Thursday, November 8, 2012

என் விழிகளுக்கு அப்பால்!!!


 மஞ்சள் நகரின்
 மாலை மயக்கத்திலே
 மயங்கித்தான் போனேன்
 நானும் கொஞ்சம்!

விளையாட்டு பூங்காவில்
 பூத்துக்குழுங்கிய
 மலர்களுக்கு மத்தியில்
 விசித்திரமாய் வியந்து நின்ற
 என் பயணத்தின் ஆரம்பம்!

 பரிசுகளும், தள்ளுபடிகளும்
 நிறைந்திருப்பதாய் காட்டிய
 விளம்பரத்தாள்கள் அடைத்துக்கிடந்த
 பேருந்து நிறுத்தம்!

 வங்கிகளும் ஏடீஎம்களும்
 நிறைந்திருந்த சாலையில்
 "திருடர்கள் ஜாக்கிறதை"
 என கம்பீரமாக நின்று
 அச்சுருத்தும் காவல்துறையின்
 எச்சரிக்கை பலகை!

 தீபாவளி நெருங்குவதை
 மக்கள் கூட்டத்தின் நெரிசலுக்கு
 மத்தியில் கத்தி கூச்சலிட்டுக்கொண்டிருந்த
 பேருந்து நிலையமும்,
 மிகக்குறுகளான கடைவீதியும்!

 பாரம் தாங்காமல்
 இடம் கொடுக்க மறுத்த
 அதிவேக அரசுப்பேருந்து
 கைகாட்டியது சாதாரண கட்டண
 வீடியோ கோச் பேருந்து!

 "சாட்டை" அடியில்
 திமிரிக்கொண்டிருந்த
 தொலைக்காட்சிப்பெட்டியின்
 சத்தத்துக்கு மத்தியில்
 அலறிக்கொண்டிருந்த கைப்பேசி
 பக்கத்து இருக்கையில்!

 ஏதேதோ நினைவுகளுக்கு மத்தியில்
 கடக்கும் பாதையில்
 கடந்து போகின்றதிலிருந்து
 தப்பிப்பிழைக்காத எனது விழிகள்
 கண்டது முன்னிருக்கையில்
 தலைமுடி பிடித்து
 சண்டை போட்டுக்கொண்டிருந்த
 குழந்தையும், அம்மாவும்!

 குறுகிய வாய்க்காலின்
 மிகச்சிறிய துளைகளில்
 வழிந்த நீர்!
 நெடுஞ்சாலையில் அங்கங்கு
 நடந்து கொண்டிருந்த
 சில்லரை துணி வியாபாரங்கள்!

 ஆட்களின்றி வெறிச்சோடிக்கிடந்த
 புதிதாக கட்டப்பட்ட
 நூலகம்!

 பல இலட்சம் செலவில்
 கட்டப்பட்டதை பார் என
 கிசுகிசுத்து கிண்டலடித்துக்கொண்டிருந்த
 தலைவர் சிலைக்கு முன்
 சிதறிக்கிடந்த குப்பைகள்!

 குப்பைத்தொட்டியாய்
 மாறிப்போன பல
 சிற்றூர் பேருந்து நிருத்தங்கள்!
 தள்ளாடித்தள்ளாடி
 பேருந்தை நிறுத்த போராடிய
 "குடி" மகன், ஏறியவனை
 கரித்துக்கொட்டிய ஓட்டுநர்
 இறக்கிவிட்ட நடத்துநர்!

 அனைத்திற்கும் மத்தியில்
 முன்பக்க இருக்கையின்
 பின்பக்கத்தில் முட்டிங்கால்
 முட்டிக்கொள்ள
 அசௌகரியத்தை ஏற்படுத்திய
 எனது உயரம் இன்று
 கொஞ்சம் சௌரியமாய்
 பக்கத்து இருக்கையில்
 அமர்ந்திருந்த முதியவள்
 அனுசரித்துக்கொண்டதால்!

அனைத்தையும் கடந்து
 வீடு சேர்கையில்
 விழிகள் விழித்திருந்தும்
 இதயம் இருக மூடி
 த்லையனையை
 புரட்ட ஆரம்பித்தது
 நாளைய பரிட்சையை
 நினைத்து!

Tuesday, October 23, 2012

மீளவும் மீட்கவும்!!


என்ன வாழ்க்கை இது என்று
அழுத்துவிட்ட தருணங்கள்!
உதட்டோர புன்னைகையை
பகிர்ந்துகொள்ள யாருமில்லாத
சளனிக்காத நேரங்கள்!

ஏந்திட யாருமின்றி
மண்ணோடு மண்ணாய்
கரைந்து போன
கண்ணீர்த்துளிகள்!
கண்ணீரே இன்றி வற்றி
எதையோ எதிர்ப்பார்த்து
காத்திருக்கும் விழிகள்!

தொட்டது அனைத்தும்
தோல்விகள்!
அர்த்தமில்லாத படபடப்புகள்!

உயிரோடு உயிராய்
கலந்துவிட்ட தனிமை!
உண்ணத்துணியாத பசி!
ஏற்கத் துணியாத இழப்புகள்!

தனிக்க முடியாத 
வெறுப்பு ஒன்று
நெஞ்சுக்கூட்டை
தகர்க்க தவித்து
கீறிக்கிழித்து மாய்த்துவிட
திண்டாடும் தருணம்!

தருணங்கள் இப்படி இருக்க
தோல்விகளோடும் இழப்புகளோடும்
மடிந்து போகும் முன்
எதையாவது சாதித்துவிட
தனியாமல் உயிரோட்டத்தில்
ஓடிக்கொண்டிருக்கும் தாகம்
ஒற்றைத்துளியாய்
இதயத்தில் துளிர்விட்டு
துள்ளி குதித்து
போராடத் துணியுமே
"நம்பிக்கை" என்ற பெயரில்
வாழ்க்கையின் அர்த்தங்களை தேடி!

அதை தொலைத்தவர்கள்
மீளத் துணியாதவர்கள்!
மீளத் துணிவோம்!!!
மீட்கவும் துணிவோம்!!!

Tuesday, October 16, 2012

மீதமாய் போவேனோ நானும்!

           கற்ற அர்த்தங்கள் யாவையும் தொலைத்து மீதமாய் போவேனோ நானும் இன்று. கடந்து செல்கிற பாதையில் திருப்பங்களை கண்டு வியந்து நிற்கிறேன். வாழும் வாழ்க்கையின் அர்த்தங்களை தொலைப்பதாய் ஏதோ இதயத்தை இருக்குவதாய். சில்லாய் சிதறிப்போவேனோ நானும் செதுக்கும் கரங்கள் என்னை திருத்தி உயிர்பிக்கும் முன்.
     
           
அழுகையும் ஆனந்தமும் அர்த்தமின்றி திமிரிப்போகும், மனதின் வேகமும் அறியாது, எண்ணத்தின் சுழற்சியும் அறியாது, அன்னையின் மடியறையில் உறங்கி,உருகி, பயம் அறியாது, பருவம் அறியாது துள்ளி விளையாண்ட தருணங்கள் இன்று அனைத்தும் அறிகையில் தேங்கிக்கிடக்கிறது வெறும் மீதமாய் என்னுள்.
                         பார்த்தவர்கள் அனைவரும் தெரிந்தவர்கள், பழகினவர்கள் அனைவரும் தோழர்கள், புத்தக மூட்டைக்குள் புதைந்து போவதும் பொழுதுபோக்காய் மாறிப்போய், படித்த எழுத்துக்களும் படிக்காத பாடமும் கனவுகளிலும், நிஜத்திலும் திணரடிக்குமே அந்த பதின் பருவத்தில் அனைத்தும் இன்று என்னுள் வெறும் மீதமாய் இருப்பதை நினைத்து திகைக்கிறேன்.
                 
