளியூர்ல சம்பாரிக்கிறான் ல அது போதாதா!".அவங்களுக்கு என்ன தெரியும் குடும்ப சூழ்நிலையும் பால் வாசம் மாறாத குழந்தைய வீட்டுல விட்டுட்டு மாசம் ஆயிரம் ரெண்டாயிரத்துக்கும் வேலைக்கு போற கஷ்டம்!
      அதெல்லாம் எதுக்குங்க நானும் அதே பக்கத்து காலேஜுல தாங்க படிக்கிறேன் என்னை மாதிரி இங்க இருந்து கொஞ்ச பேரு படிக்க வர்றாங்க! தினம் அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் வீட்டுக்கு வந்திருவேன் அப்பவல்லாம் ஒருத்தரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க ஏதாவது ஒரு நாள் கொஞ்சம் லேட்டாகி ஒரு ஆறு மணிக்கு வந்தா ஊர் எல்லைய தொடறதுக்கு முன்னாடியே எங்கயாவது இருந்து ஏதாவது ஒரு குரல் கேட்கும் பாருங்க அப்படியே இன்பத் தேன் வந்து பாயும் காதுல அப்படி இருக்கும், சொல்லுவாங்க பாருங்க "என்ன இவ்வளவு நேரமா காலேஜு இருந்தது.விடிய விடிய காலேஜு வெக்கறான்களா".


               பசங்களுக்கும் அதே கதி தாங்க "படிக்க போறேன் படிக்க போறேன்னு போய் எங்க ஊர் சுத்திட்டு வரானோ இவன் எல்லாம் எங்க வீட்ட பார்க்க போறான்!" அப்படீன்னு வீட்டுல இருக்கிற கஷ்டத்துலயும் ஒரு நாலு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சுட்டா எங்கயாவது வெளியூர்ல கண்டிப்பா வேலை கிடைக்கும்னு பெத்தவங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு பேங்குல தர்ற கல்விக்கடன நம்பி படிச்சுட்டு வெளில எங்கயாவது பகுதி நேரமா வேலை செஞ்சுட்டு ராத்திரி வர்ற பசங்களையும் பார்த்து பேசுவாங்க!
                 அதே பசங்க வெளியூர்ல வேலை கிடைச்சு போய்ட்டா இன்னொன்னும் சொல்லுவாங்க "இங்க இருந்தப்பவே அவன் சரியில்ல அங்க போய் எவள இழுத்துட்டு வர்ற போறானோ ". 
            வெறும் உடையிலையும் உணவுலயும் நாகரிகத்தை நாடும் என் கிராமத்து மக்கள் இன்னும் மனசளவுல 1970 லையே நிக்கறாங்க. இந்த கிராமத்த மாத்தியே ஆகணும்னு இன்னும் எல்லா பேச்சையும் கேட்டுட்டு முள்ளுக்கு மத்தியில துளிர்விட்டு இன்று மிளிர போராடிக்கொண்டிருக்கும் என் கிராமத்து சிட்டுக்களுக்காக என்னுடைய வரிகள்!

Friday, August 19, 2011

விழிகள்...

உனது விழி
பார்வையின் தாக்கம் 
என் விழிகள் முதல்
என் விரல் நுனி வரை
உடனே 
நிறைந்து விடுகின்றன 
இந்த வெள்ளைக் காகிதங்கள்!

விண்ணுக்கும் மண்ணுக்கும் ...

விண்ணே!
கள்ளமில்லா சுவடுகள்
கலங்கி கண்ணீர் வடிப்பதென்ன
காதலாய் !

என் சுவாசம் தீண்டும்
உன் காதல் மழையில்
நனைகிறேன் நான்!

தித்தித்திருக்கிறேன்
உன் காதலில்
சிக்கித் தவிக்கிறேன்
உன் மௌனம் தாங்காமல்!

கலங்குகிறது என்
மேனி உன் வெப்பத்தில்!
உன் வெண்ணிலா புன்னகை
சமர்ப்பிக்கிறது
ஆயிரம் ஆயிரம்
முத்தங்களை!

என் சுவாசம் போதும்
என நீ வாழ்வதும்
உன் நிழல் போதும்
என நான் வாழ்வதும்
இது தான் காதலோ!

உன் விழிகளின் மொழி அறியேன் நான்...


பார்த்தும்
படித்துப்படித்து பார்க்கிறேன்,
புரியவில்லை!
வார்த்தைகள் என்ன புதிதா?
வாக்கியங்கள் என்ன பெரிதா?
மொழி மறந்தேனோ 
என்ற சந்தேகம்!
தேடித் தேடிப்பார்க்கிறேன்
மீண்டும் மீண்டும் 
ஏங்குகிறேன்!
புரியாத மொழியாயினும் 
கற்றுக்கொள்கிறேன் 
உன் கண்கள் பேசும் மொழியினை!

