Thursday, August 2, 2012

விலாசமில்லாத வினாக்கள்!!!


      "அப்பப்பா! இத்தனை பிரச்சனைகளை இவ்வளோ சின்ன வயசுல ஒரு பொண்ணா தனியா எப்படி சமாளிக்கிறது!!!" என்று ஜெனிலியா (சந்தோஷ் சுப்ரமனியம்) சொன்ன அதே வசனம் தான் இப்படி அசை போட்டுக்கொண்டே இந்த அரை வருடத் தேர்வை ஒரு வழியாக முடித்து ஒவ்வொரு  புத்தகமாக முடித்து மூடி வைப்பதற்குள் எத்தனை பாடு! இதற்கிடையில் நான் மேற்கொண்ட ஒரு சிறு சுற்றுப்பயனத்தை பகிர்ந்து கொள்ள மீண்டும் இந்த பதிவுப்பயணம்!!!! 
       எத்தனை இருப்பினும் மனித மனம் நினைப்பதற்கும் காலனின் கிறுக்கல்களுக்கும் வேறுபாடுகள் இருப்பது நிதர்சனம் தானே!!! எனது சுற்றுப்பயணம் வெளியூரோ வெளி நாடோ அல்ல. உள்ளூர் தான்! மூன்று நாள் பயணம் எத்தனை அனுபவங்கள் எத்தனை கேள்விகள்! எங்கயும் போகலிங்க! ஒரு சான்றிதழ் வாங்குவதற்காக மூன்று நாட்கள் வெவ்வேறு அரசு அலுவகங்களுக்கு செல்ல வேண்டியதாக இருந்தது!!! 
        முதல் நாள் நினைத்த காரியம் ஏதும் முடியவில்லை. நான் அலுவலகத்தை அடைந்து மூன்று மணி நேரம் ஆயிற்று யாரும் வருவதாக தெரியவில்லை. அங்கு எனக்கு முன்னே வந்தவர்கள் சிலரும் என்னைப்போலவே இருப்பவர்களிடம் அவ்வப்போது மணியைக் கேட்டுக்கொண்டும் வருகிறவர்கள் போகிறவர்களை வெறித்துப்பார்த்தபடியும் அமர்ந்திருந்தார்கள்! அவரவர்களுக்கு அவரவர் வேலை. நானும் பொழுது போகாமல் அருகில் இருந்த ஒரு நாற்பது நாற்ப்பத்தைந்து வயது பெண்ணிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன். அவர் அருகில் உள்ள ஊர் தான். அவருக்கு இடது கண் பாதித்திருந்தது! 
       அவர் ஊனமுற்றோருக்கான உதவித்தொகை வாங்குவதற்கு விண்ணப்பிப்பதற்காக வந்திருந்தார்! இத்தனை நாட்களாக வாங்காமலிருப்பதற்கு காரணம் கேட்டதற்கு அவர் தனக்கு இரண்டு வயதில் இருந்து பார்வை குறைப்பாடு இருந்ததும் நாற்பது வருடங்களாக தோட்டத்து வேலைக்கு போய் கூலி வாங்கிக்கொண்டிருந்ததனால் அந்த உதவித் தொகை அவசியமற்றதாக இருந்ததாகவும் இப்பொழுது உடல் ஒத்துழைக்காததாலும் வீட்டிலும் சரியான கவனிப்பு இல்லாததாலும் விண்ணப்பிப்பதாக சொன்னார்! "இத்தனை நாள் வாங்காம விட்டுட்டேன் ரெண்டு பசங்க இருக்கானுங்க பார்த்துப்பாங்க ன்னு தைரியமா இருந்துட்டேன் இத்தனை நாள் சம்பாரிச்சங்காட்டி ஊட்டுல வெச்சிருந்தானுங்க இப்போ உடம்பு சரி இல்லேன்னு நோவாளி ன்னு திட்டறானுங்க" ன்னு அவங்க சொன்னது இன்னும் கேட்கிறது. விதியிடம் சமர்ப்பிக்க ஆயிரம் வினாக்கள் விடையில்லாமல் இவர்கள் இதயத்தில் கனத்திருக்க கலங்கி நிற்கிறார்கள் இன்றும் அந்த காலத்திடம் விடை தேடி!      பின் அலுவலர் ஏதோ கூட்டத்திற்க்காக வெளியூர் சென்றிருப்பதாகவும் அடுத்த நாள் தான் வருவார் என்று செய்தி அறிந்ததால் அனைவரும் அவரவர் பாதையில் பிரிந்தோம்!!!!
