Wednesday, December 28, 2011

அவளும் நானும்!


   ரசித்து நேசிப்பதற்கு இங்கு எத்தனையோ! வருடங்களாய் கற்றுக்கொண்டதை விட விநாடிகளில் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் அர்த்தங்கள் இங்கு எத்தனை?. என்னைப்பற்றிய பல விளக்கங்கள் அறிந்தேன் நானும் அவளிடம். கண்ணீரை கரைத்து மறைத்திடும் மழைச்சாரலுக்கு உரிமை கொண்டாடி கரைசலாய் கரைந்து போன கடந்த காலங்கள். ரத்தமும் சதையுமாய் என்றும் ஒட்டிக்கொண்டு என்னோடு மல்லுக்கட்டும் அவளது நினைவுகள் என் தனிமையில். அவள் அருகாமையிலோ வேண்டுமென்றே வேண்டாததை செய்து அவளிடம் திட்டுவாங்கவே காத்திருப்பேன்.

      
           நான் ரசித்ததை சொல்லித் தீர்த்துவிட என்னிடம் வார்த்தைகள் பற்றாக்குறை ஆகிறது. இங்கு போட்டிகளும் உண்டு பொறாமைகளும் உண்டு, நான் வேலை செய்யாதவரை அவள் போட்டி போடாதவள், நான் என் உரிமையை யாரிடமும் கொடுக்காதவரை அவள் பொறாமை இல்லாதவள்.என்னோடு ஆலோசனை செய்கிறாள் சிறு துரும்பை அசைப்பதற்க்கு கூட, நான் வேண்டாம் என்பதை வேண்டும் என்கிறாள்(எனது உணவுகளில்), நான் வேண்டும் என்பதை வேண்டாம் என்கிறாள்(செல்ல திட்டல்கள்). 
           தினமும் பரிமாறிக்கொள்ள நான் வார்த்தைகள் தேடியதில்லை, ஒவ்வொரு அசைவிலும் ஆசையாய் ஆயிரம் மொழிகள் எனக்காக மட்டும் சமர்ப்பிக்கிறாள்!அவள் ஆசுவாசப்படுத்திக்கொள்ள என் புன்னகையை காரணமாக்குகிறாள். அவள் நேசத்திற்கு என் முத்தங்களை சாட்ச்சியாக்குகிறாள். சளைக்காமல் தோழ்கள் உயர்த்துகிறாள் நான் தலை சாய்த்துட.

       
          சித்திரச் சிதறல்களாய் அவள் கைரேகைக்குள் கிறுக்கல்களாய் தொலைந்து போக ஆசை. அவள் கைபிடித்து நடைபழகிய காலம் இன்னும் கடந்து போகவில்லை என்பதை ஞ்யாபகபடுத்துகிறேன் இன்றும் அவள் கைபிடித்து கல்லூரி வாசலை கடக்கையில். 
                     இப்படி சிந்தாமல் சிதறாமல் சேகரித்த நினைவுகளை சித்திரத் தேரில் பூட்டி உலா வர ஆசை தான்! இதற்கு மேல் விவரிக்க வார்த்தைகளின்றி அனைத்து அர்த்தங்களையும் மூன்றே எழுத்துக்களில் அடைத்து முடித்துக்கொள்கிறேன். அவள் "அம்மா!".


Saturday, December 17, 2011

இன்னும் இருக்கிறார்கள்!

      இன்னும் இருக்கிறார்கள்! கலங்கும் விழிகளின் கண்ணீர் துடைத்திடும்  கரங்கள் கொண்டவர்கள், எதைஎதையோ தேடி தொலைந்து போகும் மனித உயிர்களின் மத்தியில் இதயத்தின் உணர்வுகளை கொஞ்சம் நேசிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். "தனக்கான வாழ்க்கை, தன் குடும்பம், தன் குழந்தைகள் என்று சுயநலமாய் வாழாமல் இந்த நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்று நம் தலைவர்கள் எப்படி போராடினார்கள்" என்று நாமே நினைக்கும் அளவுக்கு சுயநலமாய் போகிறது நம்மை சுற்றி இருக்கும் உலகம். 
   

