Tuesday, October 16, 2012

மீதமாய் போவேனோ நானும்!

           கற்ற அர்த்தங்கள் யாவையும் தொலைத்து மீதமாய் போவேனோ நானும் இன்று. கடந்து செல்கிற பாதையில் திருப்பங்களை கண்டு வியந்து நிற்கிறேன். வாழும் வாழ்க்கையின் அர்த்தங்களை தொலைப்பதாய் ஏதோ இதயத்தை இருக்குவதாய். சில்லாய் சிதறிப்போவேனோ நானும் செதுக்கும் கரங்கள் என்னை திருத்தி உயிர்பிக்கும் முன்.
     
           
அழுகையும் ஆனந்தமும் அர்த்தமின்றி திமிரிப்போகும், மனதின் வேகமும் அறியாது, எண்ணத்தின் சுழற்சியும் அறியாது, அன்னையின் மடியறையில் உறங்கி,உருகி, பயம் அறியாது, பருவம் அறியாது துள்ளி விளையாண்ட தருணங்கள் இன்று அனைத்தும் அறிகையில் தேங்கிக்கிடக்கிறது வெறும் மீதமாய் என்னுள்.
                         பார்த்தவர்கள் அனைவரும் தெரிந்தவர்கள், பழகினவர்கள் அனைவரும் தோழர்கள், புத்தக மூட்டைக்குள் புதைந்து போவதும் பொழுதுபோக்காய் மாறிப்போய், படித்த எழுத்துக்களும் படிக்காத பாடமும் கனவுகளிலும், நிஜத்திலும் திணரடிக்குமே அந்த பதின் பருவத்தில் அனைத்தும் இன்று என்னுள் வெறும் மீதமாய் இருப்பதை நினைத்து திகைக்கிறேன்.
                 
வெறும் பாடம், பரிட்சை, நண்பர்கள், விடுமுறை, விளையாட்டு, என்று வாழ்க்கையின் அர்த்தங்கள் புரியாது ஆனவம், அகம்பாவம், கோபம், வெறுப்பு அறியாது நினைத்த நொடியில் அனைத்தையும் மறந்து, மறந்த நொடியில் அனைத்தையும் மீட்டு எத்தனை விந்தைகள், எத்தனை வியப்புகள் எப்படி அதனுள் தொலைந்து போனேன் எப்படி என்னை மீட்டு புதுமைக்கு பழகிப்போனேன் என்று அறியத் துணிந்து தோற்கிறேன் நித்தமும் இன்றுவரை.
                 தொடரும் நட்பு வட்டம், தொடர்புகொள்ள முடியாது தொலைந்து போன தோழி, இன்று அடையமுடியாத சந்தோஷத் தருணங்கள் அனைத்தும் அழகிய நினைவுகளாய். இழப்புகளை நினைவுபடுத்தும் நினைவுகள் கூட சில சமயம் தளரும் சமயத்தில் தோள் கொண்டு தாங்கத் தவிக்கையில் தள்ளாடித்தான் போவேன் நானும். வீழ்கையில் விழித்துக்கொண்டு துளிர்விட்டு மீட்கத் துணியுமே நம்மை நம்பிக்கை என்ற பெயரில். வீழ்கையில் மட்டுமே மீளக் கற்றுக்கொண்டேன், மீளக் கற்கையில் மட்டுமே வாழக் கற்றுக்கொண்டேன்.
               
        வெற்றுக் கிறுக்கல்களாய், அர்த்தமின்றி, பயணிக்கும் பாதையறிந்தும் தெளிவின்றி, எத்தனை தயக்கங்கள், மாற்றங்கள், அரும்புகளாய் இருந்தும் வளர்ந்துவிட்ட துணிவு, ஏதும் அறியாதிருந்தும் பள்ளியை கடந்தவுடன் எதையோ சாதித்துவிட்ட திருப்தி, விரும்பாத சீருடைகளுக்கு மத்தியில் விரும்பிய வண்ண உடைகள் முதிர்ச்சியை காட்டுவதும், மெலிந்து விட்ட புத்தகமூட்டை, குறைந்துபோன படிக்கும் நேரம், தளர்த்தப்பட்ட விதிமுறைகள், கொடுக்கப்பட்ட சுதந்திரம் அதில் தொலையாமல், கலையாமல் பயணித்த நிகழ்வுகள், பக்குவப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, கிறுக்கல்களுக்கு மத்தியில் சிதறிக்கிடந்த வாழ்வின் அர்த்தங்களை தேடிப்பிடித்து கோர்த்து அணிந்து அழகு பார்க்கையில் என் கண்ணாடியின் பிம்பம் காட்டியது என்னை அல்ல என் மனதை. எத்தகைய நினைவுகள் நிஜத்தின் பிம்பங்களாய்.
             மனதின் அலைச்சல்கள் அடங்கிப்போகிறது, எனது ஒவ்வொரு அசைவையும் அலசி சரி பார்க்க நேரம் கொடுக்கிறது எண்ண ஓட்டங்கள் ஓய்வெடுத்து, பயணிக்கும் பாதை சரியா என திரும்பிப்பார்க்கிறேன், துணை இன்றி நடக்க பழகிக்கொண்டேன், அனைத்தும் என்னோடு இருப்பினும் ஏதுமின்றி போவதாய், கற்ற அனைத்தும் மனதின் ஓரத்தில், இனி வாழ்க்கையில் நிதானித்து நிலைக்க ஓட்டம், எதை தேடிப் பயணிக்கிறேன் என்று அறியவே இத்தனை காலங்கள், எப்படி அடைவது என பாதை காட்டிட விரல்கள் தேடி விடையின்றி பயணத்தை தொடங்கிவிட்டேன். "இதெல்லாம் என்ன் இனி தான் எல்லாம்???", "இனி வாழ்க்கையில் எத்தனை பார்க்கனும்???", "எதையும் யோசிச்சு முடிவெடு!!!!" போன்ற எத்தனை அச்சுறுத்தல்கள். அடைந்ததை தொலைத்து அதன் வடுக்களை மட்டும் நிஜத்தின் மீதமாய் சுமந்து, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நானும் கல்லூரி வாழ்க்கையின் கடைசி துளி சந்தோஷத்தை ருசித்தபடி.
 
