Sunday, December 31, 2017

நேசிப்போம்!


வருடங்கள் பல கடந்தோம்!
வாழ்ந்தென்ன செய்தோம்?
சாதனைகள் பல புரிந்தோம்!
திரும்பிப்பார்க்கையில்
உடன் இருப்பவர்களை கவனித்தோமா?
உறவை தாங்கினோமா?
உணர்வை புரிந்தோமா?
நேசிக்கப்படுவதை அதிகம்
விரும்பும் நாம்
அவ்வளவு அதிகம்
நேசித்தோமா?
எல்லோரையும் நேசிப்போம்!
எல்லாவற்றையும் நேசித்து செய்வோம்!
வாழும் வாழ்க்கை 
சலித்துப் போகாதிருக்க!
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Sunday, December 24, 2017

எண்ணம்போல்!(மீதமாய் போவேனோ நானும்-பகுதி-3)

          நம் வாழ்வு நம் எண்ணம் போலே அமையும். நல்லதும் கெட்டதும் நம் பார்வையினுடையது அல்ல நம் மனதினுடையது. ஒருவரை பார்த்தவுடன் அவர்கள் இப்படி தான் என முடிவு செய்து பழக ஆரம்பித்தால் அதுவே அவர்கள் குணம் என்று நம் மனது நம்பி அதை தாண்டி அவர்களை தெரிந்து கொள்ளாது. பின்பு அவர்கள் நிஜ முகம் காண்கையில் நிச்சயம் இரண்டில் ஒன்றை அடைவோம் ஏமாறுதல் அல்லது குற்ற உணர்வு.


              நாம் செய்யும் மிகப்பெரிய தவறு பார்த்தவுடன் ஒருவரை நம்பி அனைத்தையும் பகிர்வது, நாம் ஒரு விஷயத்தை ஒருவரிடம் பகிர்கையில் கவனிக்கவேண்டியது என்ன விஷயம் பகிர்கிறோம், யாரிடம், எந்த சூழலில், எந்த மனநிலையில். காரணம் நாம் அனைத்தையும் பகிர்வது நம்மை பற்றும் கைபிடியை அவர்களுக்கு கொடுப்பது போல. நாளை நாம் பணிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை வரலாம். நம் சுதந்திரம் பறிபோகும். மனதளவில் அடிமையாக வேண்டி இருக்கும்.
              அதேபோல் சில சூழ்நிலைகளில் நாம் உணர்ச்சிவசப்படும் போது பேசாதிருப்பதே நலம். நாம் பேசவேண்டியவர்களுடனான நமது உறவு சரியில்லை என்றால் அதன் கோபம், வெறுப்பு, பழைய நிகழ்வுகளை நம் மனது தேடிப்பிடித்து பேசித்தீர்த்திட துடிக்கும். அந்நேரத்தில் நாம் நிதானமிழந்து பேசுகிறபோது உறவு முறியும். நிதானமில்லாதிருக்கையில் பேசத்திருப்பதே சாலச்சிறந்தது.


                  பலநேரம் நாம் கண்டதும், கேட்டதுமான சில விஷயங்களை அலசி ஆராய்ந்து உண்மை எது, பொய் எது என்று அறியாமல் அதை பகிர விழைகிறோம். அதனால் பாதிக்கப்படுவது நம்மைப்போல் ரத்தமும், சதையும், உணர்வும், உயிரும் உள்ள ஒருவரே. எண்ணங்களை அடக்காவிடில் மனதை அடக்க இயலாது. மனதை அடக்காவிடில் நாவை அடக்க இயலாது, உறவையும் காக்க இயலாது. வாழ்க்கை பாடத்தை கற்றல் அழகு! அறிவாய் கற்போம், அன்பாய் கடப்போம்! உறவுகளையும் தாங்குவோம் நேசத்தால் நல்ல எண்ணத்தால்...


மீதமாய் போவேனோ நானும்- பகுதி - 1

மீதமாய் போவேனோ நானும்! - பகுதி - 2
Thursday, December 21, 2017

ஈரம்!