           அடுத்த நாள் மீண்டும் அதே அலுவலகம் நான் அலுவலகத்தை அடையும் போது பூட்டியே இருந்தது. தென்னை மரத்தடியில் சைக்கிலை வசதியாக நிறுத்தி பின் சீட்டில் அமர்ந்து மரத்தில் சாய்ந்த படி நேற்றைய நிகழ்வுகளின் நினைவுகளை அசைபோட மனம் கொஞ்சம் கனத்து தான் போனது! நிமிடங்கள் சில கடந்தது தான் அறிந்தேன் தாமதமின்றி வந்துவிட்டார் தலைமை அலுவலர். 
      அப்பாடா என்று ஒருவழியாக கையெழுத்தை வாங்கிக்கொண்டு அடுத்த அழுவலகம் நில வருவாய் அலுவலர் அலுவலகத்தை அடைந்தேன். இங்க கையெழுத்து வாங்கிவிட்டால் வேலை முடிந்துவிடும் என்று (தப்பு கணக்கு போட்டுட்டேன்) நினைச்சிட்டே  போனா அங்க அவர் தாசில்தார் அலுவலகத்துக்கு போய்விட்டதாக சொன்னார்கள் இன்னைக்கு விட்டா விடுமுறை முடிந்துவிடும் என்று நினைத்து மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தேன். 
        இங்கு என்னோடு நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள்! வயதானவர் ஒருவர் மகனுக்கு வாரிசுச்சான்றிதழ் வாங்கவும், நடுத்தர வயது பெண்மணி குடியிருப்புச் சான்றிதழ் வாங்கவும், ஒருவர் மகளுக்கு ஜாதிச் சான்றிதழ் வாங்கவும் வந்திருந்தார்கள். மணி நன்பகலை கடந்தது அவரவர் உணவு அருந்தவும் சென்றுவிட்டு வந்துவிட்டார்கள் நான்கு முறை அங்கிருந்த அலுவலக உதவியாளரை கேட்டுவிட்டேன் அலுவலரின் வருகையைப்பற்றி. பாவம் அவர் எத்தனை பேருக்கு தான் பதில் சொல்வார். "அலுவலர் தாசில்தாரோட இருக்காங்க கூட்டம் முடிஞ்சு தான் வருவாங்க!" என்று. 
      உணவு அருந்திவிட்டு வந்தவர்கள் அனைவரும் அக்கரையுடம் ஒரு விசாரிப்பும் போட்டுவிட்டார்கள். "ஏம்மா சாப்பிட போகலியா? காலையில இருந்து இங்கேயே உட்கார்ந்திருக்க போய் கடையில எதாவது சாப்பிட்டுட்டு வாம்மா!" என்றார்கள். பின் உடனிருந்த பெண்மனி “தண்ணீர் வேண்டுமா?” என்று கேட்டதும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது! இந்த அனுதாபங்களும் விசாரிப்புகளும் நகரத்து மக்களிடம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நான் இந்த கிராமத்தை சேர்ந்தவளாக இருப்பதில் கொஞ்சம் கர்வமும் இருந்தது என்னுள்!!! எத்தனை சுதந்திரம்!
         
 அதே ஒரு முறை நகரத்து பக்கம் ஒரு அலுவலகத்துக்கு சென்றிருந்த போது அனைவரும் அருகில் இருப்பவர்கள் நல்லவர்களா? திருடர்களா? என்று ஒருவரை ஒருவர் வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருந்ததையும் கவனித்திருக்கிறேன்! ஏன் இத்தனை வேறுபாடுகள் என்று கொஞ்சம் அலசிக்கொண்டிருக்க அருகில் இருந்தவர்கள் ஏதோ உரையாட ஆரம்பித்தார்கள். அதில் ஒருவர் தன் பையில் இருந்து நான்கைந்து புகைப்படங்களை எடுத்துக்காட்டி தன் மகனை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். நான் அருகில் அமர்ந்திருக்க அவர் என்னிடமும் திரும்பி புகைப்படத்தை கொடுத்து “இது தான் மா என் புள்ள ஆறு மாசத்துக்கு முன்னால எடுத்தது எப்படி இருந்தான் பாரு” என்றார் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.    
