Sunday, February 26, 2012

எங்கே(எவற்றை) விலைபேசுகிறோம் நாம்?

            பிரம்மாண்டத்திலும், ஆடம்பரத்திலும் மயங்கி கண்ணாடி குவளைக்குள் அடைக்கப்பட்ட காற்றாய் உருவமின்றி நம் எண்ணங்களும் அங்கும் இங்கும் அலைமோத தான் செய்கிறது! வலியவர்களின் வலிமையை கண்டு பிரம்மித்து நிற்ப்பதும், எளியவர்களை கண்டு ஏழனம் பேசுவதும், அவசியமற்றதற்கு ஆசைப்பட்டு அடிமையாய் போவதும் இன்னும் நாம் மனிதர்களாய் இருக்கிறோம் என்பதை மறக்கச் செய்துவிடும்! கைவிரல்களுக்குள் அடக்கிவைக்க வேண்டிய பணத் தேவைகளை பட்டம் விட்டு பறக்கச் செய்து அதற்கும் முண்டியடித்து அடையத் துடிக்கிறோம் மற்றவர்களை தாழ்த்தி! எதற்கு மயங்குகிறோம்? எதை நோக்கி பயணிக்கிறோம் என்றறியாமல் எனது எழுத்துக்களும் அர்த்தமின்றி! 

  
 பிரம்மாண்டமான பெரிய பெரிய வர்த்தக வளாகங்களில் நினைத்த விலையை விட அதிக விலை கொடுத்தேனும் விரும்பியதை வாங்கத் தயாராகிறோம்! அன்றாட வாழ்க்கைக்கே அன்றைய வருமானத்தை நம்பும் சிறிய கடைகளில் ஒரு கர்சீப் வாங்க 2, 3, ரூபாய் க்கு பேரம் பேசுகிறோம்! நம்மில் எத்தனை பேர் சொல்லியிருப்போம் "10000 ரூபாய் இந்த துனி ------ கடையில வாங்குனது! " என்றோ " காலையில வண்டிக்காரன் கிட்ட கேரட் வாங்கினேன் 15 ரூபாய் சொன்னான் குறைச்சு பேசி 12 ரூபாய்க்கு வாங்கினேன்! " என்றோ இங்கு நாம் எவற்றை விலை பேசுகிறோம்! வலியவர்களிடம் கொடுத்துவிட்டு எளியவர்களிடம் சுரண்டுகிறோம்!!! 


         இவை குடும்பத்தில் மட்டும் அல்ல! அங்கும் இங்கும் எங்கும் அனைத்தும்  நம்மை சுற்றியே! நம்மை அறியாமல் நம்மையும் தாக்குகிறதே??? முன்பெல்லாம் கல்வித் தரத்தையும் அடிப்படை வசதிகளையும் மேன்படுத்த பள்ளிகளால் சிறிய தொகைகள் பெற்றோர்களிடமிருந்து நன்கொடை என்று விருப்பத்தின் பேரில் வசூலிக்கப்படும்! இப்படி விருப்பத்தின் பெயரில் கொடுக்கப்பட்ட நன்கொடை 1000 ங்களில் ஆரம்பித்து இன்று இலட்சங்களில் வன்மையாக வசூலிக்கப்படுகிறது! நாம் இன்னும் அந்த பூஜியங்களில் தொலைந்து நிற்கிறோம்!"நன்கொடை" என்ற வார்த்தை அர்த்தம் தொலைந்து சுரண்டல் என்பதாகிவிட்டது! 
        இதனை அறிந்திருந்தும் நாம் இன்னும் நாம் கொடுக்கும் இலட்சங்களில் அங்கிருக்கும் கல்வித்தரத்தை அளந்து கொண்டிருக்கிறோம்! முதல் தலைமுறையாய் கல்லூரிக்கு போகட்டும் என பணத்தை கட்டி விட்டு பையனுக்கு வேலைக்காக காத்திருக்கும் விவசாயிகள் எத்தனை பேர்! "இவ்வளோ பணம் வாங்கறாங்க இங்க நல்லா சொல்லித்தருவாங்க! கண்டிப்பா என் பையனுக்கு வேலை கிடைச்சிடும்! " என்று ஒருமுறை அழுக்கு வேட்டிக்காரர் ஒருவர் சொன்னது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது! 

    
 "LKG க்கு நாளை முதல் அட்மிஷன் துவங்குகிறது! வேறு எந்த வகுப்பிற்கும் அட்மிஷன் கிடையாது " இது வேறு  ஒன்றும் இல்லை ஒரு பள்ளியில் நான் கண்ட அறிவிப்புப்பலகை! கொஞ்சம் அதிரவே வைத்தது விசாரித்தப்போது! வருடா வருடம் LKG க்கு மட்டுமே அட்மிஷன் நடக்கிறதாம்! இடையில் வேறு பள்ளிகளில் இருந்து மாற்றம் செய்து வர விரும்பும் மாணவர்களை அந்த பள்ளியில் பெரிய வகுப்புகளில் சேர்க்க இயலாது! அதனால் எப்படியாவது இந்த பள்ளியில் பையனுக்கு(பொன்னுக்கு) சீட் வாங்கிடனும் என்று விடியலுக்கு முன் பள்ளியில் விழித்து நிற்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்!! சீட்டுக்காக சிபாரிசுக்கடிதமும் தேடுகிறார்கள்!(சிபாரிசுகளுக்கும் தனி விலை அங்கே!!)  


    எத்தனை இருப்பினும் வியாபார நோக்கில்லாமல் முடிந்த வரை நல்ல தரமான கல்வியை கொடுக்க முற்படும் நிறுவனங்களுக்கு ஏன் நாம் இன்னும் குழந்தைகளை சேர்க்க தயங்குகிறோம்! பணம் கம்மியாக கேட்பதே குறையாகிவிட்டது! கல்வித் தரத்தையும், ஆசிரியர்களையும் பார்த்து பள்ளி கல்லூரிகளை தேர்ந்தெடுத்தது போய் ஸ்மார்ட் க்ளாஸ் யும் நன்கொடையையும் பார்த்து தேர்ந்தெடுப்பதும்,  என் உயர் அதிகாரி பிள்ளை அங்கே தான் படிக்கிறது என் பிள்ளையும் அங்கே தான் படிக்க வேண்டும் என்று நம் தேவைகள் அடுத்தவர்களின் வாழ்க்கை தரத்தை சார்ந்திருப்பதை அறியாமலேயே தேர்ந்தெடுப்பதும் இங்கு எங்கே? எதற்கு? விலைபோகிறோம் , எவற்றை விலைபேசுகிறோம் நாம்????? நம்மை உயர்த்துகிறோம் என்கிற பெயரில் நம்மை நாமே தாழ்த்திக்கொண்டிருக்கிறோம்!