அறியேன் விதையிட்ட விரல்களை!
அடைக்காத்த மண்ணும் இங்கில்லை!
தூக்கி எறியப்பட்ட 
இடமும் தெரியவில்லை!
பாவமென்று ஈரமான இடத்தில்
நட்டுவைத்தவர் எவரோ
அவர் முகமும் அறியேன்
நன்றி சொல்ல!
நாட்டப்பட்ட இடத்தில்
அவ்வப்போது நனைத்துபோகும்
மழைத்துளியை சேகரித்து
வேரூன்றிய நினைவுகள் தீண்ட..
இன்று பனைமரம் போல் நின்றாலும்
எனது பெயரோ
அறியாதவர்களுக்கு 'அனாதை'
அறிந்தவர்களுக்கு 'ஆதரவற்றவன்'
புரியாதவர்களுக்கு 'இல்லாதவன்'
புரிந்தவர்களுக்கு 'நண்பன்'..
வருடங்கள் கடந்தும்
என் பெயரை
மாற்றத்துணியாத காலம்
இன்று கொடுக்கும் பதில்..
என்னருகே திடிரென்று துளிர்த்த
இளந்தளிரை காண்கையில்
தாராளமாய் பகிர
என் வேரில் சுரக்கும் ஈரம்!
பகிர மனமும் உண்டு
வேரூன்ற பெலனுமுண்டு
நான் தத்துக்கொடுத்தேன்
என் பெயரை!

Friday, December 1, 2017

குவளைக்குள் நான்!

வியந்து தவிக்கிறேன்
சுருங்கிப்போன
என் உலகத்தை கண்டு!
என் கைப்பேசியின்
உருவமில்லா பொத்தானை
அழுத்தி அழுத்தி
தேய்ந்து போவது
என் விரல் நுனியோடு
என் மனதும்!

என் பள்ளிப்பருவத்து தோழியோடு
கடிதத்தில் நீடித்த நட்பு
காணாமல் போனது
கைபேசி வந்தவுடன்..
அவளுக்கும் எனக்கும்
நேரமில்லை
கடிதம் எழுதவும் படிக்கவும்..
பின்னொருமுறை அவளிடம்
பேசியதான ஞாபகத்தோடு
தொலைந்துபோனது நட்பும்!

தொலைவிலிருந்து வரும்
பிறந்தநாள் வாழ்த்தட்டையை
எதிர்பார்த்து
தபால்காரருக்கு காத்திருந்த
நாட்களில் கற்றுக்கொண்ட
பொறுமையை இழக்கிறேன்..
இன்று ஒருமுறை அழைப்பை
ஏற்காவிடில் "தாங்கள் அழைத்த எண் தற்போது அணைத்து
வைக்கப்பட்டுள்ளது." என்று
கேட்கையில்...சேகரித்து வைத்த
கடிதங்களும்
பகிர்ந்து கொண்ட
பரிசுகளும்
வாதாடி மீட்குமே
கோபத்திலும் வெறுப்பிலும்
தொலைத்த உறவை..
இன்று அந்த மீட்பையும்
உருவமில்லா உணர்வில்லா
மேகத்தில் சேகரித்து
மறந்தும்போகிறோம் காணாது
இதற்கும் தேடுகிறேன்
நினைவூட்டல் அமைப்பை!என் இளம்பிராயத்து
நினைவுகளை என்
மனதில் பதிந்திருக்கிறேன்..
என் நண்பர்களோடு பேசி விளையாடிய
நாட்களை இன்று நினைவூட்டிக்கொள்ள!
தருணங்களை பதிவு செய்ய
அன்று என்னிடம் எந்த 
கேமராக்களும் இல்லை..
சேகரித்து வைக்க எந்த
மேகமும் இல்லை..
அதனாலே இன்றும்
நட்பும் அன்பும் என் மனதோடு!

அன்று பல கை மாறி 
மூட்டைக்குள் சிக்கி தவித்து 
கசங்கி கை சேரும்
அந்த வெற்று காகிதத்தில்
வெட்ட வெளிச்சமாய்
காட்டப்பட்ட உணர்வுகள்
இன்று குறுஞ்செய்தியில்
வெட்டப்பட்டு ஒட்டப்பட்டு
எத்தனை ஸ்மைலீக்கள் போட்டாலும் அவை
என் மனதை எட்டாது போகிற
ரகசியம் அறியேன் நான்!


முகமும் அறியாத
முகவரியும் அறியாத
முகபுத்தக நண்பர்களிடம்
முகமூடி அணிந்து..
என்னில் இல்லாத 
என்னை காண்பித்து..
அவர்கள் மனதில்
என் உருவம் பதிக்க பாடுபட்டு..
என்றோ ஒருநாள்
என் முகம் வெளிப்பட
மாயமாய் போன நட்பில்
வீணாய் போகுதே காலம்!