வெறும் பாடம், பரிட்சை, நண்பர்கள், விடுமுறை, விளையாட்டு, என்று வாழ்க்கையின் அர்த்தங்கள் புரியாது ஆனவம், அகம்பாவம், கோபம், வெறுப்பு அறியாது நினைத்த நொடியில் அனைத்தையும் மறந்து, மறந்த நொடியில் அனைத்தையும் மீட்டு எத்தனை விந்தைகள், எத்தனை வியப்புகள் எப்படி அதனுள் தொலைந்து போனேன் எப்படி என்னை மீட்டு புதுமைக்கு பழகிப்போனேன் என்று அறியத் துணிந்து தோற்கிறேன் நித்தமும் இன்றுவரை.
                 தொடரும் நட்பு வட்டம், தொடர்புகொள்ள முடியாது தொலைந்து போன தோழி, இன்று அடையமுடியாத சந்தோஷத் தருணங்கள் அனைத்தும் அழகிய நினைவுகளாய். இழப்புகளை நினைவுபடுத்தும் நினைவுகள் கூட சில சமயம் தளரும் சமயத்தில் தோள் கொண்டு தாங்கத் தவிக்கையில் தள்ளாடித்தான் போவேன் நானும். வீழ்கையில் விழித்துக்கொண்டு துளிர்விட்டு மீட்கத் துணியுமே நம்மை நம்பிக்கை என்ற பெயரில். வீழ்கையில் மட்டுமே மீளக் கற்றுக்கொண்டேன், மீளக் கற்கையில் மட்டுமே வாழக் கற்றுக்கொண்டேன்.
               
        வெற்றுக் கிறுக்கல்களாய், அர்த்தமின்றி, பயணிக்கும் பாதையறிந்தும் தெளிவின்றி, எத்தனை தயக்கங்கள், மாற்றங்கள், அரும்புகளாய் இருந்தும் வளர்ந்துவிட்ட துணிவு, ஏதும் அறியாதிருந்தும் பள்ளியை கடந்தவுடன் எதையோ சாதித்துவிட்ட திருப்தி, விரும்பாத சீருடைகளுக்கு மத்தியில் விரும்பிய வண்ண உடைகள் முதிர்ச்சியை காட்டுவதும், மெலிந்து விட்ட புத்தகமூட்டை, குறைந்துபோன படிக்கும் நேரம், தளர்த்தப்பட்ட விதிமுறைகள், கொடுக்கப்பட்ட சுதந்திரம் அதில் தொலையாமல், கலையாமல் பயணித்த நிகழ்வுகள், பக்குவப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, கிறுக்கல்களுக்கு மத்தியில் சிதறிக்கிடந்த வாழ்வின் அர்த்தங்களை தேடிப்பிடித்து கோர்த்து அணிந்து அழகு பார்க்கையில் என் கண்ணாடியின் பிம்பம் காட்டியது என்னை அல்ல என் மனதை. எத்தகைய நினைவுகள் நிஜத்தின் பிம்பங்களாய்.
             மனதின் அலைச்சல்கள் அடங்கிப்போகிறது, எனது ஒவ்வொரு அசைவையும் அலசி சரி பார்க்க நேரம் கொடுக்கிறது எண்ண ஓட்டங்கள் ஓய்வெடுத்து, பயணிக்கும் பாதை சரியா என திரும்பிப்பார்க்கிறேன், துணை இன்றி நடக்க பழகிக்கொண்டேன், அனைத்தும் என்னோடு இருப்பினும் ஏதுமின்றி போவதாய், கற்ற அனைத்தும் மனதின் ஓரத்தில், இனி வாழ்க்கையில் நிதானித்து நிலைக்க ஓட்டம், எதை தேடிப் பயணிக்கிறேன் என்று அறியவே இத்தனை காலங்கள், எப்படி அடைவது என பாதை காட்டிட விரல்கள் தேடி விடையின்றி பயணத்தை தொடங்கிவிட்டேன். "இதெல்லாம் என்ன் இனி தான் எல்லாம்???", "இனி வாழ்க்கையில் எத்தனை பார்க்கனும்???", "எதையும் யோசிச்சு முடிவெடு!!!!" போன்ற எத்தனை அச்சுறுத்தல்கள். அடைந்ததை தொலைத்து அதன் வடுக்களை மட்டும் நிஜத்தின் மீதமாய் சுமந்து, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நானும் கல்லூரி வாழ்க்கையின் கடைசி துளி சந்தோஷத்தை ருசித்தபடி.
 
   
      சில காலங்களாய் எதை அனுபவிக்கிறேன் ருசிக்கிறேன் என சந்தோஷப்பட்டுக் கொண்டேனோ அதை மீண்டும் இழந்து விடுகிற தவிப்பு.இன்றுவரை அவளும் நானுமாய் அங்கும் இங்குமாய் எங்குமாக கடந்த பாதைகளை தொலைத்து போவேனோ பெண்ணாய் பிறந்த நானும். பெண்ணாய் போனாய் என்று என்றோ ஆதங்கப்பட்டதை நினைத்து என்றும் வருத்தம் கொள்கிறவள் இன்று நிஜம் கண்டு திணருகிறாள் என்னுள் தொலைத்த அவளை மீட்க. 
         இங்கு நான் எதையும் இழந்துவிடவில்லை இங்கு ஏதும் அர்த்தமின்றி போகவில்லை புதுப் பாதையை நோக்கி பயணிக்கையில் கடந்த பாதையை திரும்பிப்பார்த்து எதையோ தொலைத்ததாய் தவிக்கும் சாமான்யனின் தவிப்பே என்னுடையதும். எனது பயணங்கள் முடியவில்லை பாதை தான் மாறிப்போகின்றன, தேடல்கள் நீண்டுபோகின்றன, துணிவுகள் துளிர்விடுகின்றன.        
         அனைத்தும் இன்று என்னுள் மீதமாய் மட்டுமே சுமக்கத்துணிந்து நானும் போவேனோ நினைவுகளின் மீதமாய்!!!!!

Monday, October 8, 2012

மீண்டும் வாங்கிய விருதிற்காக-2

                        மீண்டும் அனைவரையும் எனது வலைப்பூவிற்கு வரவேற்கிறேன்! மீண்டும் மூன்றாவது முறையாக திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் வாங்கிய விருதிற்காக இந்த பதிவை பகிர்கிறேன் இங்கு. பதிவுலகில் எனது பயணம் ஆரம்பித்து ஓராண்டுகள் கடந்துவிட்டது. மிக சந்தோஷமான பயணமாகவே இருக்கிறது. தோழியின் உந்துதலில் ஆரம்பித்தது இன்று என்னோடு நானாய்! எனது பயணத்தின் மைல்கற்களாய் நான் அடைந்த ஐந்தாவது விருது இது. ஒவ்வொரு முறையும் விருதினை பெறுகையில் இனி எழுதும் பதிவுகளில் இன்னும் கவனம் செலுத்தி, திருத்தி, செதுக்க விரும்புவேன்.

           
              பதிவுலக பயணத்தின் போது ஒரு அங்கீகாரமும், அறிமுகமும் அவசியமாகத்தோன்றும். அதிகமான ஃபாலோயர்கள், அதிகமான பின்னூட்டங்கள் என எதிர்பார்த்திருப்போம். ஆனால் எதுவும் எளிதில் கிடைத்துவிடாது. எதையும் எதிர்ப்பார்க்காது பதிவுகளில் கவனம் செலுத்துதல் எனது பதிவுலகப்பயணத்தில் நான் கற்ற முதல் பாடம். 
             இதைப்பற்றி திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் "புதிய பதிவர்களே! பின்னூட்டம் பற்றிக் கவலைப்படாதீர்கள்!"  என்ற தலைப்பில் ஒரு பதிவினை பதிந்திருக்கிறார். அதை இங்கு பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். காரணம் என்னைப்போன்ற புது பதிவர்கள் பலர் ஒரு அறிமுகம் இல்லாத காரணத்தினால் பதிவுகளை எழுதுவதை தவிர்த்துவிடுகிறார்கள். மிக சிறப்பாக எழுதுபவர்கள் கூட வலைப்பூவை விட்டுச் செல்வது தான் வருத்தமாக இருக்கிறது. பதிவுலகம் பற்றி எதுவுமே தெரியாமல் தான் உள்ளே வந்தேன். இன்று ஓரளவுக்கு அறியமுடிவதில் மிக சந்தோஷமாக இருக்கிறது.    
          எத்தகைய தளம் இது நம்மை நாம் அறிவதில் வார்த்தைகளின்றி நெகிழ்ந்து போகிறேன். பதிவர்கள் யார்? என்பது பற்றி "பதிவர்கள்- ஒரு சிறு அறிமுகம்" என்ற தலைப்பில் திரு. ரமணி ஐயா அவர்கள் பகிர்ந்துள்ள ஒரு பதிவு என்னை மிக கவர்ந்தது. எனது ஐந்தாவது விருது "Fabulous Blog Ribbon Award" -ஐ நான்கு பதிவர்களோடு பகிர விரும்புகிறேன்.


பதிவுக்கு பதிவு வித்தியாசம் காட்டி காணாமல் போன கனவுகளை தேடிப் பிடித்து அழகிய சிதறல்களாய் சிலிர்த்துவிட்டுப்போகும்
 ராஜி அவர்கள்
வாழ்வின் எதார்த்தங்களை அழகிய நடையில் 
கவிதைகளாகத் பதியும்
சசிக்கலா அவர்கள்
வார்த்தைகளில் சாட்டை பொதித்து மனிதத்தை 
பதம் பார்க்கும் கவிதைகள் எழுதும
சீனி அவர்கள்
தார்த்தமான வாழ்க்கை தருங்களை எளிய நடையில், எதார்த்தமான வார்த்தை பிரயோகங்களோடு கவிதை எழுதும்
கீதமஞ்சரி அவர்கள்
http://geethamanjari.blogspot.in/


அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மீண்டும் சந்திப்போம் விரைவில்!!!!


Sunday, September 30, 2012

மீண்டும் வாங்கிய விருதிற்காக - 1

                     நீண்ட நீண்ட இடைவேலைக்குப் பிறகு தாங்கள் அனைவரையும் மீண்டும் என் வலைப்பதிவிற்கு வரவேற்கிறேன்! அன்று வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் வாங்கிய விருதிற்காக மீண்டும் இன்று இந்த பதிவு! மேலும் எனது தாமதத்திற்கு காரணம் கூறி பதிவினை இழுத்துவிட விரும்பவில்லை. மீண்டும் ஓருமுறை எனது பதிவினில் "தாமதம், நீண்ட இடைவேலை" என்ற வார்த்தைகள் வாராதவாரு பார்த்துக்கொள்ள முயற்சித்துள்ளேன். விளையாட்டாய் ஆரம்பித்ததாக இருப்பினும், பலநேரம் எனது வெட்டி பொழுதுகளையும் ஆட்கொண்டு என்னிடம் என்னையே காட்டிய எனது வலைப்பூவும் பதிவுகளும் இன்று நான் நிதானித்து நினைக்க நேரமில்லாமல் தவிக்கும் எனது நாட்களுக்குள் சிக்கித் தவிக்கிறது. மீண்டும் இருமுறை வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் என்னிடம் விருதினை பகிர்ந்து கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவரை பார்த்து காப்பி அடித்ததாக இருந்தாலும் சரி அவரை பின்தொடர்வதாக இருந்தாலும் சரி இதோ அவர் எமக்களித்த "Liebster Award" ஐ  நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஐந்து பதிவர்கள்.

 அருண் ஜீவன் அவர்கள்


சீனு அவர்கள்


 எஸ்தர் சபி அவர்கள்


சமீரா அவர்கள் விச்சு அவர்கள்

இன்று வரை இந்த பதிவுலகில் என்னோடு பயணித்த அனைத்த பதிவர்களுக்கும், என்னைத் தொடர்பவர்களுக்கும், எனக்கு தொடர்ந்து பின்னூட்டம் அளித்து என்னை ஊக்கப்படுத்துபவர்களுக்கும், நான் அறிந்தவர்களுக்கும், என்னை அறிந்தவர்களுக்கும், நான் தொடரும்(பல விஷயங்களை கற்க உதவிய) பதிவர்களுக்கும் எனது நன்றிகள் பல!!!!


Sunday, August 12, 2012

மீண்டும் ஒரு முறை!


                   எல்லாருக்கும் வணக்கம்! மீண்டும் எனக்கு கிடைத்த விருதினை பதிவு செய்ய இங்கு வந்திருக்கிறேன்! என்னோடு சேர்த்து 108 பதிவர்களோடு இவ்விருதினை பகிர்ந்து கொண்ட வை.கோபாலகிருஷணன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விருதினை பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் இவ்விருதினை பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார். அவரது குறிப்புகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 


                   விருதினை பெற்றவர்கள் அவர்களை பற்றி கூற வேண்டுமாம்! முன்பு இருமுறை விருதினை வாங்கிய போதும் நினைத்தேன் வாரம் ஒரு பதிவேனும் பதிந்து விட வேண்டும் என்று. காலம் போதவில்லை என்று எனது பிழையை இடம் மாற்ற விரும்பவில்லை. நான் தேர்ந்தெடுத்த துறையில் வேலை வாங்கிவிட்டதாக ஒருமுறை வாங்கிய விருதினை பதிக்கும் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மனித எண்ணத்திற்கும் காலனின் கிறுக்கல்களுக்கும் எத்தனை வேறுபாடுகள் என்ற எனது வரியினையே இங்கு நினைவு கூர்ந்து எட்டாத கனியாய் நினைத்த நான் விரும்பும் துறையில் வேலைவாய்ப்பு அமைந்திருக்கிறது. அதற்கான நேர்முகத்தேர்விற்கு தயாராகிக்கொண்டிருப்பதால் என்னால் சரியாக பதிவிட முடிவதில்லை. 
            மேலும் எனக்கு பிடித்த பத்து விஷயங்கள் இதோ!!
  1. மழலையோடு விளையாடுவது--நான்கே வயதான என் அக்கா மகனோடு சண்டை இடுவது
  2. மழையோடு விளையாடுவது-- மழையோடு விளையாடுவது எப்போதும் பிடிக்கும் ஆனால் மழையிலிருந்து தப்பிக்க எப்பொழுதும் என்னிடம் காரணம் இருக்கும் கையிலிருக்கும் புத்தகம், உடல் நிலை என்று. என்றாவது ஒரு முறையாவது மழையோடு மழையாகவேண்டும்.
  3. புத்தகம் படிப்பது--சில மாதங்களுக்கு முன்பே என் தோழியின் ஊக்குவிப்பால் புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இப்பொழுதுதான் மூன்று ஆங்கில நாவல்கள் முடிந்து நான்காவது படித்துக்கொண்டிருக்கிறேன்.
  4. லிட்டில் சிஸ்டர்ஸ் ஹோமும் என் தோழரும்--இளங்கலை பட்டம் பயிலுகையில் என் மாலை நேரத்து நடைபயணத்தில் சந்தித்த தோழர் இன்று முதியோர் இல்லத்தில் இருக்கிறார். அவரை பார்க்கச்செல்வது மிக பிடிக்கும்
  5. வாரமுதல் நாள்--என் அம்மாவுடன் செலவிட நான் ஏங்கும் ஞாயிற்றுக்கிழமைகள்!
  6. சைக்கிலில் பயணம் செய்வது--தினம் எனது கல்லூரிப்பயணம் தனிமையில் சைக்கிலில் நினைக்கையில் இனிக்கிறது. நாளை விடியலுக்கு ஏங்குகிறேன் என்னவனோடு(சைக்கில்) என் பயணம் தொடர
  7. தனிமை--தனிமையின் மௌனத்தில் என் இதயத்துடிப்பின் ஓசையை கேட்பது மிகவும் பிடிக்கும். இதை விட சந்தோஷமாய் வேறு எதுவும் அனுபவிப்பதற்கில்லை என தோன்றும் தருணங்கள்!
  8. கை வேலைகள்--சும்மா இருப்பதை விட சும்மா இருப்பதை ஏதாவது ஒன்று செய்து கொண்டே இருப்பேன். 
  9. பதிவு எழுதுவது--நான் ரசிக்கும் என் வலைப்பூவும் எனது பதிவுகளும்.
  10. அரட்டை--புது மனிதர்களையும் அவர்களது அனுபவங்களையும் பயில்வது.இப்போதைக்கு என் பாட்டியுடன் அரட்டை அடித்து அவர்களது அனுபவங்களை திரட்டிக்கொண்டிருக்கிறேன்

       இவை ஏற்கனவே எனது பதிவினில் குறிப்பிட்டவையே! மேலும் நான் இவ்விருதினை இருவரோடு பகிர்ந்து கொள்கிறேன்!


 என் பூவுலக உறவுகளுக்கும்
 என் பதிவுலக உறவுகளுக்கும்
 நான் இழந்துவிட்டு தவிக்கும்
 என் எழுத்துலக முதற்புள்ளிக்கும்
 எனது நன்றிகள் பல!!!!
Thursday, August 2, 2012

விலாசமில்லாத வினாக்கள்!!!