   
      சில காலங்களாய் எதை அனுபவிக்கிறேன் ருசிக்கிறேன் என சந்தோஷப்பட்டுக் கொண்டேனோ அதை மீண்டும் இழந்து விடுகிற தவிப்பு.இன்றுவரை அவளும் நானுமாய் அங்கும் இங்குமாய் எங்குமாக கடந்த பாதைகளை தொலைத்து போவேனோ பெண்ணாய் பிறந்த நானும். பெண்ணாய் போனாய் என்று என்றோ ஆதங்கப்பட்டதை நினைத்து என்றும் வருத்தம் கொள்கிறவள் இன்று நிஜம் கண்டு திணருகிறாள் என்னுள் தொலைத்த அவளை மீட்க. 
         இங்கு நான் எதையும் இழந்துவிடவில்லை இங்கு ஏதும் அர்த்தமின்றி போகவில்லை புதுப் பாதையை நோக்கி பயணிக்கையில் கடந்த பாதையை திரும்பிப்பார்த்து எதையோ தொலைத்ததாய் தவிக்கும் சாமான்யனின் தவிப்பே என்னுடையதும். எனது பயணங்கள் முடியவில்லை பாதை தான் மாறிப்போகின்றன, தேடல்கள் நீண்டுபோகின்றன, துணிவுகள் துளிர்விடுகின்றன.        
         அனைத்தும் இன்று என்னுள் மீதமாய் மட்டுமே சுமக்கத்துணிந்து நானும் போவேனோ நினைவுகளின் மீதமாய்!!!!!

11 comments:

 1. ஒவ்வொரு நிகழ்விலும் ஓராயிரம் அர்த்தங்கள் நிரம்பி இருக்கின்றன.பார்த்து ரசித்து ருசித்து பேசவும் தெரிந்த மனிதப்பிறவியாக நாம் சென்றதில் இனிமையான நிகழ்வுகளை மட்டுமே அசைபோட்டு இனி வரும் நாட்களை இனிமையானதாக்குவோம் அருமையான பகிர்வு சகோ.

  ReplyDelete
 2. இங்கு நான் எதையும் இழந்துவிடவில்லை இங்கு ஏதும் அர்த்தமின்றி போகவில்லை புதுப் பாதையை நோக்கி பயணிக்கையில் கடந்த பாதையை திரும்பிப்பார்த்து எதையோ தொலைத்ததாய் தவிக்கும் சாமான்யனின் தவிப்பே என்னுடையதும். எனது பயணங்கள் முடியவில்லை பாதை தான் மாறிப்போகின்றன, தேடல்கள் நீண்டுபோகின்றன, துணிவுகள் துளிர்விடுகின்றன.
  அனைத்தும் இன்று என்னுள் மீதமாய் மட்டுமே சுமக்கத்துணிந்து நானும் போவேனோ நினைவுகளின் மீதமாய்!!!!!


  மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கத் தூண்டும்
  அருமையான ஆக்கம்
  மனம் கவர்ந்த அருமையான படைப்பு
  தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. //எதை தேடிப் பயணிக்கிறேன் என்று அறியவே இத்தனை காலங்கள்// அருமையான வரிகள் சகோ தேர்ந்தெடுத்த வார்த்தைகள்,
  என் ஒரே சொல் அடிகடி எழுதுங்கள், எழுத்து கைவரும் பொழுது கைவிட்டு விடாதீர்கள்

  ReplyDelete
 4. யப்பா... என்னமாய் எழுத வருகிறது யுவராணிக்கு... அருமையான படைப்பம்மா. சீனு சொல்வது போல் எழுத்து கைவரப் பெற்ற பிறகு அடிக்கடி எழுதும்மா.

  ReplyDelete
 5. @sasikala
  தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அக்கா!

  ReplyDelete
 6. @Ramani
  தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சார்!

  ReplyDelete
 7. @சீனு
  கண்டிப்பாக அண்ணா இனி தொடர்ந்து எழுதுவேன்!வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அண்ணா!

  ReplyDelete
 8. @பால கணேஷ்
  என்னாலும் எழுத முடியும் என்று காட்டிக்கொடுத்ததே இந்த பதிவுலகம் தான் சார்! இனி கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன்!வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துரைக்கும் எனது நன்றிகள் சார்!

  ReplyDelete
 9. // அனைத்தும் இன்று என்னுள்
  மீதமாய் மட்டுமே
  சுமக்கத்துணிந்து நானும் போவேனோ
  நினைவுகளின் மீதமாய்!!!!! //

  வாழ்க்கையின் முடிவில் மிஞ்சுவது நினவுகள்தானே! இதனை எண்ணிப் பார்க்கும் நோக்கில் ஒரு படைப்பு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும் எனது நன்றிகள் சார்!

   Delete
 10. நினைவலைகளை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

  பசுமையான நினைவுகள் மட்டுமே நம்மோடு பலகாலம் தங்கிவிடுகின்றன. மற்ற எல்லாமே நாளடைவில் மறந்தும் போகின்றன என்பதே உண்மை.

  பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete