Saturday, September 17, 2011

இழப்புகள்!

           இழப்புகள் என்ற வார்த்தையே ஒரு நிமிஷம் நாம இழந்தத ஏக்கங்களா கருவிழியில  கொண்டு வந்து நிறுத்தும்.  பலருக்கும் அப்படித்தான்! எனக்கும்!
           காசு பணம் நிரஞ்ச வீடு, கை நிறைய சம்பாரிக்கிற அப்பா, அன்பான அம்மா, ஆசைப்படற எல்லாமே நினைச்சவுடனே கிடைக்கிற சராசரி வாழ்க்கை வாழறவங்களுக்கு மத்தியில அம்மா அப்பாங்கிற வார்த்தைகளோட அர்த்தம் தெரியாம வாழற குழந்தைகளோட இழப்புகள் ரொம்ப வலியது. ஆண்குழந்தையோ இல்ல பெண்குழந்தையோ வாழ ஆசைப்படற வாழ்க்கை எல்லா மனசுக்கும் ஒன்னு தான.

Add caption
            இந்த மாதிரி சூழ்நிலையில வளர்ற குழந்தைங்களோட இழப்புகள் எத்தனை எத்தனை? முழுமையான பாதுகாப்பு, அன்பு, அக்கறை ன்னு எல்லாமே அவங்க வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாம போகும்போது அவங்க மனநிலை எப்படி இருக்கும்.
            ஆதரவற்றவர்கள் இல்லத்துல விடப்படற குழந்தைகளுக்கு பலரோட உதவில அவங்களோட தினசரி தேவைகள் பூர்த்தி ஆனாலும் அவங்க மத்த சராசரி குழந்தைகளோட( ஸ்கூல வெளியில ன்னு )  பழக நேரிடும் போது அவங்க அனுபவிக்கிற வலி. "ஏன் எனக்கு மட்டும் அப்பா இல்ல அம்மா இல்ல?" ங்கிற அவங்களோட கேள்வி இந்த ஆயுசுக்கும் அவங்க மனச உறுத்திக்கிட்டே தான இருக்கும்.
            அவங்களுக்கு தேவையானது எல்லாமே இருந்தாலும் அவங்க மனசு அதுல என்னைக்குமே நிறைவடையாது. நமக்கு தெரிஞ்சு நாம வாழற இந்த ஒரு வாழ்க்கையில அன்புங்கிற வார்த்தையோட அர்த்தம் முழுசா தொலைஞ்சு போகும் போது அதோட வலியும் ரொம்ப அதிகம் வலிமையையும் ரொம்ப அதிகம்.
                நான் பார்த்த ஆதரவற்றவர்கள் இல்லத்துல 175 பேரு இருந்தாங்க. அங்க அஞ்சு வருஷ குழந்தையில இருந்து மரணத்த நோக்கி பயணிக்கிற வயசானவங்க வரைக்கும் இருக்காங்க. அவங்கள கவனிக்கிறதுக்கு தனி ஆள் எல்லாம் கிடையாது. அங்க இருக்கறவங்களே தான் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருக்கறாங்க. குழந்தைகள பார்த்துக்கிற பெரியவங்க, உடம்பு  முடியாத வயசானவங்கள பார்த்துக்கிற இளசுங்க ன்னு எல்லாத்தையும் அவங்களே பார்த்துக்கறாங்க.


              அங்க இருக்கிற குழந்தைங்க பக்கத்துல இருக்கிற சில ஸ்கூல்லயே அந்த அந்த நிறுவனத்தோட பொறுப்புள படிக்கிறாங்க. என்னதான் அங்க எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா துணையா இருந்தாலும் வெளி உலகத்துல மத்த சராசரி குழந்தைகள பார்த்து வளருகிற அந்த குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கும் அவங்களுக்குள்ள எத்தனை ஏக்கங்கள் இருக்கும். 
              அங்க ரொம்ப நேரம் இருக்கறதுக்கோ அவங்களோட பேசறதுக்கோ எனக்கு வாய்ப்பு கிடைக்கல, ஆனால் அங்க இருந்த பத்து நிமிஷத்துல நான் பார்த்த ரெண்டு குழந்தைங்க கிட்ட நான் கேட்ட கேள்வி " ஏன் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலயா?" அதுக்கு அவங்க சொன்ன பதில் "இன்னைக்கு ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங் அதனால எங்க மிஸ் எங்களுக்கு லீவ் விட்டுட்டாங்க". அந்த பதிலில் தான் எத்தனை ஏக்கங்கள் இருந்திருக்குமோ?
              வளர வளர அவங்க இந்த இழப்பை ஏத்துக்கிட்டாலும் அவங்க மனசுல ஏதாவது ஒரு ஓரத்துல அந்த வலி இருந்துகிட்டே தான் இருக்கும்.

           
         

Thursday, September 8, 2011

இளம் தொழில் அதிபர்கள்!

இந்த தலைப்பை பார்த்ததும் ஏதோ பெரிய பெரிய சாதனைகளை படைத்த தொழில் புலிகளை பத்தி எழுதப்போறேன்னு நினைக்காதீங்க. இங்க நான் சொல்ல வர்றது என்னன்னா நான் பார்த்த வளரும் இளம் தொழில் அதிபர்களை பத்தி! அப்படி ஒன்னும் ரொம்ப இளமை இல்லேங்க வெறும் 13 வயசு தான் இருக்கும். எப்படி பேசி கஸ்டமர்ஸ் அ புடிக்கராங்கறீங்க.