    அப்பொழுது அவரிடம் உரையாடிக்கொண்டிருந்தவர் என்னிடம் "இவர் பையன் ரெண்டு மாசத்துக்கு முன்னால பாம்பு கடிச்சு இறந்துட்டான்" என்றார். அதற்கு இவரோ " இல்லமா! அவனக் காப்பாத்தி இருக்கலாம் என்னாச்சு ன்னே தெரியல நாங்க அப்பவே ஆஸ்ப்பத்திரியில சேத்திட்டோம் . ஒன்னும் பிரச்சனை இல்லேன்னு ஒரு ஊசியை மட்டும் போட்டாங்க அப்புறம் ஒருத்தரும் என் புள்ளய பாக்கவே இல்ல. கொஞ்ச நேரத்துலயே உசிரு போயிடுச்சு!! அவங்க தான் ஏதோ பன்னிட்டாங்க! என் புள்ள போய்ட்டான் அத சொல்லி என்னாவப்போது!!" என்றார். நடந்தது என்ன என்று அறிந்தவர் எவரும் இல்லை. அறியாமையால் சொல்கிறார்களா? அல்லது சிலரது அலட்சியமா? என்று எதுவாக இருப்பினும் இப்படி முதல் புள்ளியும் முற்றுப்புள்ளியும் இல்லாத பல கேள்விகள் இதயத்தை ஆழமாகத் தீண்டத்தான் செய்கிறது!
         
இந்த அவசர உலகத்தில் இந்த உயிரும் விலையற்றுப்போகுதோ என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது! கேள்வியோ பதிலோ அவரது பேச்சுக்கு என்னிடம் மருமொழி ஏதும் இல்லாமல் தான் திகைத்தேன்! தவறுகள் எங்கே என்று தெரிந்தால் தான் இங்கு திருத்தங்களை பற்றியே நாம் யோசிக்க முடியும்! ஒரு பக்கம் தவறுகள் என்றால் சில பக்கம் பிழைகளாகி நிற்கின்றன!!! இப்படி எதை எதையோ மனம் யோசிக்கப்போக அலுவலர் வந்துவிட்டார். எனது விண்ணப்பத்தை அவர் ஆராய்ந்து கொண்டிருக்க நானும் அவர் கையெழுத்திட காத்திருந்தேன்(கடைசி கட்ட காத்திருப்பு). ஒருவழியாக கையெழுத்தை வாங்கிவிட்டு வெளியேருகையில் என்னோடு இருந்த அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினேன்.
         அடுத்த நாள் அடுத்த கட்ட பயணம் தாசில்தார் அலுவலகம். எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் வளாகம் வெளியே இருந்து பல முறை கவனித்திருக்கிறேன்! அன்றும் அப்படி தான் இருந்தது. படிக்க எழுத தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் எழுதிகொடுத்துக்கொண்டிருக்கும் உதவியாளர், உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது என்று அங்கங்கு அச்சுருத்தும் பலகைகள், கட்டு கட்டாக குவியும் விண்ணப்பங்கள் என்று புதிதாய் நுழைந்த எனக்கு வித்தியாசம்மக தான் இருந்தது! எப்படியோ ஒரு வழியாக சரியான அலுவலரை அறிந்து விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு வெளியேருகையில் இருந்த நிறைவு இரண்டே நாட்களில் சான்றிதழை கையில் பெற்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க இந்த மூன்று நாட்கள் கழிந்த விதமும் சந்தித்த நபர்களும் இதயத்தில் தொடுக்கப்பட்ட கேள்விகளும் இன்னும் ஈரம் காயாமல் இருக்க நானும் அடுத்த நாள் விடியலை நோக்கி!!!!!!