Sunday, June 10, 2012

மீண்டும் ஓர் பதிவு!

மிகுந்த சந்தோஷத்தோடு மீண்டும் ஒருமுறை என்னோடு பகிர்ந்துகொண்ட விருதிற்காக ஒரு பதிவு! விருதினை பெற்றதற்கும் மேலும் என்னோடு சேர்ந்து பத்து பதிவர்களோடு அதனை பகிர்ந்து கொண்ட சீனு அண்ணாவுக்கும் கலை அக்காவுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்! மேலும் "கலக்கற போ" என்று சொல்லி ஊக்கப்படுத்தியவர்களுக்கும், "இதை திருத்து" என்று தலையில் குட்டி எது சரி? என்று தேடி கிறுக்கியதை திருத்தி செதுக்கி கொடுக்க வைத்தவர்களுக்கும் எனது நன்றிகள்! நானும் இந்த விருதினை  பத்து பதிவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 


விருதினை ஏற்பவர்கள் அவர்களை பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டுமாம். இங்கு என்னை பற்றி சொல்ல. தனிமையை தேடுவதும், எனது கிறுக்கல்களோடு கிறங்கிக்கிடப்பதும் எனது வெட்டி நேரத்து வேலைகள்! எட்டாவதோ ஒன்பதாவதோ படிக்கையில் எழுத ஆரம்பித்ததாய் ஞாபகம். பின் தீண்டப்படாத தீக்குச்சிகளாய் என் இதயப்பெட்டிக்குள் சில காலங்கள் முடங்கிப்போய்விட்ட என் எழுத்துகள் மீண்டும் உயிர்த்தெழுந்தது கல்லூரிப்படிப்பின் போது, ஏதோ பொழுது போக்காய் ஆரம்பித்தது இந்த வலைப்பூ இன்று என் அதிக நேர பொழுதுகளையும் ஆட்கொண்டுவிடுகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்வதைப்போல் மாறிக்கொண்டே இருக்கும் மனித வாழ்வின் தருங்கள் எனக்கும் பல சமயம் ஒத்து வருவதில்லை தொடர்ந்து இடுகைகள் இடுவதற்கு. முடிந்த வரை வாரம் ஒரு பதிவேனும் போட வேண்டும் என்று முடிவு எடுக்கப்போய் இன்று மாதம் ஒரு பதிவாகி நிற்கிறது. இப்படி மாற்றம் தருகிறது இந்த காலம் எண்ணத்திற்கும் நிகழ்வுகளுக்கும். 

மனித வாழ்வின் வெவ்வேறு வாழ்க்கை தருங்கள் குழந்தையாய் சில காலம், பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், பின் வேலை, பணம், திருமணம், குழந்தைகள் என்று வாழ்வோடு ஒன்றிப்போன பல விஷயங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் புதிதாய் தான் தெரிகிறது. எனினும் ஒவ்வொரு கட்டத்திலும் அவரவர் சூழலுக்கு ஏற்ற சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. இது தான் என் எல்லை போல என்று துவண்டு வாழ்வின் நுனியில் தவிக்கையில் நெஞ்சோரம் துளிர்க்கும் ஒற்றை துளி நம்பிக்கையை கண்டு பிரமித்து நிற்கிறேன் பல சமயம். 


கணினித்துறையே வேண்டாம் என்று அடம்பிடித்து பதினொன்றாவதில் வணிகக்கணிதம் எடுத்துப் படித்தேன். அதே பிடிவாதத்தோடு என் விருப்பப்படி B.Com முடித்து CA முடிக்க எண்ணியது மாறி கல்லூரியில் கணிப்பொறியியல் துறை தேர்ந்தெடுக்க நேரிட்டது.நான் விரும்பாத Computer,mouse,Kayboard,CD,Drive எல்லாம் வித்தியாசமாக! மொழி என்றால் அது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, போன்றவை என்று தான் கல்லூரியில் கால் எடுத்து வைக்கும் வரை அறிந்திருந்தேன். மொழிக்கும் வேறொறு அர்த்தமா என்றிருந்தது முதலில். நான் பேசும் மொழியையே தவறுகள் இன்றி பேசவும் எழுதவும் முடிவதில்லையே கணினியை இயக்கும் மொழிகளை கற்கவேண்டுமே என்று வெறுப்பாக இருந்தது பழகப்பழக பிடித்துப்போனது ஆச்சர்யமாகத்தான் இருந்தது! பின் அதே துறையில் முதுகலை படிப்பு "எனக்குப் பிடிக்காது எனக்கு வராது" என்று நான் பயந்த கணினிப்படிப்பு இன்று என் வாழ்க்கையாய் போக சூழ்நிலைக்கு ஏற்ப மாறிப்போன மணதைக்கண்டால் விசித்திரமாக இருக்கிறது. அதே துறையில் வளாகத் தேர்வு மூலம் வேலையும் வாங்கியாயிற்று. வேறென்ன அடுத்த கட்டளையும் வந்தாகிவிட்டது. ஒரு வருடம் கழித்து சேரப்போகும் வேலையை தக்க வைத்துக்கொள்ள தயாராகிகொள் என்கிறது இன்றைய தகவல் தொழில் நுட்பத்துறை.