உறவுகளிடம் கொடுக்க மறந்த
என் விடுமுறை நாட்களை
இரவறியாது பகலறியாது
திருடிப்போகிறது
கைப்பேசி விளையாட்டுக்கள்!


நானும் குவளைக்குள் தான்
இருக்கிறேன்!
எல்லோரும் இருக்கும்
அதே இடத்தில்!
மாயைக்குள் தத்தளித்து
நிஜஉலகம் கண்டு ரசித்து
நெருங்கும்போதே
தினரிப்போகிறேன்
குவளைக்குள் இருப்பதை அறிந்து!

மாயமான கண்ணாடி சுவற்றை
உடைக்கையில் சிதறிய
உணர்வுகளை களைந்தெரிந்து
வேர்கொள்கிறேன் நிஜத்தில்!

Wednesday, November 22, 2017

களவு!


உயிர்தெழு என்று
என்னை விதையிட்ட
உன்னைக்காண
வேரூன்றி துளிர்க்கையில்
தாங்கிப்பிடித்தாள் அன்னை
கனவோடு களவுபோனது
ஈரமும்!

Sunday, November 19, 2017

முழுமையடையாய்!


அவளின்றி நீ முழுமையுமல்ல..
உன்னை விடுத்து  எதையும் செய்ய
அவளுக்கு விருப்பமுமில்லை..
உன் முழுமையில் பிரித்தெடுத்து
விதைக்கப்பட்டவளானதால்!

Friday, November 17, 2017

என் முதல் கவிதை!


தொலைந்து போன
என் கனவுகளை
தேடிப்பிடித்து சேகரித்து
சித்திர தேரில் பூட்டி
என் எண்ணங்களுக்குள்
வீதி உலா செல்கிறது
என் முதல் கவிதை!

Sunday, November 12, 2017

மாற்றத்திற்காக!

உறவுக்கும் உணர்வுக்குமான
யுத்தம் நீள்கிறது வாதங்களின்றி,
சிலநேரம் வாதிட
வார்தைகளின்றிபோகிறது
என்ன செய்வது?எண்ணங்களை வெளிப்படுத்த
கிடைக்காத சரியான வார்த்தை
காரணமாகிபோகிறது
பல நேரம் வாதத்திற்கும்
சில நேரம் பிரிவிற்கும்!

என் எண்ணங்களை சித்தரித்து,
என் உணர்வுகளுக்கு
உருவம் கொடுத்து,
என் கனவுகளையும்
அவர்களே செத்துக்குகிறார்கள்!

பாதையில் முட்களிட்டு
நான் தவறும்படி பதிவிருந்து
நான் விழுகையில் மகிழ்ந்து
மீள்கையில் மீண்டும் விழும்படி
என் பாதையை வகுக்கிறார்கள்
உனக்கு துணை நிற்கிறேன்
என்று சொல்லி!

நான் விழுகையிலும்
சந்தோஷித்தே மீள்கிறேன்
என்றாலும் பரிதாப அம்பெய்து
அதிலும் பெருமை கொள்கிறார்கள்!

நான் துணிகையில்
துணை நில்லாது,
நான் துவலுகையில்
துணிச்சலில்லை
என்று புறம் பேசியும்
திருப்தியடையார்கள்!என் முகவாடலுக்கு
கதை வசனம் எழுதி
அவர்களுடைய
அறியாமைக்கு தீனிபோட்டு
கவனிக்காதே போகிறார்கள்
என் நேர்மறையான எண்ணங்களை!

"உன் வாழ்க்கை புத்தகத்தில்
நீ தொலைத்த
பக்கங்களின் கூச்சல்
உன் வார்த்தைகளில்
தொனிக்கிறது" என்று சொல்லி
அலசுகிறார்கள்
திறக்கப்படாத என்
வாழ்க்கை புத்தகத்தின்
முத்திரை போடப்பட்ட பக்கங்களை!

என் வார்த்தைகளின் தொனி
என் இளைப்பாறல் அல்ல
மனிதமன மாற்றத்திற்காக!

Sunday, November 5, 2017

முகமூடியை கழட்டேனடா(டி)!

அணிகிறேன் முகமூடியை
உன் மனம் விழிக்காதிருக்கையில்
உன் உணர்வுகளுக்குள்
என் உணர்வு எட்டாதிருக்கையில்
நீ விழித்துணரும் வரை
கழட்டேனடா(டி) முகமூடியை!