  பல இடங்களில் பல நேரங்களில் மனித உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை இருப்பினும் அதை எதிர்த்து நேசிப்பவர்களும் இருக்கிறார்கள். முதியோர்களுக்கு, பெண்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கு என தனித் தனி இருக்கைகள் பேருதுகளில் அறிமுகப்படுத்திய காலத்திலாவது அவை அரங்கேறியதா என்று எனக்குத் தெரியாது! ஆனால் இன்று எத்தகைய நீண்ட பயணமானாலும் முதியவர்களோ, இயலாதவர்களோ, கர்பினிப்பெண்களோ பேருந்தில் இடம் இல்லாமல் நின்றிருந்தால் இரக்கமே இன்றி பார்த்தும் பார்க்காமல் பார்வையை ஒதுக்கும் சுயநலமானவர்களுக்கு மத்தியில் தன் இருக்கையில் அமரச்சொல்லும் என் மனித இனத்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
      குழந்தைகளை ஆதரவற்றவர்களாய் விட்டுச் செல்லும் பெற்றோர்களும், பெற்றோர்களை பார்த்துக்கொள்ள மனமின்றி முதியோர் இல்லத்தில் விட்டுச் செல்லும் உணர்வுகள் இருகிப்போன இல்லாதவர்களும் வாழும் சுயநல உள்ளங்களுக்கு மத்தியில் எங்கு சென்றாலும், எப்படி இருந்தாலும் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட காத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.
   "எங்கேயோ ஒரு பேருந்து விபத்துக்கு உள்ளாகிவிட்டதாம்" என நாம் கேட்டறிந்த ஒரு செய்தி நடந்தேறிய பொழுது சிக்கிக் கொண்ட உயிர்களை மீட்க அங்கு என்னவர்கள் சிலர் இருந்திருப்பார்கள். சம்பந்தமே இல்லாத போதும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க இன்னும் சிலர் இருக்கிறார்கள்.ஒருமுறை விபத்துக்குள்ளாகிய பள்ளிப்பேருந்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகளை காப்பாற்றப் போராடி தன்னுயிர் நீத்த ஆசிரியரும் இருந்திருக்கிறார் இங்கு நம்மோடு.
        அப்படி நடக்கும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை முதலுதவி கொடுத்து காப்பாற்ற நினைக்கும் மருத்துவர்களும் விபத்துக்கான காரணம் என்ன என்று அலசி அதை தடுத்து நிறுத்தப் போராடும் என் சில வழக்கறிஞர்களும் இன்னும் இங்கு இருக்கிறார்கள். நம் பகுதியில் நாம் காணும் சில ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்களை கண்டும் காணாமல் போகும் நல்லவர்கள் மத்தியில் அவர்களின் வாழ்க்கைக்கு வழி காட்ட சில தன்னார்வ நிறுவனங்களும் உதவிக்கரங்கள் நீட்டுகிறார்கள்.

   
         உருவமற்று கிடக்கும் உணர்வுகளுக்கு உயிர்கொடுத்து நேசிக்க சிலர் இன்னும் இந்த பூமியில் இருக்கிறார்கள். தொட்டு வந்த கருவறைக்கும் தேடிப்போகும் கல்லரைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட இந்த ஒற்றை வாழ்க்கையில் 'நான் நான்" என்று சுயநலத்தை கட்டிக்கொண்டு இனவேற்றுமை, மொழிவேற்றுமையை கடந்து நிற வேற்றுமையை சிதறிவிட்டு மனிதக்குருதியில் ருசிகண்டு இன்று எதைத் தேடி நாம் இங்கு நம்மவர்களை நேசிக்க மறந்து போகிறோம்.
      பத்துயிர் எடுக்க ஒருவன் துனிந்திருந்தால் அதில் ஒற்றை உயிரையாவது காப்பாற்ற என்னவர்களில் ஒருவராவது உதவிக்கரம் நீட்டும் வரை உயிர்வாழும் இந்த பூமியில் ஒரு சிரு இறகாய் நான்!

Saturday, December 10, 2011

மழை நேரம்!Rainy Season Scraps, glitter, and pictures
GoodLightscraps.com


துவங்கிவிட்ட மாலை நேரத்து சோர்வு
களைந்தெறிய சிறு குதூகளம் ஏங்கி தவித்திருக்க
கார்மேகம் நெருங்கி நெருங்கி
கண்ணீர் தளும்பத் தளும்பத் தடுமாறும்
வான்மேக வண்ணம் கலைத்திட
மண்ணிங்கு ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் 
மழைச்சாரலோடு!


விடுப்பு எடுத்துக்கொண்டு
எங்கேயோ பார்வைக்கு எட்டாமல்
மறைந்து போன வெந்நிலவும்
விண்மீன் கூட்டமும் மட்டுமே
இன்றைய இழப்புகளாய்!


மண்வாசனையை தத்தெடுத்து
மழைத்துளி முத்தங்களோடு
காதோரம் கிசுகிசுக்கும் தென்றல்
சில்லென்று சிலிர்த்துவிட்டு போவதும்!


வெளியில் பார்த்து ரசித்த
மழையை சேகரித்து வீட்டுக்குள்
சிதறிவிட்டு போகும் 
விட்டத்து துளைகள்!


"நான் இங்கு நீ எங்கு" என்று
சொல்லாமல் சொல்லி
கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும்
தவளையின் சத்தமும்!


சிலாகித்து ஆட 
ஆசையை தூண்டும் 
மயிலின் ஆட்டமும்!


வெளுத்துக்கிடக்கும் விண்ணுக்கு
மழை தத்துக்கொடுத்துவிட்டுப்போகும்
வானவில்!


குதூகளம் ஒட்டிக்கொள்ள
இவற்றை ரசித்திடாமல் எப்படி
விலகி நிற்பது!