      "அப்பப்பா! இத்தனை பிரச்சனைகளை இவ்வளோ சின்ன வயசுல ஒரு பொண்ணா தனியா எப்படி சமாளிக்கிறது!!!" என்று ஜெனிலியா (சந்தோஷ் சுப்ரமனியம்) சொன்ன அதே வசனம் தான் இப்படி அசை போட்டுக்கொண்டே இந்த அரை வருடத் தேர்வை ஒரு வழியாக முடித்து ஒவ்வொரு  புத்தகமாக முடித்து மூடி வைப்பதற்குள் எத்தனை பாடு! இதற்கிடையில் நான் மேற்கொண்ட ஒரு சிறு சுற்றுப்பயனத்தை பகிர்ந்து கொள்ள மீண்டும் இந்த பதிவுப்பயணம்!!!! 
       எத்தனை இருப்பினும் மனித மனம் நினைப்பதற்கும் காலனின் கிறுக்கல்களுக்கும் வேறுபாடுகள் இருப்பது நிதர்சனம் தானே!!! எனது சுற்றுப்பயணம் வெளியூரோ வெளி நாடோ அல்ல. உள்ளூர் தான்! மூன்று நாள் பயணம் எத்தனை அனுபவங்கள் எத்தனை கேள்விகள்! எங்கயும் போகலிங்க! ஒரு சான்றிதழ் வாங்குவதற்காக மூன்று நாட்கள் வெவ்வேறு அரசு அலுவகங்களுக்கு செல்ல வேண்டியதாக இருந்தது!!! 
        முதல் நாள் நினைத்த காரியம் ஏதும் முடியவில்லை. நான் அலுவலகத்தை அடைந்து மூன்று மணி நேரம் ஆயிற்று யாரும் வருவதாக தெரியவில்லை. அங்கு எனக்கு முன்னே வந்தவர்கள் சிலரும் என்னைப்போலவே இருப்பவர்களிடம் அவ்வப்போது மணியைக் கேட்டுக்கொண்டும் வருகிறவர்கள் போகிறவர்களை வெறித்துப்பார்த்தபடியும் அமர்ந்திருந்தார்கள்! அவரவர்களுக்கு அவரவர் வேலை. நானும் பொழுது போகாமல் அருகில் இருந்த ஒரு நாற்பது நாற்ப்பத்தைந்து வயது பெண்ணிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன். அவர் அருகில் உள்ள ஊர் தான். அவருக்கு இடது கண் பாதித்திருந்தது! 
       அவர் ஊனமுற்றோருக்கான உதவித்தொகை வாங்குவதற்கு விண்ணப்பிப்பதற்காக வந்திருந்தார்! இத்தனை நாட்களாக வாங்காமலிருப்பதற்கு காரணம் கேட்டதற்கு அவர் தனக்கு இரண்டு வயதில் இருந்து பார்வை குறைப்பாடு இருந்ததும் நாற்பது வருடங்களாக தோட்டத்து வேலைக்கு போய் கூலி வாங்கிக்கொண்டிருந்ததனால் அந்த உதவித் தொகை அவசியமற்றதாக இருந்ததாகவும் இப்பொழுது உடல் ஒத்துழைக்காததாலும் வீட்டிலும் சரியான கவனிப்பு இல்லாததாலும் விண்ணப்பிப்பதாக சொன்னார்! "இத்தனை நாள் வாங்காம விட்டுட்டேன் ரெண்டு பசங்க இருக்கானுங்க பார்த்துப்பாங்க ன்னு தைரியமா இருந்துட்டேன் இத்தனை நாள் சம்பாரிச்சங்காட்டி ஊட்டுல வெச்சிருந்தானுங்க இப்போ உடம்பு சரி இல்லேன்னு நோவாளி ன்னு திட்டறானுங்க" ன்னு அவங்க சொன்னது இன்னும் கேட்கிறது. விதியிடம் சமர்ப்பிக்க ஆயிரம் வினாக்கள் விடையில்லாமல் இவர்கள் இதயத்தில் கனத்திருக்க கலங்கி நிற்கிறார்கள் இன்றும் அந்த காலத்திடம் விடை தேடி!      பின் அலுவலர் ஏதோ கூட்டத்திற்க்காக வெளியூர் சென்றிருப்பதாகவும் அடுத்த நாள் தான் வருவார் என்று செய்தி அறிந்ததால் அனைவரும் அவரவர் பாதையில் பிரிந்தோம்!!!!
           அடுத்த நாள் மீண்டும் அதே அலுவலகம் நான் அலுவலகத்தை அடையும் போது பூட்டியே இருந்தது. தென்னை மரத்தடியில் சைக்கிலை வசதியாக நிறுத்தி பின் சீட்டில் அமர்ந்து மரத்தில் சாய்ந்த படி நேற்றைய நிகழ்வுகளின் நினைவுகளை அசைபோட மனம் கொஞ்சம் கனத்து தான் போனது! நிமிடங்கள் சில கடந்தது தான் அறிந்தேன் தாமதமின்றி வந்துவிட்டார் தலைமை அலுவலர். 
      அப்பாடா என்று ஒருவழியாக கையெழுத்தை வாங்கிக்கொண்டு அடுத்த அழுவலகம் நில வருவாய் அலுவலர் அலுவலகத்தை அடைந்தேன். இங்க கையெழுத்து வாங்கிவிட்டால் வேலை முடிந்துவிடும் என்று (தப்பு கணக்கு போட்டுட்டேன்) நினைச்சிட்டே  போனா அங்க அவர் தாசில்தார் அலுவலகத்துக்கு போய்விட்டதாக சொன்னார்கள் இன்னைக்கு விட்டா விடுமுறை முடிந்துவிடும் என்று நினைத்து மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தேன். 
        இங்கு என்னோடு நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள்! வயதானவர் ஒருவர் மகனுக்கு வாரிசுச்சான்றிதழ் வாங்கவும், நடுத்தர வயது பெண்மணி குடியிருப்புச் சான்றிதழ் வாங்கவும், ஒருவர் மகளுக்கு ஜாதிச் சான்றிதழ் வாங்கவும் வந்திருந்தார்கள். மணி நன்பகலை கடந்தது அவரவர் உணவு அருந்தவும் சென்றுவிட்டு வந்துவிட்டார்கள் நான்கு முறை அங்கிருந்த அலுவலக உதவியாளரை கேட்டுவிட்டேன் அலுவலரின் வருகையைப்பற்றி. பாவம் அவர் எத்தனை பேருக்கு தான் பதில் சொல்வார். "அலுவலர் தாசில்தாரோட இருக்காங்க கூட்டம் முடிஞ்சு தான் வருவாங்க!" என்று. 
      உணவு அருந்திவிட்டு வந்தவர்கள் அனைவரும் அக்கரையுடம் ஒரு விசாரிப்பும் போட்டுவிட்டார்கள். "ஏம்மா சாப்பிட போகலியா? காலையில இருந்து இங்கேயே உட்கார்ந்திருக்க போய் கடையில எதாவது சாப்பிட்டுட்டு வாம்மா!" என்றார்கள். பின் உடனிருந்த பெண்மனி “தண்ணீர் வேண்டுமா?” என்று கேட்டதும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது! இந்த அனுதாபங்களும் விசாரிப்புகளும் நகரத்து மக்களிடம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நான் இந்த கிராமத்தை சேர்ந்தவளாக இருப்பதில் கொஞ்சம் கர்வமும் இருந்தது என்னுள்!!! எத்தனை சுதந்திரம்!
         
 அதே ஒரு முறை நகரத்து பக்கம் ஒரு அலுவலகத்துக்கு சென்றிருந்த போது அனைவரும் அருகில் இருப்பவர்கள் நல்லவர்களா? திருடர்களா? என்று ஒருவரை ஒருவர் வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருந்ததையும் கவனித்திருக்கிறேன்! ஏன் இத்தனை வேறுபாடுகள் என்று கொஞ்சம் அலசிக்கொண்டிருக்க அருகில் இருந்தவர்கள் ஏதோ உரையாட ஆரம்பித்தார்கள். அதில் ஒருவர் தன் பையில் இருந்து நான்கைந்து புகைப்படங்களை எடுத்துக்காட்டி தன் மகனை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். நான் அருகில் அமர்ந்திருக்க அவர் என்னிடமும் திரும்பி புகைப்படத்தை கொடுத்து “இது தான் மா என் புள்ள ஆறு மாசத்துக்கு முன்னால எடுத்தது எப்படி இருந்தான் பாரு” என்றார் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.    
    அப்பொழுது அவரிடம் உரையாடிக்கொண்டிருந்தவர் என்னிடம் "இவர் பையன் ரெண்டு மாசத்துக்கு முன்னால பாம்பு கடிச்சு இறந்துட்டான்" என்றார். அதற்கு இவரோ " இல்லமா! அவனக் காப்பாத்தி இருக்கலாம் என்னாச்சு ன்னே தெரியல நாங்க அப்பவே ஆஸ்ப்பத்திரியில சேத்திட்டோம் . ஒன்னும் பிரச்சனை இல்லேன்னு ஒரு ஊசியை மட்டும் போட்டாங்க அப்புறம் ஒருத்தரும் என் புள்ளய பாக்கவே இல்ல. கொஞ்ச நேரத்துலயே உசிரு போயிடுச்சு!! அவங்க தான் ஏதோ பன்னிட்டாங்க! என் புள்ள போய்ட்டான் அத சொல்லி என்னாவப்போது!!" என்றார். நடந்தது என்ன என்று அறிந்தவர் எவரும் இல்லை. அறியாமையால் சொல்கிறார்களா? அல்லது சிலரது அலட்சியமா? என்று எதுவாக இருப்பினும் இப்படி முதல் புள்ளியும் முற்றுப்புள்ளியும் இல்லாத பல கேள்விகள் இதயத்தை ஆழமாகத் தீண்டத்தான் செய்கிறது!
         
இந்த அவசர உலகத்தில் இந்த உயிரும் விலையற்றுப்போகுதோ என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது! கேள்வியோ பதிலோ அவரது பேச்சுக்கு என்னிடம் மருமொழி ஏதும் இல்லாமல் தான் திகைத்தேன்! தவறுகள் எங்கே என்று தெரிந்தால் தான் இங்கு திருத்தங்களை பற்றியே நாம் யோசிக்க முடியும்! ஒரு பக்கம் தவறுகள் என்றால் சில பக்கம் பிழைகளாகி நிற்கின்றன!!! இப்படி எதை எதையோ மனம் யோசிக்கப்போக அலுவலர் வந்துவிட்டார். எனது விண்ணப்பத்தை அவர் ஆராய்ந்து கொண்டிருக்க நானும் அவர் கையெழுத்திட காத்திருந்தேன்(கடைசி கட்ட காத்திருப்பு). ஒருவழியாக கையெழுத்தை வாங்கிவிட்டு வெளியேருகையில் என்னோடு இருந்த அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினேன்.
         அடுத்த நாள் அடுத்த கட்ட பயணம் தாசில்தார் அலுவலகம். எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் வளாகம் வெளியே இருந்து பல முறை கவனித்திருக்கிறேன்! அன்றும் அப்படி தான் இருந்தது. படிக்க எழுத தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் எழுதிகொடுத்துக்கொண்டிருக்கும் உதவியாளர், உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது என்று அங்கங்கு அச்சுருத்தும் பலகைகள், கட்டு கட்டாக குவியும் விண்ணப்பங்கள் என்று புதிதாய் நுழைந்த எனக்கு வித்தியாசம்மக தான் இருந்தது! எப்படியோ ஒரு வழியாக சரியான அலுவலரை அறிந்து விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு வெளியேருகையில் இருந்த நிறைவு இரண்டே நாட்களில் சான்றிதழை கையில் பெற்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க இந்த மூன்று நாட்கள் கழிந்த விதமும் சந்தித்த நபர்களும் இதயத்தில் தொடுக்கப்பட்ட கேள்விகளும் இன்னும் ஈரம் காயாமல் இருக்க நானும் அடுத்த நாள் விடியலை நோக்கி!!!!!!


Thursday, June 21, 2012

ஏக்கத்தோடு விநாடிகளும்!


ஏக்கத்தோடு விநாடிகளும்
நொடிந்து போகின்றன
அவர்களிடம் செலவிட
நேரமின்றி!

காத்திருத்தலும் காக்கவைப்பதும்
சுகம் தான் என்றாலும்
ஆயுளில் பாதி இப்படி
போராட்டத்தில்
தொலைவதேன்!

அன்னையின் மடியறையில்
அன்பைத்தேடும் வயதில்
புத்தகமூட்டைக்கு
பலியாகிறார்கள்!
மூன்று வயதில்
ஆனா ஆவன்னா
சொல்லத்தெரியவில்லை
என்று மழலையோடு
மன்றாடுகிறார்கள்
வளர்ந்த அரும்புகள்!

நெரிசல் நெருங்கிக்கொண்டிருக்கும்
நவீன பூமியில் ஒன்றோடு ஒன்று
முட்டி மோதி முளைக்கக்
கற்றுக்கொடுக்கிறார்களே
தவிர திமிரிய நெஞ்சத்தோடும்,
தளராத எண்ணத்தோடும்,
தடுமாறாத உள்ளத்தோடும்,
இழப்பிலிருந்து மீளவும்
பிறரை மீட்கவும்
கற்றுக்கொடுக்க தயங்குகிறார்கள்!

விதையிட்டதை விழித்தெழுப்பி
துளிர்த்துவிடச்செய்ய
தளராமல் தாங்கி
கடந்து போகிறார்கள்
விதி கொடுத்தவர்கள்!

வெயிலோடு கேள்விகேட்டு
வியர்வைத்துளியோடு
விடை அறிந்தவர்கள்
இன்று இயந்திரத்தோடு
முட்டி மோதுகிறார்கள்
பொழுதுபோக்காய்!

அறிவைத்தேடி அறிஞர்களையும்
அனுபவத்தையும் நாடியவர்கள்
நான்கு சுவற்றிற்குள்
கணினியை கடைகிறார்கள் இன்று!

இப்படி நவீனத்தோடு
காலம் கடத்தி மனிதம்
தொலைத்து தவிக்கும்
மலரும் மொட்டுக்களின்
தொலைந்த நாட்களை
மீட்க ஏக்கத்தோடு
விரதம் கிடக்கின்றன
இந்த விநாடிகளும்!

Thursday, June 14, 2012

ஒரு நிமிஷம்!

இன்று சர்வதேச வலைப்பதிவர் தினமாம்! நானும் சில நிமிடங்களுக்கு முன்பு தான் ஸாதிகா அவர்களின் வலைப்பூவில் அறிந்தேன்! வலைப்பதிவைப் பற்றிய அழகான தொகுப்பு! அனைத்து வலைப்பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த வலைப்பதிவர் தின வாழ்த்துக்கள்! 
எனது வலைப்பூ இன்னும் ஓராண்டை கூட கடக்கவில்லை என்பதால் இதுவே என் முதல் வருடம்! கடந்த பதினொரு மாதங்களில் இந்த பதிவுலகில் நான் கடந்து வந்த பாதையை ஒரு நிமிடம் திரும்பிப்பார்க்க வந்துள்ளேன் இன்று! 


நினைத்ததை கிறுக்கி
காகிதங்களை வீணடித்து
குப்பையை சேர்த்து
அம்மாவிடம் திட்டு வாங்கியதும்!

நீ கிறுக்கி எறிவதை
உன் பாதையின் கீறல்களாக்கி
பதித்துவிடு இந்த பதிவுலகில்
என்ற தோழியின்
சொல் கேட்டு ஆரம்பித்து,

பதித்துவிட்ட கிறுக்கல்களை
ரசிக்க சில ஓவியங்கள்
இங்கு கூடிப்போக,

சின்ன பிழை தான என்று
அனாவசியமாய் விட்டதையெல்லாம்
இன்று திருத்தி கொடுக்க வைத்தது
எனது கிறுக்கல்களை
ரசிக்கும் ஓவியங்களின்
வண்ணத்தீட்டல்கள்!

ஒரு நிமிடம் நின்று நினைக்க
நேரம் தேடிக்கொண்டிருக்கையில் கூட
தலைப்பை தேட மறந்திடவில்லை
அடுத்த பதிவிற்காக!

தேடல்கள் தீர்ந்த பின்னும்
மனம் ஒப்பாமல் கிடைத்ததை
செதுக்கியே நீண்டு போகிறது
நான் கடத்தும் காலம்!

இப்படி அப்படி என
எப்படியோ சில தினங்களில்
ஒரு வயதை அடைய காத்திருக்கும்
எனது வலைப்பூவிற்கு
தொடர் வருகையும்
கருத்துரையும் தரும்
எம் மூத்த பதிவர்களுக்கும் 
இளைய பதிவர்களுக்கும் எனது நன்றிகள்
செலுத்த சில நிமிடங்கள் இங்கு! 