முன்னொன்றும் பின்னொன்றும்
முகம் காட்டும் உன் முன்
இருந்துவிட்டு போகிறேன்
கோவக்காரியாய்!

உன்னை நீயே பலவீனமாய்
காண்கையில் ஏற்க இயலா
உன் இயலாமை முன்
இருந்துவிட்டு போகிறேன்
தகுதியற்றவளாய்
என் முகம் காட்டேன் நான்!


பலமானவள் என்றெண்ணி
தோழமையாய்
தலை சாய்க்கையில்
உனக்கு ஆறுதலுண்டென்றால்
என் முகம் காட்டேன் நான்!

தேடும்போது கரம் நீட்டாது
வீரம்காட்டும்
உன் ஆணவத்தின் முன்
என் உணர்வுகளுக்குள்
வேட்கை துளிர் எத்தனித்ததை
காட்ட என் முகமூடி கழட்டேனடா(டி)!

உன் விலா என் வித்தென்பதால்
உன் விரல் நீட்டலுக்கு
காரணமில்லாதிருந்தும்
விடை கேட்கும் உன் முன் 
என் நிஜமுகம் காட்டேன் நான்!

என் முகம் காண
நீ விரும்பாதிருக்கையில்
நானும் கழட்டேனடா(டி)
என் முகமூடியை
இருந்துவிட்டு போகிறேன்
வீம்புக்காரியாய்!


கொடுக்கப்பட்டதென்று 
என்னை கண்டதால்
எடுத்துக்கொள்ள
அதிகாரம் கொடேன் நான்,
தேடிக்கொள்ளப்பட்டதென்று
உணரும் வரை
கழட்டேனடா(டி) முகமூடியை!

Saturday, October 21, 2017

சிறகுகள் விரிக்கிறேன்! (மீதமாய் போவேனோ நானும்! - பகுதி-2)

         


          இதோ விரிக்கிறேன் என் சுதந்திரச் சிறகுகளை.. படித்தது கணினிப் பொறியியல் என்றாலும் என் இயல் என்னவோ அத்துறையின் வேலைவாய்ப்பில் விருப்பமில்லாதது.  ஆனால் நிஜம் என்னவோ தேவைப்பட்ட நேரத்தில் தேவையானதை தேவை இல்லாதவர்களுக்கே கொடுக்கும் காலம். தேவையான நேரத்தில் கிடைக்கப்பெற்ற என் துறையின் வேலை தேவையற்றதாய் போனதெனக்கும் கொஞ்ச நாட்களிலேயே. அதில் பெரும் வருத்தமும் உண்டு சந்தோஷமும் உண்டு. சந்தோஷம் என்னவெனில் "எதை நீ அடைய வேண்டும் என்று ஏங்கித் தவிக்கிறாயோ அதை நீ அடைவாய்" (என்று எங்கோ படித்தது அடிக்கடி நினைவு கூறுவதுமானது) இவ்வாறே ஏங்கித் தவித்து அடைந்தேன் விரும்பிய வேலையை.
    கண்களை மூடியபடி எப்பொழுதும் தாயின் அரவணைப்பில் மயங்கிக்கிடப்பது போலத்தான் பள்ளி கல்லூரிக்காலம்! மனது விழித்தெழும்போது நாம் எதிர்நிற்பது சமூகம் அன்றி வேறேதுமில்லை  என்றறிகையில் மீதமாய் போனேனோ நானும் என் கல்லூரிக்காலங்களின் நினைவில்!
        கற்றதை எண்ணி திகைத்து சுய தகுதியை காட்ட காத்திருக்கையில் எல்லாம் அர்த்தமின்றி போனது, படித்தது போதுமானதாயிருந்தது சம்பாதிக்க ஆனால் மீண்டும் குழந்தையாக வேண்டியிருந்ததே வாழ்க்கை பாடத்தை கற்க என்ன செய்வது மீண்டும் பள்ளியா??