Friday, August 12, 2011

கனாத்துளிகள்...

என் வலைப்பூவிற்கு அனைவரையும் வரவேற்கிறேன்!

விழியோரம் என் நேற்றைய கனவுகளின் மீதமும் இதழோரம் என் கடைசி புன்னகையின் மீதமும் இன்று முற்றிலும் மௌனமகிப்போக நாளைய மாற்றத்தை   எதிர்பார்த்து  எதிர்நீச்சல் போடும் சராசரிப்பெண்ணே  நானும்... 

கடந்து வந்த பாதையில் மீதமாகி இருக்கும் என் அனுபவங்களில் உதிர்ந்த ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கு ஒற்றை பதிலை வேண்டி இந்த வலைப்பூவில் தஞ்சம் கொண்டுள்ளேன்...    


Monday, August 1, 2011

பெண்ணே நீ கொஞ்சம்..


ஒற்றை புள்ளியில் உன் ஆரம்பம்
வெட்ட வெளியான உன்னை பற்றிய 
பேச்சுக்களை வெட்டி விடு!
அமைதியை இரு மற்றவர்கள் 
உன்னை அலசிப்பார்க்கட்டும்!
வானம் முதல் வாழும் வாழ்க்கை வரை 
அனைத்தையும் அலசிப்பார்!

தேடத்தேடத் தான் தேவைகள் தீரும்
உன் மனதை அடைக்கிவை 
உன் அனுபவங்கள் பேசட்டும்!


சுயமாய் இரு சுயநலமின்றி முடிவெடு
உன் முடிவுகளில் நீ மட்டும் தனித்திரு!

உன் பாதையின் முட்கள் பற்றி கவலைப்படாதே 
உன் திறமைகளுக்கு முன் அனைத்தும் படிக்கட்டுகலாகும்!
உன்னை ஏழனமாய் பார்த்தவர்களை
ஏறிட்டு பார்க்கவை!

மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும்
தளர்ந்து விடாதே அனைத்தும் உன் சாதனையில் மடிந்துவிடும்!

வாழ்க்கை பந்து உன்னை 
எத்தனை முறை எட்டி உதைத்தாலும்
எழுந்து நிற்கும் வித்தையை மட்டும் கற்றுவிடு 
அந்த வாழ்க்கையே 
உனக்கு வசமாகும் வசந்தமாகும்...
  
 
         
   

என் அம்மாவுக்கு...

பல இரவுகள் உறங்காமல் விழித்திருக்கிறேன்
செல்லமாய் உன் கரங்கள் என் நெற்றியை வருடி விட
அன்பாய் உன் இதழ்கள் முத்தமிடுவதை ரசிப்பதற்காக...

நீ என்னை பிரிந்திருக்கும் வேளையிலும் 
நீ உடுத்திய சேலையிலும் நீ போர்த்திய போர்வையிலும் 
உன் வாசம் நிரம்பி என் சுவாசமாய் போக
என் தனிமை போன தொலைவறியேன்...பல நாட்கள் காய்ச்சலுக்காக ஏங்கியிருக்கிறேன்
உன் அன்பிலும்  அணைப்பிலும் தொலைந்து போக
நான் தளர்ந்து போகும் வேளையிலும்
" என் தங்கம் எல்லாம் பன்னிடும் "
என்று நீ சொல்லும்போதே 
விண்ணையே தொட்டுவிட்ட சந்தோஷம் எனக்கு...

உன்னிடம் திட்டு வாங்கவே 
எத்தனை முறை வேண்டுமென்றே சண்டையிட்டிருப்பேன்
தனியாக உண்ணப்பழகி வருடங்கள் பல கடந்தபோதும் 
குழந்தையை போல் நீ ஊட்டிவிட நான் உண்ணவே 
இன்றும்  விரும்புகிறேன்...


இருள் என்னை கவ்வியபோது 
உன் அன்பு சூழ்ந்திருக்கும் 
உன் அரவணைப்பில் அமைதியாய் உறங்கிப்போனேனே...

சோர்வின் கடைசி கட்டங்களிலும்
சந்தோஷத்தின் உச்சக்கட்டங்களிலும்
உன் பொன் மடியிலேயே இன்னமும் தவழ 
விழைகிறதே என் மனம்...


