விழிமூடாதிருக்கும்
பதின் பருவத்தின்
மிரட்சி நான்!
எண்ணங்களில் சூடேற்றி
மனதை ரணமாக்குகிற
தனிமை மட்டும் என்னோடு!
அன்று ஒருவேளை
அன்னை கடிந்திருந்தால்
தகப்பனின் அணைப்பில்
ஆறுதலாய் கற்றிருப்பேன்
கடிதல் அறிவென்று!
தந்தை கடிந்திருந்தால்
தாயின் மடியில்
தஞ்சமிட்டு அறிந்திருப்பேன்
கடிதல் பொறுமையை
கற்பிக்குமென்று!
நாம் இருவர் நமக்கு ஒருவர்
திட்டத்தில் இழந்த
உடன்பிறப்போடு வாதிட்டிருந்தால்
கண்டிருப்பேன் கடிதல் அன்பென்று!
நவீன உலகின் வேகத்தில்
தகுதியற்றவர்களாய் ஒதுக்கப்பட்ட
தாத்தா பாட்டியோடு இருந்திருந்தால்
உணர்ந்திருப்பேன் கடிதல்
வாழ்க்கையை செதுக்குமென்று!
அனாவசியமென்று
தொலைத்த சொந்தங்களோடு
ஒரே கூட்டில் அடைபட்டிருந்தால்
அறிந்திருப்பேன்
சின்ன சின்ன அவமானங்கள்
மனதை பக்குவப்படுத்துமென்று!
நான்கு சுவர்களுக்குள்
அடைபட்டு கைப்பேசிக்குள்
உணர்வை தொலைக்காது
இருந்திருந்தால் நான்
மனிதமேனும் கற்றிருப்பேன்!
நண்பர்களோடு சுற்றி திரிந்து
சண்டையிட்டு பகிர்ந்து
உறவின் அன்பை உண்டிருந்தால்
ஒருவேளை இன்று
நிதானித்திருப்பேன்!
ஆசிரியரின் கடிதல்
அத்துமீறல் என்று சொல்லப்பட்டு
அது அவமானம் என்று
திரை போட்டு காட்டி
மனிதத்தை திருடி
குரோதத்தை விதைக்கும்
முரண்பாடான உலகில்,
கடிதலும் அவமானமும்
மீளமுடியா படுகுழி
என்று சொல்லும்
என் எண்ணங்களை
அடக்கி ஆண்டு
வாழ்க்கையை மீட்டுக்கொள்ள
நிதானமும் பொறுமையையும்
கற்க ஒரு பள்ளியுண்டோ ?