 
     கல்லூரிக்கருவறைக்கு விடை கொடுக்கும்போதே அறிந்தேன் தனி மனித சுதந்திரம் துளிர்விடுவதை! இங்கு திராணி வேண்டும் மறக்கவும் மன்னிக்கவும், தொலைத்தாக வேண்டும் கோபத்தையும் வெறுப்பையும், கசப்பானதாய் இருந்தாலும் உட்கொண்டே ஆக வேண்டும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும், இங்கு பள்ளிகள் வேறுபடலாம் ஆசிரியர்கள் வேறுபடலாம் பாடம் ஒன்று தான்!
       இங்கு தேர்ச்சிபெற்றவர்களும் உண்டு தோற்றவர்களும் உண்டு நான்  இப்போதும் நடு பெஞ்சு தான்! இங்கு கற்றல் நாட்களை விட தேர்வு நாட்கள் தான் அதிகம் ஒவ்வொருநாளுமாகவும் இருக்கலாம். தேர்வின் பிழைகளிலேயே கற்க வேண்டும். இங்கு நமக்கு சொல்லிக்கொடுக்க சில நேரம் ஆட்கள் இருப்பார்கள் ஆனால் கேட்க நம்மிடம் மனது இருக்காது காப்பி அடிக்க கௌரவம் தடை போடும். ஆனால் கற்றே ஆக வேண்டும் மனிதத்தையும் மனித இயல்பையும்! படிக்காமல் போனாலோ காலம் கடந்து திரும்பி பார்க்கையில் ஒன்று நம்மை தொலைத்திருப்போம் அல்லது பலரை இழந்திருப்போம்!  மீதமாய் போவேனோ நானும் என் கனாவை செதுக்க கற்றலின் காதலில்! கற்கிறேன் கடக்கிறேன் ஒவ்வொரு நாளும் காதலாய்!


மீதமாய் போவேனோ நானும்! - பகுதி-1 -ஐ  படிக்க..

Thursday, October 19, 2017

எனது பொழுதுகள்!


கருவறை தாண்டி
மடியறை தவழ்ந்து
வகுப்பறை புகுந்து
வகுக்கப்பட்டதில் பதப்படுத்தப்பட்டு
நேற்றைய வாழ்க்கையின்
எல்லைக்கு அப்பாற்பட்ட
எனது கனவுகளை
செதுக்கி உயிர் கொடுக்க
நாளை நாளை என
நான் கடத்தும் இன்று!

Saturday, October 14, 2017

நிழல்!

யார் இருந்தாலும்
இல்லையென்றாலும்
நீ மட்டும் என்னோடு!சில நேரம் 
என் முன்னே சென்று
என்னை தாங்கிப்பிடிக்கிறாய்!
சில நேரம் 
என் பின்னே வந்து
என்னை கடக்கச்செய்கிறாய்!
சில நேரம் என்னில
தஞ்சம் கொள்கிறாய்!
சில நேரம் 
என் தோள் சாய்கிறாய்!
சில நேரம்
என் கரம் பிடித்துக் கொள்கிறாய்!
பிறர் காணும் பிம்பமாய்
நீ இருந்தாலும்
பிறர் காணா 
என் உணர்வுகளை
நீ மறைப்பதும்
விடியலில் என்னைக் காண
காத்திருக்குதலின் இருளில்
உன் மௌனமும் கொஞ்சம் அழகு! 
என் நிஜமெனக் காண்கிறேன்
உன்னை!

Friday, October 6, 2017

மௌனம்!அலைகளின் ஓசையில் சேகரித்து
உன்னை காற்றின் இசையில் கலந்துவிடுகிறேன்!
வாழ்க்கையை படிக்கிறேன்
உன் ஆர்பறிப்பில்!

உருகும் மெழுகுவர்த்தியின்
ஈரம் காயும் முன் உன்னை
கொள்ளை கொண்டு
இலகச்செய்கிறேன்
காற்றுக்கிசைந்தாடும்
திரி நெருப்பில்!

மழலையின் விழியில் விழுந்து
அம்மாவின் நெற்றி முத்தத்தில்
மீள்கிறேன் உன்னோடு!

பயத்தின் ஆழத்திலும்
சந்தோஷத்தின் உச்சியிலும்
முகர்ந்து சுகித்து
இரவின் இருளில்
சில்வண்டுகளின் சினுங்களிலும்
எறும்புகளின் ஆடல் பாடல்
கலாட்டாக்களிலும்
சிலிர்த்து சிலாகிக்கிறேன்!

தோள் சாய்கிறேன்
காத்திருப்பின் கூச்சலிலும்
தாகத்தின் வறட்சியிலும்!
உணர்ச்சிவசப்படுகையில்
அசட்டை செய்து
தாழ்மையினால் ஆட்கொள்கிறாய்
ஊன்றி நிற்கையில்!

விடியலில் வெகுண்டெலும்
உன்னுள் விதைவிதைத்து
இரவு தலை சாய்க்கையில்
என் நாட்களை
அருவடையும் செய்கிறேன்!
மௌனமே என்னை ஆட்கொள்!