நீயும் நானும் மட்டுமே இருக்கின்ற நம் உலகில்
ஒரு குட்டி சூரியன் உதித்திட
முழு நிலவு பிறை நிலவாய் தேய்ந்துவிடுமோ     
என்று எண்ணிய என் அசட்டுத்தனத்தை  
நானே சிறு புன்னகையுடன் 
பழித்துக்கொள்கிறேன்...


ஏதேதோ எண்ணங்களில்  மூழ்கிக்கொண்டே நீ சமைத்திருந்தாலும்
அதை உண்ட  திகட்டோடே உள்ளுக்குள் ரசித்திருந்தும்
வேண்டுமென்றே வெறுமையாய் வார்த்தைகளில் வாதிட்டிருப்பேன்...
 
     
கோபத்திலும் கொஞ்சுகிறாய் திட்டுகையிலும் அணைக்கிறாய்
சக மனுஷியாய் என் சகளமும் உன் காலடியில் 
உன் மகளாய் என்றும் நான் உன் உயிரில்...      
எத்தனை கர்வம் என்னுள் என் நண்பர்களுக்கு உன்னை
அறிமுகப்படுத்துகையில்...

 
என் முன்னுரையும் நீயே...
என்  முடிவுரையும் நீயே ...
என் வாழ்க்கையின் பக்கங்களில்
அணு அணுவாய் நீ மட்டுமே 
உன் இடத்தை நிரப்பிவிட 
மீண்டும் ஒரு பிறவி நீயே என் அம்மாவாய்...
உன் கருவறையில் வாசம் செய்ய
எனக்கொரு வரம் தாயேன்... 
    

  

Friday, July 29, 2011

என் தோழமை...

தனிமையில் துணையின்றி தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் சராசரி வயோதிகர் அவர்... என் உற்றத்தோழர் அவர் என்பதை விட அவரது உற்றத் தோழி நான் என்பதில் கொஞ்சம் கர்வம் தலைதூக்கவே செய்கிறது என்னுள்...என் மூன்றாண்டு கல்லூரிப்படிப்பில் என் மாலை நேரத்து நடை பயணத்தில் பல நாட்கள் ஒரு அந்நிய வயதானவராகவே  கண்டிருக்கிறேன் அவரை...

எங்கள் நட்பும் "உனக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் ஏதோ தொடர்பிருந்திருக்கும் " என்றே ஆரம்பித்த போதிலும் ஒரு சின்ன வித்யாசம் "என் மகளாகவோ அல்லது என் அம்மாவாகவோ இருந்திருக்கவே தவிக்கிறேன் " என்ற வார்த்தைகளில் அவரது தனிமையின் வலி அறிந்தேன்...

தன் உறவுகளுக்காக திருமணம் செய்து கொள்ளாமல் துணையின்றி இன்றுவரை வாழ்ந்து வந்தவர் இன்று துணையாய் தன் கைத்தடியுடன் புதிதாய் பிறந்தது போல் நடை பயில வருகிறார்...

கூடிய விரைவில் அவரது படம் 
இங்கே இடம் பெரும்... 


தடுமாறும் கால்களும், சளனமில்லாத அவரது பார்வையும், கொஞ்சம் என்னையும்  மாற்றியே போனது புதியவளாய்...அவரது அன்பும் அக்கரையிலும் நான் கொஞ்சம் ஆடியே போனேன் என்னை பார்க்காத பல நாட்கள் என்னை தேடி அவரது தடுமாறும் பாதங்கள் என் வீட்டின் முன் நிற்கும் போது... 

என்னையும் அக்கறையோடு நலம் விசாரிக்கும் அன்பர் அவர்...இன்றோ நான் புதிய கல்லூரியில் அவரை விட்டு வெகு தூரம் ஆனால் இன்றும் எனது வருகைக்காக காத்திருக்கும் சக தோழர்... என் வருகையின் போது சில நிமிட சந்திப்பிலும் பல நேர தொலைபேசி உரையாடலிலும் இன்றும் தொடர்கிறது எங்களது நட்பு...

அவரை கவனிக்க விரும்பாத சொந்த உறவுகள் மத்தியில் வாழ விரும்பாத அவர் முதியோர் இல்லத்தில் சேர முனைந்துள்ளார்...நாளை இந்நேரம் அவர் அந்நிய உறவுகளோடு மிக உரிமையாய் மிக நெருக்கமாய்...

இதை அறிந்தவர்கள் என்னை விசாரிக்கிறார்கள் அவரை பற்றி அல்ல அந்த இல்லத்தை பற்றி விசாரித்தது வேறுயாரும் இல்லை எனது உறவுகள்...கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் நம் உறவுகளின் நெருக்கத்தை...