இந்த பதிவுலகில் எனது வலைப்பூவிற்கும், எனக்கும் ஒரு அறிமுகம் தந்த ரமணி ஐயா அவர்களுக்கும்,தொடர்ந்து கருத்துரைகளை கொடுத்து ஊக்கப்படுத்திய விச்சு அவர்களுக்கும், சீனி அவர்களுக்கும், சீனு அவர்களுக்கும், கலை அக்காவுக்கும், தியாகசெல்வி, செய்தாலி அவர்களுக்கும், எஸ்தர் சபி அவர்களுக்கும், வே.சுப்ரமணியன் அவர்களுக்கும் எனது நன்றிகள்! மேலும் இந்த பதிவுலகைச்சேர்ந்த மற்ற பதிவர்களுக்கும், எனது வலைப்பூவை தொடரும் அனைத்து பதிவர்களுக்கும் எனது நன்றிகளும் வலைப்பதிவர் தின வாழ்த்துக்களும்! மீண்டும் சந்திப்போம்!

Sunday, June 10, 2012

மீண்டும் ஓர் பதிவு!

மிகுந்த சந்தோஷத்தோடு மீண்டும் ஒருமுறை என்னோடு பகிர்ந்துகொண்ட விருதிற்காக ஒரு பதிவு! விருதினை பெற்றதற்கும் மேலும் என்னோடு சேர்ந்து பத்து பதிவர்களோடு அதனை பகிர்ந்து கொண்ட சீனு அண்ணாவுக்கும் கலை அக்காவுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்! மேலும் "கலக்கற போ" என்று சொல்லி ஊக்கப்படுத்தியவர்களுக்கும், "இதை திருத்து" என்று தலையில் குட்டி எது சரி? என்று தேடி கிறுக்கியதை திருத்தி செதுக்கி கொடுக்க வைத்தவர்களுக்கும் எனது நன்றிகள்! நானும் இந்த விருதினை  பத்து பதிவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 


விருதினை ஏற்பவர்கள் அவர்களை பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டுமாம். இங்கு என்னை பற்றி சொல்ல. தனிமையை தேடுவதும், எனது கிறுக்கல்களோடு கிறங்கிக்கிடப்பதும் எனது வெட்டி நேரத்து வேலைகள்! எட்டாவதோ ஒன்பதாவதோ படிக்கையில் எழுத ஆரம்பித்ததாய் ஞாபகம். பின் தீண்டப்படாத தீக்குச்சிகளாய் என் இதயப்பெட்டிக்குள் சில காலங்கள் முடங்கிப்போய்விட்ட என் எழுத்துகள் மீண்டும் உயிர்த்தெழுந்தது கல்லூரிப்படிப்பின் போது, ஏதோ பொழுது போக்காய் ஆரம்பித்தது இந்த வலைப்பூ இன்று என் அதிக நேர பொழுதுகளையும் ஆட்கொண்டுவிடுகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்வதைப்போல் மாறிக்கொண்டே இருக்கும் மனித வாழ்வின் தருங்கள் எனக்கும் பல சமயம் ஒத்து வருவதில்லை தொடர்ந்து இடுகைகள் இடுவதற்கு. முடிந்த வரை வாரம் ஒரு பதிவேனும் போட வேண்டும் என்று முடிவு எடுக்கப்போய் இன்று மாதம் ஒரு பதிவாகி நிற்கிறது. இப்படி மாற்றம் தருகிறது இந்த காலம் எண்ணத்திற்கும் நிகழ்வுகளுக்கும். 

மனித வாழ்வின் வெவ்வேறு வாழ்க்கை தருங்கள் குழந்தையாய் சில காலம், பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், பின் வேலை, பணம், திருமணம், குழந்தைகள் என்று வாழ்வோடு ஒன்றிப்போன பல விஷயங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் புதிதாய் தான் தெரிகிறது. எனினும் ஒவ்வொரு கட்டத்திலும் அவரவர் சூழலுக்கு ஏற்ற சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. இது தான் என் எல்லை போல என்று துவண்டு வாழ்வின் நுனியில் தவிக்கையில் நெஞ்சோரம் துளிர்க்கும் ஒற்றை துளி நம்பிக்கையை கண்டு பிரமித்து நிற்கிறேன் பல சமயம். 


கணினித்துறையே வேண்டாம் என்று அடம்பிடித்து பதினொன்றாவதில் வணிகக்கணிதம் எடுத்துப் படித்தேன். அதே பிடிவாதத்தோடு என் விருப்பப்படி B.Com முடித்து CA முடிக்க எண்ணியது மாறி கல்லூரியில் கணிப்பொறியியல் துறை தேர்ந்தெடுக்க நேரிட்டது.நான் விரும்பாத Computer,mouse,Kayboard,CD,Drive எல்லாம் வித்தியாசமாக! மொழி என்றால் அது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, போன்றவை என்று தான் கல்லூரியில் கால் எடுத்து வைக்கும் வரை அறிந்திருந்தேன். மொழிக்கும் வேறொறு அர்த்தமா என்றிருந்தது முதலில். நான் பேசும் மொழியையே தவறுகள் இன்றி பேசவும் எழுதவும் முடிவதில்லையே கணினியை இயக்கும் மொழிகளை கற்கவேண்டுமே என்று வெறுப்பாக இருந்தது பழகப்பழக பிடித்துப்போனது ஆச்சர்யமாகத்தான் இருந்தது! பின் அதே துறையில் முதுகலை படிப்பு "எனக்குப் பிடிக்காது எனக்கு வராது" என்று நான் பயந்த கணினிப்படிப்பு இன்று என் வாழ்க்கையாய் போக சூழ்நிலைக்கு ஏற்ப மாறிப்போன மணதைக்கண்டால் விசித்திரமாக இருக்கிறது. அதே துறையில் வளாகத் தேர்வு மூலம் வேலையும் வாங்கியாயிற்று. வேறென்ன அடுத்த கட்டளையும் வந்தாகிவிட்டது. ஒரு வருடம் கழித்து சேரப்போகும் வேலையை தக்க வைத்துக்கொள்ள தயாராகிகொள் என்கிறது இன்றைய தகவல் தொழில் நுட்பத்துறை.

Monday, May 14, 2012

கத்தியின்றி ரத்தமின்றி!
ஏதோ ஒரு மூலையில்
எங்கோ நடப்பதாய் ஆனால்
அனைத்தும் நம்மை சுற்றியே!

பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்
துளிர்த்துவிட்டபோதிலும்
இன்னும் இருக்கிறார்கள்
திருமணச்சந்தையில்
திக்கற்று நிற்கும் சுடர்விழிகள்!

"அவங்க பொழங்காத ஜாதி"
என்று சிலர் சொல்லக்கேட்க்கையில்
தெரிகிறது அழியப்படாத
தீண்டாமை வன்மம்!

கத்தியின்றி ரத்தமின்றி
பேசாத வார்த்தைகளும்,
பேசிய மௌனமும்
ஒருவரை சிதைக்குமெனில்
குவளைக்குள் பதுங்கிக்கிடக்கும்
மனித மரங்கள்
அன்பை தொலைத்த இடம் எங்கே?


கருவறையிலேயே கல்லறை
கட்டுகிறார்கள்,இரக்கமின்றி
நிறுத்தப்பட்ட துடிப்புகளோடு
சிசுக்கொலைகளாய்!


பிஞ்சுகளை தனித்து விட
சுமை, ஊனம் என்று
ஏதேதோ காரணம்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்!


உயிரை யாசகமிட்டவர்கள்
தனித்து விடப்பட்டு,
தஞ்சம் புகுத்தப்படுகிறார்கள்
முதியோர் இல்லங்களில்!


கட்டுமரம் என்று காகிதக்கப்பலில்
கரையேர நினைப்பது
நிதர்சனம் அன்றோ?
என்று நினைத்த நொடியில்
தோற்று நிற்கிறேன் நான்
நிழலுலகில் நிஜத்தை தேடும்
சராசரிப்பெண்ணாய்!

Wednesday, May 2, 2012

சிதறிய கனவுகள்!


சிந்திய கனாத்துளிகளில்
சிதறிய வார்த்தைகளை கோர்த்து
ஒரு கவிதை வடித்து,
நெஞ்சின் ஓரம் துளிர்த்த
ஏக்கம் திருடி
அதற்கு உணர்வுகள் கொடுத்து,
தீண்டிய மழைத்துளிகளை செதுக்கி
உருவமும் கொடுத்து,
விழியோரம் கசிந்த
கண்ணீர்த்துளிகளை திரட்டி
வண்ணம் தீட்டி,
மழழையின் குறும்புகள் கடத்தி
மனிதமும் கொடுத்து,
எனது அர்த்தமற்ற கிறுக்கல்களின்
அர்த்தம் தேடி பெயரும் சூட்டிவிட்டேன்!
ஏனோ மௌனம் சாதிக்கிறது
உயிர்கொடுத்து ஸ்பரிசிக்க
சில்லிட்ட என் சிந்தனைகளை திருடி
காலம்!