Saturday, September 30, 2017

மனமே கேளாயோ!

மனமே நீ கேளாயோ! கேள்!
அவன்  கேட்பான் நீ உரக்கச்சொல்!


மூடன் என்பான்
மனிதம் என்று சொல்!
கர்வம் என்பான்
சுயமரியாதை என்று சொல்!
மறந்தாயா? என்பான்
மன்னித்தேன் என்று சொல்!

மறைக்கிறாயா? என்பான்
நடுநிலை என்று சொல்!
வேரறு என்பான்
அஸ்திபாரப்படு என்று சொல்!
வலி என்பான்
பாடம் என்று சொல்!

போதும் என்பான்
தாகம் என்று சொல்!
பிழைக்கத்தெரியாதவன் என்பான்
அறம் என்று சொல்!

தோல்வி என்பான்
தொடக்கம் என்று சொல்!
முடிந்தது என்பான்
அறைப்புள்ளி என்று சொல்!

பிழை என்பான்
கற்றல் என்று சொல்!
தேறினவன் என்பான்
பக்குவம் என்று சொல்!

அடிமை என்பான்
பற்று என்று சொல்!
அவன் உன்னை கண்டான்!

அனுமதியாதே மனமே,
சாளரத்தினூடே நுழைந்து
உன்னை பற்றிக்கொள்ள
அனுமதியாதே!

சில பக்கங்களை மறைத்துவை
உன் வெற்றியில்
அவை வெல்லட்டும்!

தர்க்கங்களில்
வார்த்தைகளை தேக்கிவைத்து
உன் வாழ்க்கையை
வரைந்துகொள்!

பிழையற்ற சித்திரமாய்
உன்னைக்கண்டு
அவன் மனம் சிறைப்பட்டிருக்க
அறிவான் அவனும் தான்
அவனில் ஒருவன் என்று!

அவனை சமூகம்
என்று சொல்லாதே,
உன்னில் ஒருவன்
என்று சொல்!

Saturday, April 1, 2017

பதில் வேண்டி!


அகண்ட உலகம்
விரிந்து கிடக்கும் வானம்
பறந்து விரிகிற மனிதகுலம்
அதில் தொலைந்து போகிற
மனிதம்!சிசுவாய்  நான்!
விழித்துக்கிடந்து இருளறைக்குள்
விடியலை தேடும் முன்
என்னை கனித்தறிந்து
கருவறுக்க நிந்திக்கும்
மனிதக்கரையானுக்கு வாழத்தவிக்கும்
கருவாய் தெரியாது போனேனோ நான்!

மழழையாய் நான்!
விழித்தெழாத கனவுகளோடும்
ஆசைகளோடும்,
என்னவென்று அறியாது?
ஏனென்று அறியாது?
அரவணைப்பால் கைதுப்பட
ஏங்கிக்கிடக்கையில்
பணத்திற்காக விலைப்பொருளாய்
போனேனோ நான்!

தீண்டப்படாதவனாய் நான்!
விழித்திருந்தும், விடையறிந்தும்
விலக்கிவைக்கப்பட்டு
உரிமைகள் இன்றி
உணர்வுகள் அறுக்கப்பட்டு
ஜாதிக்கு தீனியாய் போனேனோ நான்!

பெண்ணாய் நான்!
உன்னிலிருந்து வந்ததவள்
என்பதால் என்னவோ
உன் கீழ் இருப்பதாகவே
தெரிவித்து வளர்க்கப்பட்டு
உன்னால் வதைக்கப்பட்டு
வாழ்க்கையிழந்து போகையில்
ஒரு பொழுதேனும் உனக்கு
உணர்வுள்ள உயிராய் தெரியாது
போனேனோ நான்!

ஏழையாய் நான்!
பணமின்மைக்கு அப்பால்
விலகாத பார்வைக்கு
எழனப்பார்வையை
எதிர்த்து எத்தனிப்பவனாய்
தெரியாது போனேனோ நான்!

இயலாதவனாய் நான்!
இருந்தும் இல்லாதவர்களுக்கு
மத்தியில் என்னிடம்
சிக்கிக்கொண்ட இழப்புகளை
நிறை செய்ய போராடுபவனாய்
தெரியாது போனேனோ நான்!

நான் நானாக இருக்க
பதில் தேடி சுற்றித் திரிகையில்
பைத்தியமாயும் போனேனோ நான்!