நான் தினமும் கடந்து போகிற சாலை பக்கத்தில் ஸ்கூல், பஸ் ஸ்டாப் இருப்பதால் எப்போதும் நிறைந்தே காணப்படும்! இன்று எப்போதும் போல பஸுக்காக காத்திருந்த போது நான் பார்த்த அந்த நாலு பேரு. அதாங்க அந்த வளரும் இளம் தொழில் அதிபர்கள் சராசரியா என் கணக்குப்படி அவங்க இப்போ எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு தான் படிக்கணும். அனால் அவங்க பேச்சு "டேய் மச்சான் இதுல எந்த பிரச்சனையும் இல்லடா மாசத்துல நாளே பத்து பத்து ரூப கட்டுனா போதும் தீபாவளி அப்ப நான் உனக்கு நூறு ரூபா தரேன்".


டீலிங்  நல்லா இருக்கில்ல எப்படீன்னு பார்க்கறீங்களா. என்ன கேட்காதீங்க அவன் சொன்னத கேளுங்க விளக்கமா சொல்றான்."இதுல என்னடா இருக்கு நீ எதுக்கு பயப்படற! உங்க அம்மா தினம் 2 ரூபா தராங்கள்ள நீ சைக்கிள்ல தான வர்ற அதனால அந்த காச அப்படியே சேர்த்து வச்சு வாரம் பத்து ரூபா எனக்கு கொடு. மாசத்துக்கு நாலு தடவ. 40 ரூபா ரெண்டு மாசம் இப்படி கொடுத்தா எவ்வளவு ஆச்சு 80 ரூபா. தீபாவளி வரும் போது நான் உனக்கு 100 ரூபா தருவேன்.தீபாவளிக்கு காசு சேத்தி நம்ம இஷ்டப்பட்டதை வாங்கிக்கலாம்."

அவன் கூறியதற்கு ஒரு நல்லவன் கேட்கிறான் "ஏன்டா எங்க கிட்ட 80 ரூபா வாங்கிட்டு 100 ரூபா தரேன்கறியே இதுல உனக்கு 20 ரூபா போகுதே டா." அதுக்கும் இங்கே பதில் உண்டு "அப்படி இல்லடா இதுல எனக்கும் லாபம் உண்டு" என அவன் ஒரு புது கணக்கு சொல்ல இதை நேராய் கேட்ட மற்றவனுக்கும் விளங்கவில்லை ஒட்டு கேட்ட எனக்கும் விளங்கவில்லை.பிறகு வார கூட்டமைப்பு இடம் முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது.

இதை பார்த்தும் கேட்டும் விட்ட என் இதயத்தில் ஒரு சிறு கேள்வி எழுந்தது " இளைஞர்களின் துணை தேடி வல்லரசை நோக்கி பயணிக்கும் நம் நாட்டை பற்றி!"


Wednesday, September 7, 2011

சித்திரச் சிதறல்கள்!


இரவுகள் நீண்டுபோகக்கூடாதா
என சலுப்போடு விடியலில் 
விழிக்கும் விழிகள்!

விழித்துவிட்டதாலோ என்னவோ 
விரைவாக விரையமாகிக்கொண்டிருக்கும் 
காலத்தோடு சிறு ஓட்டம் 
சலசலப்பும் வேலையுமாய் 
முடித்துவிட்டு திரும்பினால்
நேரத்தை காட்டி விரட்டும் 
கடிகாரம்!

நொடிகள் கொஞ்சம் நீளக்கூடாதா 
என தவித்தே ஓடும் பாதங்கள்
பள்ளிக்கு, மணி ஓசையை நோக்கி!படபடக்கும் இதயத்துடிப்பும் 
சலனமின்றி மௌனித்துப்போகும்,
வண்ணத்துபூச்சிகளாய், 
சிறகுகள் முளைத்தது போல்
துள்ளி ஓடும் பாதங்களை
காணும் போது!

இருக்கங்கள் கூட
இலகிப்போகும் அவர்களின் 
மழலை மொழியில்!

அங்கு எனது வேலையோ 
பிஞ்சு விரல்கள் சிதறும் 
சித்திரங்களை சீர்திரித்தும் வேலை!

சிறகுகளை சிலிர்த்துக்கொண்டு 
சில்வண்டுகள் சுற்றுவதாய்
எந்நேரமும் துருதுருவென 
சுற்றும் பாதங்கள்
நம்மையும் சிறகுகள் கொண்டு 
பறக்க தூண்டுமே!செல்ல சண்டைகளும் 
அனாவசிய புகார்களும் 
கோபப்படுத்தாமல் மாறாய் புன்னகையை
தத்துக்கொடுத்துவிட்டு போகும்
ஆச்சரியமும் நடக்கும் இங்கே!

வெறுமையும் வெறுப்பும் 
மண்டியிட்டு மரணித்துப்போகும்,
படபடக்கும் இமைகள் பேசும் மொழியிலும்,
கள்ளமில்லா இதயத்தின் 
இதழோரப் புன்னகையிலும்!

பிரம்புகளும் கண்ணீர் வடிக்கும் 
பிஞ்சு கரங்களை காயப்படுத்தியதற்கு!
தனிமையில் தவித்து 
நித்தமும் சாகும், 
மரபெஞ்சுகளும், 
ஊமையான பள்ளிக்கூடத்து மரங்களும்,
விடுமுறை தினங்களில்!அவர்களின் அனாவசிய கேள்விகளும்
அதிசயமாய் தோன்றும் பல சமயம்!
சில சமயம் நமக்கே 
பாடங்களும் நடத்தப்படும்!

இன்று வெறும் கிறுக்கல்களாய்
தொலையும் அவர்களது காலங்கள்  
நாளை அழகிய ஓவியங்களாய் உயிர்பெறட்டும்!


         குறிப்பு : என் கிறுக்கல்களை சீர்திருத்திய என் ஆசிரியர்களுக்காக என் வரிகள்!