Thursday, March 8, 2012

எனது ஊரைப்பற்றி!


என் ஊரைப்பற்றி எழுத தொடர் பதிவுக்கு அழைத்த கலை அக்கா வுக்கு எனது நன்றிகள்!
   எங்கே ஆரம்பிப்பது எதை சேர்ப்பது எதை விடுவது என்று விளங்காமலே எனது எழுத்துக்களை ஆரம்பிக்கிறேன்! எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் என்னும் அழகிய நகராட்சி! அங்கும் இங்குமாய் சிறு சிறு அழகிய அணைகளோடும், அணைத்து நிற்கும் மலைகளோடும் என்றும் பூத்துக்குலுங்கும் மல்லிகை வாசத்தோடும் அதோடு சேர்ந்து மல்லுக்கட்டும் சம்பங்கிப்பூவின் வாசமும், மிரட்டும் வனப்பகுதியும், அதில் அடங்கும் யானைகளும்,  புலிகளும், மான்களும் என கொள்ளை அழகை கொள்ளை அடிக்க மனம் காத்திருப்பதாய் பார்ப்பவர்களை சளனப்படுத்திப்போகும் அழகிய ஊர்! வீரத்திற்கு பெயர் போன ஊர்!!!பொருங்கள் வருகிறேன் வீரப்பனுக்கு சொந்த ஊர்! இல்லாதபோதும் இன்னும் சத்தியமங்கலமா? என்று கேட்பவர்களை விட வீரப்பன் இருந்த ஊர் தானே என்று கேட்பவர்கள் தான் அதிகம்!!!    குளிர் காலத்தில் அதிகப்படியான குளிரும் வெயில் காலத்தில் அதிகப்படியான வெயிலும் கொண்டு புரியாத புதிராயும் விளங்கும் விந்தையான எனது பூமி! தினம் புதியதாய் தோன்றும்! வாழைத்தோட்டங்களும், கரும்புத்தோட்டங்களும் அலுக்காமல் தோன்றி நிற்கும் வருடம் முழுதும். தூரத்தில் தெரியும் மலைக்கூட்டங்கள் கூட ஆயிரம் கற்ப்பனைகளை தூண்டிவிட்டுப்போகும் ஒரு பெண் படுத்திருப்பதாய், காளை மாடு திரும்பிப்பார்ப்பதாய்!
        சுற்றுலா தளங்களுக்கு பெயர் போன ஊரும் கூட ஒன்றா? இரண்டா? கொடிவேரி அணை, பவானி சாகர் அணை, குண்டேரிப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை, என நாங்கு அணைகள் உள்ளன!

   
  பவானி சாகர் அணைக்கு கல்லாறு மற்றும் மாயாறு என்ற இரண்டு றுகள் ஆதாரமாக உள்ளது! இந்த அணையிலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு பின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது!சத்தியமங்கத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது! ஆசியாவிலேயே 28 ஆவது பெரிய மண் அணையும் கூட!     கொடிவேரி அணை க்கு நீர்வரத்து பவானிசாகர் அணையிலிருந்து வருகிறது! இது சத்தியமங்கலத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது!
       பிரசித்தி பெற்ற 108 அம்மன் தளங்களில் ஒன்றான பண்ணாரி அம்மன் கோவிலும் இங்கு தான் உள்ளது! சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ள அழகான கோவில்! இங்கு நடக்கும் வருடாந்திர குண்டம் திருவிழா மிகவும் புகழ் பெற்றது! வெவ்வேரு ஊர்களிலிருந்தும் பல மக்கள் இங்கு கூடுவார்கள்! ஒரு மாசம் பண்ணாரியே(கோவில் இருக்கும் ஊர் பெயர்) கலை கட்டும்! பண்ணாரி அருகே இருக்கும் சத்தியமங்கலம் வன சரணாலயம் யானைகளுக்கும், புலிகளுக்கும் பலவகை மான்களுக்கும்,பல்வேறு உயிரினங்களுக்கும், தாவர வகைகளுக்கும் இருப்பிடமாக திகழ்கிறது. கோடை காலத்தில் பண்ணாரி சாலையில் யானைகள் ஜாலியாக நடந்து போவதை அடிக்கடி பார்க்கலாம்! சராசரியாய் 800 முதல் 900 யானைகள் வரை இருக்கிறதாம்!       இங்கு இருக்கும் பல மலைகள் பலங்குடியின மக்களுக்கு இருப்பிடமாக இருக்கிறது! இன்னும் சரியான பேருந்து வசது, அடிப்படை வசதிகள் கூட இல்லாத சில கிராமங்களும் இதில் அடங்கும் என்பதே வருத்தமான விஷயம்! தாளவாடி, கெட்டவாடி, திம்பம், காடகநல்லி, குன்று, தலமலை, நான் அறிந்த சில மலைகள் இவை!!! இதில் சுற்றுலாத் தளங்களும் அடங்கும்!!!!!

       
       சத்தியமங்கலத்திலிருந்து 4 கிலோ  மீட்டர் தொலைவில் இருக்கிறது எனது கிராமம்! கிராமம் தான் ஆனால் ஒரு சின்ன தொழில் நகரம் என்று கூட சொல்லலாம்! காரணம் அருகிலேயே பிரபல தனியார் சர்க்கரை ஆலை, ஒரு தொழில்நுட்பக் கல்லூரி, ஒரு கலை அறிவியல் கல்லூரி, அரசுப்பள்ளி, தனியார் பள்ளி, சிறுவர் விளையாட்டு பூங்கா, நூலகம் என கிட்ட தட்ட ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு ஒரு மினி நகரம்! வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி, கணினிப்பயிற்சி, கை தொழில் பயிற்சி என தனியார் கல்வி நிறுவனம் செய்து வருகிறது!எங்கள் ஊரில் வெகு விமரிசையாக நடக்கும் தைப்பூசத்திருவிழா பாலதண்டாயுதபானி திருக்கோவிலில்(மலைக்கோவில்) தவளகிரி மலை என்று அழைப்பார்கள்.
      இதற்கு மேல் என்ன சொல்வது ஒருமுரை வந்து பாருங்கள் இங்கிருந்து செல்ல மனம் வராது!!!!!!!


மேலும் ஊரைப் பற்றிய பதிவினை தொடர Seeni அவர்களை அழைக்கிறேன்!


படங்களுக்கு விக்கிபீடியா, கூகிள் இமேஜஸ் க்கு மிக்க நன்றி!!!!!

Sunday, February 26, 2012

எங்கே(எவற்றை) விலைபேசுகிறோம் நாம்?

            பிரம்மாண்டத்திலும், ஆடம்பரத்திலும் மயங்கி கண்ணாடி குவளைக்குள் அடைக்கப்பட்ட காற்றாய் உருவமின்றி நம் எண்ணங்களும் அங்கும் இங்கும் அலைமோத தான் செய்கிறது! வலியவர்களின் வலிமையை கண்டு பிரம்மித்து நிற்ப்பதும், எளியவர்களை கண்டு ஏழனம் பேசுவதும், அவசியமற்றதற்கு ஆசைப்பட்டு அடிமையாய் போவதும் இன்னும் நாம் மனிதர்களாய் இருக்கிறோம் என்பதை மறக்கச் செய்துவிடும்! கைவிரல்களுக்குள் அடக்கிவைக்க வேண்டிய பணத் தேவைகளை பட்டம் விட்டு பறக்கச் செய்து அதற்கும் முண்டியடித்து அடையத் துடிக்கிறோம் மற்றவர்களை தாழ்த்தி! எதற்கு மயங்குகிறோம்? எதை நோக்கி பயணிக்கிறோம் என்றறியாமல் எனது எழுத்துக்களும் அர்த்தமின்றி! 

  
 பிரம்மாண்டமான பெரிய பெரிய வர்த்தக வளாகங்களில் நினைத்த விலையை விட அதிக விலை கொடுத்தேனும் விரும்பியதை வாங்கத் தயாராகிறோம்! அன்றாட வாழ்க்கைக்கே அன்றைய வருமானத்தை நம்பும் சிறிய கடைகளில் ஒரு கர்சீப் வாங்க 2, 3, ரூபாய் க்கு பேரம் பேசுகிறோம்! நம்மில் எத்தனை பேர் சொல்லியிருப்போம் "10000 ரூபாய் இந்த துனி ------ கடையில வாங்குனது! " என்றோ " காலையில வண்டிக்காரன் கிட்ட கேரட் வாங்கினேன் 15 ரூபாய் சொன்னான் குறைச்சு பேசி 12 ரூபாய்க்கு வாங்கினேன்! " என்றோ இங்கு நாம் எவற்றை விலை பேசுகிறோம்! வலியவர்களிடம் கொடுத்துவிட்டு எளியவர்களிடம் சுரண்டுகிறோம்!!! 


         இவை குடும்பத்தில் மட்டும் அல்ல! அங்கும் இங்கும் எங்கும் அனைத்தும்  நம்மை சுற்றியே! நம்மை அறியாமல் நம்மையும் தாக்குகிறதே??? முன்பெல்லாம் கல்வித் தரத்தையும் அடிப்படை வசதிகளையும் மேன்படுத்த பள்ளிகளால் சிறிய தொகைகள் பெற்றோர்களிடமிருந்து நன்கொடை என்று விருப்பத்தின் பேரில் வசூலிக்கப்படும்! இப்படி விருப்பத்தின் பெயரில் கொடுக்கப்பட்ட நன்கொடை 1000 ங்களில் ஆரம்பித்து இன்று இலட்சங்களில் வன்மையாக வசூலிக்கப்படுகிறது! நாம் இன்னும் அந்த பூஜியங்களில் தொலைந்து நிற்கிறோம்!"நன்கொடை" என்ற வார்த்தை அர்த்தம் தொலைந்து சுரண்டல் என்பதாகிவிட்டது! 
        இதனை அறிந்திருந்தும் நாம் இன்னும் நாம் கொடுக்கும் இலட்சங்களில் அங்கிருக்கும் கல்வித்தரத்தை அளந்து கொண்டிருக்கிறோம்! முதல் தலைமுறையாய் கல்லூரிக்கு போகட்டும் என பணத்தை கட்டி விட்டு பையனுக்கு வேலைக்காக காத்திருக்கும் விவசாயிகள் எத்தனை பேர்! "இவ்வளோ பணம் வாங்கறாங்க இங்க நல்லா சொல்லித்தருவாங்க! கண்டிப்பா என் பையனுக்கு வேலை கிடைச்சிடும்! " என்று ஒருமுறை அழுக்கு வேட்டிக்காரர் ஒருவர் சொன்னது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது! 

    
 "LKG க்கு நாளை முதல் அட்மிஷன் துவங்குகிறது! வேறு எந்த வகுப்பிற்கும் அட்மிஷன் கிடையாது " இது வேறு  ஒன்றும் இல்லை ஒரு பள்ளியில் நான் கண்ட அறிவிப்புப்பலகை! கொஞ்சம் அதிரவே வைத்தது விசாரித்தப்போது! வருடா வருடம் LKG க்கு மட்டுமே அட்மிஷன் நடக்கிறதாம்! இடையில் வேறு பள்ளிகளில் இருந்து மாற்றம் செய்து வர விரும்பும் மாணவர்களை அந்த பள்ளியில் பெரிய வகுப்புகளில் சேர்க்க இயலாது! அதனால் எப்படியாவது இந்த பள்ளியில் பையனுக்கு(பொன்னுக்கு) சீட் வாங்கிடனும் என்று விடியலுக்கு முன் பள்ளியில் விழித்து நிற்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்!! சீட்டுக்காக சிபாரிசுக்கடிதமும் தேடுகிறார்கள்!(சிபாரிசுகளுக்கும் தனி விலை அங்கே!!)  


    எத்தனை இருப்பினும் வியாபார நோக்கில்லாமல் முடிந்த வரை நல்ல தரமான கல்வியை கொடுக்க முற்படும் நிறுவனங்களுக்கு ஏன் நாம் இன்னும் குழந்தைகளை சேர்க்க தயங்குகிறோம்! பணம் கம்மியாக கேட்பதே குறையாகிவிட்டது! கல்வித் தரத்தையும், ஆசிரியர்களையும் பார்த்து பள்ளி கல்லூரிகளை தேர்ந்தெடுத்தது போய் ஸ்மார்ட் க்ளாஸ் யும் நன்கொடையையும் பார்த்து தேர்ந்தெடுப்பதும்,  என் உயர் அதிகாரி பிள்ளை அங்கே தான் படிக்கிறது என் பிள்ளையும் அங்கே தான் படிக்க வேண்டும் என்று நம் தேவைகள் அடுத்தவர்களின் வாழ்க்கை தரத்தை சார்ந்திருப்பதை அறியாமலேயே தேர்ந்தெடுப்பதும் இங்கு எங்கே? எதற்கு? விலைபோகிறோம் , எவற்றை விலைபேசுகிறோம் நாம்????? நம்மை உயர்த்துகிறோம் என்கிற பெயரில் நம்மை நாமே தாழ்த்திக்கொண்டிருக்கிறோம்!

Tuesday, February 14, 2012

என் கல்லூரி சாலை!
      மேகம் சிலிர்த்துவிட்டு போன பனி சாரலை சேகரித்து நெஞ்சோடு புதைத்துக்கொள்ள ஆசை தோன்றுமே, அதில் நனையாமல் நனைந்து என் அவனோடான(சைக்கில்) பயணம் என்னுள் பதியாமல் பதிந்ததை பதிவுலகில் பதித்துவிட்டு போக வந்திருக்கிறேன்! 
   
   விலகாமல் விலகி நான் கண்விழிக்கும் மலைக்கோவிலை அணைத்துநிற்கும் மார்கழி மாதத்து பனிக்கு மத்தியில் கூப்பாடு போட்டு சிலிர்த்து நிற்கும் மயிலும், காலை நேரத்து தென்றலுக்கு வளையாமல்   வளையும் தென்னை மரங்களும் வணக்கம் சொல்லிவிட்டு போகுமே   கொஞ்சம் எனக்கும் சொல்வதாய்!  

           
  சில்வண்டுகளும் சில்லிட்டுபோகும் சில்லென்ற பனிக்காற்றில் பனிபோர்த்திய பாதையில் என் தனிமையோடு மல்லுக்கட்டி கீச்சிட்டுக்கொண்டே வரும் என் சைக்கிலும், எத்தனை பதட்டத்தில் வந்தாலும் என்னை திரும்பிப்பார்க்க வைத்துவிடும் தெரு முற்றத்து அம்மன் கோவிலும், என் மௌனம் களைத்துவிட்டு போகும், ஐந்துக்களின் கூக்குரலும் மனதோடு ஒட்டிக்கொண்டு துள்ளல் போடுமே நாள் முழுக்க! 

        
     மண்ணோடு ஒன்றி வளர்ந்துவிட போராடும் நட்டுவைத்த வாழைக்கன்றுகளுக்கு மத்தியில் புறாக்களின் சரசம் எனக்கு மட்டும் துள்ளியமாய் கேட்குமே! வழி நெடுக துணை வரும் என்னோடு, பூத்துனிற்கும் சாமங்கிப்பூவின் வாசமும் அம்மாவின் அறிவுரை சுவாசமும்! 

           
            " 'ச்ச' இவ்வளவு தூரம் தனியாக வந்துவிட்டேனா? " என நான் பிரம்மித்த என் கடந்த கால நினைவுகளை நினைவூட்டிப்போகும் மைல்கற்கள்! பனி முத்தங்களை ஏந்தி நானத்தில் வளையாமல் வளைந்து மருகும் புல்தரையின் அழகில் வார்த்தைகளை தொலைத்துவிட்டு தவிக்கிறேன் பல சமயம்! துரித வேகத்தில் 10 நிமிடங்களில் கடந்துவிட வேண்டிய என் பாதையை கடக்க எனக்கு மட்டும் 20 நிமிடங்கள் ஆகிறது! 


              கல்லூரிக்கு நேரமாகிய காலை பயனமே இப்படி கழிகையில் எனது மாலை நேரத்து பயனம் சொல்லவா வேண்டும்!!! மாலையும் அல்லாது இரவும் அல்லாத ஆறைத்தாண்டி மணி முல்லும் நொடி முல்லும் ஒட்டிக்கொள்ளும் இருள் கவ்வும் நேரத்தில் வண்டுகளின் கீச்சிடல்களும், மின்மினிப்பூச்சியின் ஒளியும் துணை வருமே வீடு திரும்புகையில்!! சோர்ந்து போகும் மாலை கூட சிலிர்த்துக்கொண்டு துள்ளி குதிக்கும் குஞ்சுகளோடு கூட்டம் கூட்டமாய் கூடு திரும்பும் பறவைகளை கண்டு!


இப்படியான என் நினைவுகளுக்கு உரிமை கொண்டாடி அடுத்த மார்கழிக்கு காத்திருக்கின்றன என் பாதைகள்!